Pages

Sunday, 24 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 36

பக்கம்  33

புலந்திரன் 
கலந்தாரி கோட்டையைக் 
காண்கிறது

மேலாய்ப் பறந்தது வேந்தனது வான்புரவி

காரிழையாள் மாது கலந்தாரி கோட்டைகளாம் 
கற்கோட்டை முத்திரையும் கர்னரது காவல்களும்
 
ஆழ மணல் பறித்து ஆகாயக் கோட்டை கட்டி 
சுற்றி மதில் எழுப்பி சூரியனைக் காணாமல் 
அஷ்ட மதில் எழுப்பி ஆதித்தனைக் காணாமல் 

வாசல் பதினெட்டும் வைத்திருக்கும் காவல்களும்
விழித்த கண் சிமிட்டாத மெல்லியற்குக் காவல்களாம் 

தாமக் குழலாட்கு தலையாரி ஓடிவந்து 
நாகசுரம் ஊத நல் கவரி கொம்பு ஊத 

கூடம் முழங்கவே குல வீரர்கள் சூழ 

கொக்கரித்து நாற்றிசையும் கூத்தாடிப் பாடிவர 
ஆர்ப்பரித்து ஓடிவந்தார் அன்ன நடையாட்கு

கண்டார் புலந்திரரும் கண்கள் ரெண்டும் கொள்ளாதே 

இது 
மாமன் காவல்களோ வைத்த வரிசைகளோ 
என்று நகைத்து இந்திரரும் பார்த்திருந்தார் 

சொக்கர்
பிராமணர் போல் வந்து 
கர்னருக்குச் சொல்வது

மாலை முடியானும் வருவதற்கு முன்பாக

சோலை மலருடைய சொக்கரும் அப்போது 
பஞ்சாங்க வேதியன் போல் பரமன் வடிவெடுத்து 

மன்னர் கருணர் முன்பு மறையவர் போலே வந்து 

ஆள் வருதாய் காணுது அதி கருண வீரியரே
பத்திரம் என்று சொல்லி பரமனும் போய் மறைந்தார்

சொல்லியே போய் மறைந்தார் சொக்கரும் அப்போது 

கர்னர் 
கலந்தாரி கோட்டை 
வருகிறது

அத் தேச நாடு ஆளும் அதிகர்ன வீரியரும் 
காரிகையாள் மாது கலந்தாரி கோட்டை வந்தார் 

எண்ணவொண்ணா மகாசேனை எண்பத்து எண்ணாயிரம் பேர்

உருவின ஆயுதத்தை உறையிலே போடாமல் 
விழித்த கண் சிமிட்டாமல் மெல்லியரைப் பார்த்திருந்தார் 

தரும முடியானும் தலைவாசல் வந்து நின்று 
அத்தண்ட காவலரை அதிகர்னர் தான் பார்த்து 

அந்திப் பொழுதிலே ஐயர் வந்து சொன்னாரே
காவலர்கள் வீரியரே கண்ணுண்டாய்ப் பார்த்திருங்கள் 

திட்டங்கள் சொல்லியே திரும்பும் அந்த வேளையிலே

கர்னர் 
கலந்தாலிக்கு 
நடன சேர்வை
வைத்தது 

சுந்தரப் பூ முடியாள் தூக்கம் வருகுது என்று 
கேளிக்கை வேண்டும் என்றாள் கிளிமொழியாள் நாயகமும்

அப்படியே நல்லது என்று அங்குராய சீர் கருணர்

நட்டுமுட்டு நாடகங்கள் நலமுடனே அனுப்பி வைத்தார்

சதுர் தீர்ந்து கொலு அதனில் தானமர்ந்தார் கொலுவதனில்
அப்போது மாதருக்கு ஆடலும் பாடலும் 

பதினெட்டு மேளமும் பண்பாகத் தான் முழங்க 
சிற்றிடையாள் மாதர்கள் சிலம்பு கலகல என 

ஆடலும் கூத்தும் அரம்பையர் நாடகமும்
நாடகமும் கூத்தும் நடு நடுவே சிந்துகளும் 
ஆடாத கூத்துகளும் ஆடினார் ஆயிரம் பேர் 

கேளிக்கை பார்த்திருந்தாள் கிளி கவள வாயாளும் 

புலந்திரன்
ஆகாயத்தில்
அதிசயப்படுகிறது 

ஆடல் பாடல் சத்தம் ஆகாயம் தான் கேட்க 
பெண்கள் குரலோசை புலந்திரற்குக்  கேள்விபட 

கோட்டையில் கேட்கிறது கொம்பனையாள் இருப்பிடமோ
தேவடியாள் சந்தடியோ தேன்மொழியாள் வாசலிலே
காது உற்றுக் கேட்டிருந்தார் கனத்த புரவியின் மேல் 

காந்தாரிக்குச் 
சொக்கர் 
சொப்பனம் 
சாதித்தது

மாலை முடியானும் வருவதற்கு முன்பாக 

சோலை மலருடைய சொக்கருமே ஏது சொல்வார் 

பஞ்சாங்க வேதியன் போல் பத்தினியாள் பக்கம் வந்து
மாது நித்திரை செய்கையிலே மறையவர் போலே வந்து 

மங்கையரே உன்னுடைய மணவாளன் வந்தான் காண்
வந்தான்காண் என்று சொல்லி மாயமாய்ப் போய் மறைந்நதார்

வாசற்படி தனிலே மன்னன் நிற்கக் கண்டாளே 
ஏறிட்டுப் பார்த்தது போல் இந்திரனார் வடிவை 

அலர் தாமரை நிறமும் ஆர் பவளச் செவ்வாயும்    
மார்பில் பதக்கமும் வச்சிதமணித் தாழ்வடமும் 
காதில் மணியழகும் கட்டழகன் ஒப்பனையும் 
உத்தமர்கள் புத்திரன் தன் உறுமாலைக் கட்டழகும் 

ஒருவர்க்கு ஒருவர் உளம் துடிக்கப் பேசினதும் 
உற்றார் உறவுகளும் உறவு முறை கட்டளையும் 

மாணிக்க மெத்தையிலே மன்னவரும் சென்று ஏறி
வெற்றிகள் தின்று விரும்பி விளையாடினதும் 
தக்கோலம் தின்று தழுவி விளையாடினதும் 

மாது விடை இல்லாமல் மன்னன் எழுந்திருந்து
போனால்-போல் கண்டு ப்பொற்கொடியும் கண் விழித்தாள் 

சொர்ப்பனம் கண்டதல்லால் சுந்தரரைக் கண்டதில்லை

என்
ஜொன்மம் அழியும் மட்டும் சிறை இருக்க நீதி உண்டோ

வண்ணம் சிறை இருக்க வைத்தீர் மகாதேவர் 
இச்
சிறை காக்க என்னை ஈஸ்வரரே வைத்தீரே 

மைத்துனரைத் தான் நினைத்து மாது மனம் தான் உருகி

எக்காலம் செல்லுமோ இந்திரரை நான் காண
 
கண்ட கனவையெல்லாம் காரிழை தன்னுள்ளே
தோழிமார் தன்னுடனே சொன்னோமேயாமாகில் 
எந்நாளும் இந்நினைவே என்பார்கள்  ஏந்திழையார் 

தாமக் குழலாளும் தன்மனதில் தான் அடக்கி

வேல்பொருதும் கண்ணாளும் விசாரத்துடன் படுத்தாள்

(தாதிமார் வேறு மண்டபத்தில் படுத்தது)      

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல் 


No comments:

Post a Comment