பக்கம் 23
புரவியின் மகிமை
ஆதீனம் விட்டு இறங்கி அன்ன நடையாளும்
மாதா முன் நடக்க மைந்தரும் பின் நடக்க
சிங்காரத் தோட்டத்தில் சென்றாள் திருவணையும்
வான்புரவி தான் பிடித்து வைகை வள நாட்டியரும்
செம்பொன் நார் கடிவாளம் தென்னாடி கை பிடித்து
மைந்தர் புலந்திரரை வளநாடி தான் பார்த்து
பூமியிலே வாழுகின்ற புரவியைப் போல் எண்ணாதே
வை யாளி விரவு ஓடி வருவதெல்லாம் கண்டீரோ
கடிவாளம் கை விடாதே கட்டழகா கற்பகமே
அங்குபிடி கைவிடாதே ஆணழகா மன்னவனே
மாலை முடியானே வழிபிடித்து வாரும் என்றார்
மச்சினியைக் கண்டபின்பு வாராமல் இருக்காதே
வேந்தர் பெருமானே விடிய இங்கே வாரும் என்றாள்
அருள் அருளும் என் ஆச்சி அப்படியே ஆகுது என்று
புலந்திரன் புரவி மேல் நடப்பது
மறுபடியும் தெண்டனிட்டான் மாதாவின் சீர்பாதம்
புரவியைச் சுற்றி வந்து போக விடை வாங்கினானே
அங்குபடி கால் வைத்து ஆனந்த வாழ்மார்பன்
உத்தமர்கள் புத்திரனும் உதாரிச்சு ஏறினானே
ஏறினது கண்டாளே இந்திரரைக் காணாமல்
பிள்ளை இவள் காணாளே பெருமாள் புலந்திரரை
ஆகாயமாகவே அப் புரவி தான் பறக்க
அந்தர மார்க்கத்தில் அப்புரவி எழும்பினதே
அல்லியம்மாள் புலம்பல்
மைந்தரைப் போகவிட்டு வாடி மனம் தளர்ந்தாள்
போகமாட்டேன் என்றானே வலிய நான் போகமாட்டேன்
கர்னன் அறிந்தானோ காவலர்கள் கண்டாரோ
நூலால் கடுந்திரளார் நூற்றொருவர் கண்டாரோ
மாலை முடியானை வதைசெய்தாராமாயின்
மாளும்பனி ஒழிய மண்ணில் இருப்பதில்லை
பஞ்சவர்க்கு என்ன சொல்வேன் பாஞ்சாலிக்கு என்ன சொல்வேன்
வெற்றி மதயானை வீமருக்கு என்ன சொல்வேன்
அங்கவர்க்கு என்ன சொல்வேன் அருச்சுனர்க்கு என்ன சொல்வேன்
சோலை மலருடைய சொக்கரல்லோ செய்ததெல்லாம்
அவரிட்ட கலகமல்லோ யாதொன்றும் நான்றியேன்
அல்லி சொக்கநாதர் கோயிலுக்கு வந்தது
தண்டிகை தானிருக்க தையலரும் தானிருக்க
தானா வழி நடந்து தையலரும் அந்நேரம்
சோலை மலருடைய சொக்கருடை கோயில் வந்து
முக்கால் வலம் வந்து முடி வணங்கித் தெண்டனிட்டாள்
மைந்தர் புலத்திரற்கு வாட்டங்கள் இல்லாமல்
மன்னன் புலத்திரனார் வந்தாரேயாமாகில்
ஆலாத்திப் பெண்கள் அதிசயமாய் நான் தருவேன்
காடை வராகனும் மாணிக்க ரத்தினமும்
- காடை = நிறையளவு
செம்பொன்னின் முத்துகளும் சுவாமியே நான் அளிப்பேன்
தண்டில் வந்த பொன்னையெல்லாம் சங்கரனே நான் தருவேன்
கொண்டுவந்து நான் சொரிவேன் கோபுர வாசலிலே
மைந்தர் புலத்திரற்கு வல்வினை இல்லை என்று
திருவடியில் புஷ்பமது சேரவே தள்ளும் என்றாள்.
சொக்கர் மீனாட்சியை நோக்கிச் சொல்வது
சோலை மலருடைய சொக்கரும் தான் பார்த்து
அங்கயற்கண் நாயகியை அரனாரும் தாம் பார்த்து
கண்டாயோ மாதே நீ கயல் கண்ணாள் நின்ற நிலை
எத்தனை நேரம் மட்டும் இவள் நெஞ்சில் நின்றாலும்
பொற்றொடி மாதருக்குப் புஷ்பம் கொடுப்பதில்லை
அங்கயற்கண் அம்மாள் அவள் முகத்தைத் தான் பார்த்து
எல்லோருக்கும் கண்கள் இரண்டு என்றார் அட்சரத்தில்
தேங்காய்க்கு மூன்று கண் சேசத்தில் என்பார்கள்
ஓடமலர்க் கண்ணாட்கு ஒருகண்ணே உள்ளதுகாண்
பிறந்த கனி ஆனாள் பிள்ளை துணை வேணும்
அதனால் வருந்துகின்றாள் ஆரணங்கு இந்நேரம்
பொற்கொடியாள் மாதருக்கு புஷ்பமது கொடுக்க என்ன
சங்கரரும் அப்போதே சற்றே நகை நகைத்து
நங்கை பரிதாபம் தையலரே கண்டாயோ
வெட்டுவேன் குத்துவன் விலங்கிடுவேன் என்று சொல்லி
ஆக்கினைகள் செய்து அவனை இவள் போக விட்டாள்
எத்தனை நேரம் மட்டும் இவள் கெஞ்சி நின்றாலும்
பொய்கை வள நாடியர்க்குப் புஷ்பம் கொடுப்பதில்லை
மீனாட்சி சொக்கருக்குச் சொல்வது
அங்கையற்கண் அம்மை ஆதீனம் விட்டு இறங்கி
மகாதேவர் பாதமது வணங்கியே தெண்டனிட்டு
அங்கயற்கண் அம்மை அருகில் வந்து என்ன சொல்வாள்
ஆறாயிரவர்களும் அணி திரளாம் பாண்டியர்கள்
மாளுவோம் என்று மலையில் தவம் இருந்தார்
மாளாதே என்று மலரில் அவதரித்தார்
வீறாகச் செங்கோல் செல்வி செலுத்தி நின்றாள்
மன்னன் விஜயன் மடலூந்த மாதேவி
காளை விஜயனார் கட்டழகன் தேவி இவள்
சிறுவிரல் பாதம் ரண்டும் சிலம்புக்கால் கொப்பளிக்க
செண்பகப்பூ மேல் அடிகள் திருவினைக்குத் தானேக
என்னை நேரமாய் இளங்கொடியாள் கெஞ்சி நிற்க
- என்னை நேரம் = எத்தனை நேரம்
இப்படி இருக்க இது உனக்குத் தருமம் அல்ல
பொற்றோடி மாதுக்குப் புஷ்பம் அது கொடுத்தால்
சந்தோஷம் ஆயிடுவாள் தரும முடியழகி
சங்கரரும் அப்போது தயவாய் மனம் இரங்கி
சிவனாரும் அப்போது திருமுடியைத் தான் அசைக்க
ஏலக் குழலாளும் இருகையும் தான் நிறைய
வாங்கி மடியில் வைத்தாள் மதுரை வள நாடியரும்
சொக்கர் தன் பிள்ளைக்குத் துணை போனது
சொக்கரும் கூட துணை போக வேண்டும் என்றாள்
சிவனாரும் அப்போது தேவி முகம் நோக்கி
ஆர முளையாளே ஆளடிமை ஆனோமே
அது
சந்தோஷம் என்று சங்கரியும் தான் சிரித்தாள்
சொக்கரும் கூடத் துணையாகத் தான் போனார்
சந்நிதியை விட்டு சுவாமியவர் போனார்
தீர்த்தமும் நீறும் திருமாலைச் சந்தனமும்
கொண்டு எதிரே தந்தார் கொம்பு ஏர் இடையாட்கு
தீர்த்தம் தெளித்தார்கள் திருநீற்றுக் காப்பு அணிந்தார்
அல்லி கொலுவுக்கு வந்தது
சந்நிதியை விட்டுத் தையலரும் தான் நடந்தாள்
படித்துறையும் தான் கடந்து பாண்டிவள நாட்டாளும்
கோபுர வாசல் கொம்பனையும் தான் கடந்து
தென்னந் தெருவுகளும் தேரோடும் வீதி விட்டு
வாற்படி கடந்து மண்டபம் சென்று ஏறினாள்
தாமக் கருங்குழலாள் தாதி எதுரே வந்து
காலுக்கு நீர் கொண்டு காரிகைமார் ஓடிவந்தார்
கோவிலுக்குப் போய்வந்தேன் கொம்பனையே தாதிகளே
இதுகள் என்று நான் வேண்டேன் கொம்பனையே தாதிகளே
பாவை அழகியரும் பள்ளியறை போய் புகுந்தாள்
தழுவணையில் கை கொடுத்து தையலரும் வீற்றிருந்தாள்
அன்று முறையுடையோர் ஆயிரம் பேர் ஓடிவர
அத்தனைப் பெண்களையும் அனுப்பி விடை கொடுத்து
மல்லியர்கள் எல்லாம் விடைபெற்றுப் போன பின்பு
மங்கையரும் பள்ளிகொண்டாள் மாணிக்க மெத்தையிலே
விடிந்து வருவாரே வேந்தனையும் காண்பேனோ
வேல் பொருதும் கண்ணாள் விசனமாய்ப் பள்ளிகொண்டாள்
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
![]() |
| தழுவணையில் கை |

No comments:
Post a Comment