பக்கம் 28
புலந்திரன் புரவி மேல் போனது
அந்நேரம் இந்திரனார் ஆகாய மார்க்கத்திலே
ஆகாயமாய்ப் பறந்து ஆணழகன் வான்புரவி
மதுராபுரி கடந்து வைகை வளநாடு விட்டு
வனமாய் வனம் கடந்து மலைக்குகைக்கள் தான் கடந்து
கூடல் வளநாடு குலவீரன் தான் கடந்து
தருமாபுரம் காண்கிறது
தாமரை சூழ் அல்லிமகன் தர்மபுரம் கிட்டினனே
அத்திபுரத்தை அடுத்தான் அலைதாரன்
எத்திசையும் தோப்பும் எதிர்மலர்க் காவுகளும்
நாற்றிசையும் தோப்பும் நல்ல மலர்க் காவுகளும்
கொண்டாடிப் பூர்க்கும் அந்த குங்கும வெண் தாடை
நெடு நீலம் கோங்குவளை நீலவர்ண கஸ்தூரி
பூ மரங்கள் அத்தனையும் பூரித்துச் சொரிந்தனவே
மந்தாரை புன்னைகளும் மருவோடு இருவாட்சி
மல்லிகை முல்லை வாய்த்ததொரு செண்பகம்
வாழுகின்ற புன்னை மரம் மாதும்பூ வாசனையும்
திருவழகு சோலைகளும் தெய்வ உலகம் போல்
கண்டான் புலந்திரனும் கண்கள் ரெண்டும் கொள்ளாதே
இத்தனை நாட்டையும் இளவரையான் தான் பார்த்து
இப் பெரிய நாட்டை விட்டு எங்கு ஒளித்தார் ஐயன்மார்
எந்த வனக் காடு உறைந்தார் என்னுடைய ஐயன்மார்
மாயத்தால் சூதாடி மண் இழந்தார் பாண்டவர்கள்
கட்டழகன் இந்திரனும் கண்களால் முத்து உதிர்த்தான்
பூ மரங்கள் அத்தனையும் புலந்திரன் தான் பார்த்து
பஞ்சவர்கள் கோமானும் பார்த்தரது மகனும்
வந்தாரே இப்பொழுது மச்சினியாள் கோவிலுக்கு
என்னத்தை நாம் கொடுத்து இந்திரரைக் காண்கிறது
பூவாலே பச்சைவடம் புலந்திரனைக் காண்கிறது
கொண்டுவந்து போர்த்தினார் கொற்றவர்கள் இந்திரற்கு
பூமரத்தைப் பார்த்து புலந்திரனும் கூறுகிறான்
காவலர்கள் பஞ்சவர்கள் காடு உறைந்து போயிருக்க
வண்டார் குழலாளும் மயிர் விரித்துப் போயிக்க
ஆர் முடிக்கப் பூத்தீர்கள் அழகிய பூ மரமே
தாதியர் தான் முடிக்க சார்பாகப் பூத்தீரோ
மாற்றான் முடிக்கவோ வந்து மலர் செரிந்தீர்
பூ மரங்கள் கூறும் புலந்திரனைத் தான் பார்த்து
ஐயாவே நீர் கேளீர் அடியேன் விண்ணப்பமதை
மாலை முடி பாண்டவர் வனவாசம் போன அன்றே
காவலர்கள் பாண்டவர்கள் காடுறைந்த நாள் முதலாய்
தக்க புகழுடைய தருமர் வனம் போன அன்றே
வண்டார் குழலாள் மயிர் விரித்துப் போன அன்றே
நல்ல மழையும் இல்லை நாட்டில் விளைவும் இல்லை
செந்நெல் விளைவும் இல்லை தேசம் செழிப்பும் இல்லை
பூவுகள் மலர்ந்து பூ மரங்கள் பூவாது
ஆவும் கறவாது அரும்பாவிப் பட்டணத்தில்
வெள்ளியும் தெற்கு அடைந்து வேந்தனும் போய் மறைந்து
கன்னியும் கால் மறந்து கடலும் திசை மாறி
பாழாய் இருகுதையா பட்டணங்கள் அத்தனையும்
வேந்தர் பெருமானே மலராக நாமிருந்தோம்
மாலை முடியானே வருகிறது நாம் அறிந்து
இப்போது இலை துளிர்த்து இந்நேரம் பூர்த்தோம்
வருகிற நாள் அறிந்து மலர் சொரிந்தோம் மன்னவனே
வருவதற்கு முன்னமே மன்னவரே போவோமே
போரஞ்சா வீரன் புலந்திரனும் கூறுகிறான்
ஓட்டினார் பன்னிரண்டு வருஷம் உத்தமர்கள் பஞ்சவரை
மாலை முடி பாண்டவர் வருநாளும் வந்தாச்சு
ஆளுவார் பாண்டவர்கள் மாளுவார் நூற்றொருவர்
நம்மதே நாடுகளும் நமக்குத்தான் ராராச்சியமும்
ஏதுக்கும் அஞ்சாதே இரும் என்றார் மன்னவரும்
அப்போது பூமரங்ககள் அழகு மெத்தை தான் போல
புஷ்ப மெத்தை சோடித்து புலந்திரற்குத் தான் கொடுக்க
தருமபுரத்தில் அதிசயம் காண்கிறது
அப்பால் திரும்பி ஆணழகன் வருகையிலே
அக்காட்டில் வீற்றிருக்கும் அன்னமும் தாராவும்
மானும் கலையுமே மயிலும் குயிலினமும்
சித்தானைக் கன்றுகளும் சிறுத்தை புலி குட்டிகளும்
காட்டானை கன்றுகளும் கரடி புலி சிங்கங்களும்
பாடிப் பறந்து வரும் பஞ்ச வர்ண கிளிகளும்
ஐந்து தலை நாகமது ஐவர் திருமகற்கு
மாணிக்கம் மின்னவே மணி விளக்கால் கொண்டு வந்து
முத்து முடிமன்னன் முன் கையில் ஏறுதுகாண்
மகாமிருகம் அத்தனையும் வந்து எதிரே கண்டது
வந்து எதிர் கண்டதை மன்னவனும் தான் பார்த்து
போரஞ்சா வீரன் புலந்தினும் கூறுகிறான்
என்னமாய் இருந்தீர்கள் இத்தனை நாள் இவ்விடத்தில்
பாண்டவர்கள் போனபின்பு பாலாமிர்தம் போதாதோ
தாயாதி வாசலிலே சத்துருவின் வாசலிலே
பகையாளி வாசலுலே பாலாமிர்தம் உண்டீர்களோ
என்று இவர் உரைக்க இயலான மிருகம் எல்லாம்
மகா மிருகங்கள் கூறும் மன்னன் முகம் நோக்கி
மாலை முடி பாண்டவர்கள் வனவாசம் போன அன்றே
வண்டார் குழலாள் மயிர் விரித்த நாள் முதலாய்
நாங்கள்
ஒக்கக் குடியிருந்தோம் உத்தமரே எல்லோரும்
கோங்கு கரையிலே குடமலை நாட்டிலேயும்
அங்கங்கே சேர அமர்ந்திருந்தோம் எல்லோரும்
மாலை முடியாரே நீர் வருகிற சேதி கண்டு
காண விருப்பமுடன் பாவலரே வந்தோம் காண்
போரஞ்சா வீரன் புலந்திரனும் கூறலுற்றான்
அவன்
ஓட்டிய பன்னிரண்டில் ஒன்பதுதான் ஆச்சு
மூன்று வருஷம் இன்னம் முடிமன்னர் ஆளுவதும்
அப்பாலே வீமன் அவர்கள் திருமுடியை,
தெண்டுக்கு இரை கொடுப்பார் திரியோதிரன் படையை
நம்மதே நாடுகளும் நமக்கும்மாம் ராச்சியமும்
அஞ்சாது இருங்கள் என்று அப்புரம் தான் நடந்தார்
பாண்டவர்கள் அரண்மனை காண்கிறது
ஐவர் அரசாண்ட அரண்மனையைக் கிட்டினானே
கொற்றவர்கள் தங்கனது கொலுக்கூடம் காட்டினானே
தருமரது ஆதீனமும் சகலகலை ஆதீனமும்
வீமரது ஆதீனமும் விசயனார் ஆதீனமும்
நகுரது ஆதீனமும் சகாதேவர் ஆதீனமும்
மன்னவர்கள் ஆதீனத்தில் மாற்றானைக் கண்டானே
தருமரது ஆதீனத்தில் சண்டாளன் ஆள்கிறானே
பாண்டவர்களுடனே பகுந்து அரசாளாமல்
பாதி அரசு அவர் பங்கிட்டு ஆளாமல்
எதனாலோ காடுறைந்தார் என்னுடைய ஐயன்மார்
தருமத்தை எண்ணியவர் தரணி இழந்தார்கள்
புண்ணியத்தை எண்ணியவர் பூமி இழந்தார்கள்
அரண்மனையைப் பார்த்து அழகிய கண் முத்து உதிர்த்தான்
துரோபதை அரண்மனை காண்கிறது
தோரா வடிவழகி துரௌபதியாள் வாசலிலே
தையலது வாசலிலே தங்கப் பொன்னால் சமைத்து
நாணல் கொடி முறுக்கி நற்கொடியாம் முத்து அழுத்தி
பானுச் சுடரும் பசும் பொன்னாலே அடித்து
மாணிக்கத்தாலும் வைடூரியத்தாலும்
ஆய்ச்சி தலைவாசல் கண்டு ஆணழகன் வயிறு எரிந்து
மாளிகையும் இங்கிருக்க மண்டபமும் இங்கிருக்க
ஆண்ட மனைகளும் அரண்மனையும் இங்கிருக்க
எழுநூறு தாதியர்கள் இணைகவரி தான் வீச
முந்நூறு தாதியர்கள் முறை செய்து வந்து நிற்க
ஏறி இருக்கும் அந்த இட்ட சிங்காதனமும்
ஆச்சிமார் எல்லவரும் அடியாளை ஆளவந்தீர்
பரு கல் உறுத்தவே பரு மணல்கள் தான் உதிர
காடு தலை இழுக்க கன்னி துயில் முன்னிழுக்க
கானலிலும் வெயிலிலும் கதறி அவர் திரிய
எக் காட்டுக் குள்ளே இருக்கிறாள் என் தாயார்
ஆய்ச்சி தலைவாசல் கண்டு அழகிய கண் முத்து உதிர்ந்ததான்
இந்திரரும் அப்போது ஏங்கி அழும்போது
கொண்டு பறந்தது அப்போ குலவீரன் தன் புரவி
புலந்திரன் அத்திபுரம் காணுகிறது
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
No comments:
Post a Comment