பிரமமும் உயிரும் ஒன்றே. பிரமம் ஒன்றே உண்மை. உலகம் பொய்; மாயை. இந்தக் கோட்பாடுதான் மாயாவாத மதம்.
மாயாவாதி மதம்
மாயாவாதத்தை நம்புபவன் கூறுகிறான்.
நானே பிரமம். உலகம் கானல்நீர் போல் பொய்த்தோற்றம். நிழல் போன்றது. மாயை. -- 220
பிரமம் என்பது அறிவு, அனைத்துக்கும் காரணம், எல்லாவற்றிலும் அருவாகவும் செறிவாகவும் உள்ளது. அழியாதது. சத்து. சுத்தம். குறி. குணம். வேதத்துக்கு அளவுகோல். பிரிவில்லாதது. -- 221
ஒரு சூரியன் எல்லாருக்கும் தெரிவது போல, பிரமம் எல்லாருடைய அறிவுமாக இருக்கிறது. -- 222
இரவில் பழுதைக்கயிறு பாம்பு போல் தோன்றும். அதுபோல் உலகம் நமக்குத் தெரிகிறது. இந்தத் தோற்றம் மாயை. -- 223
அவிகாரம், நிருவசநம் ஆகிய இரண்டு சொற்களும் இறைவனின் மாற்றமில்லா நிலையை உணர்த்துவன. மாற்றந்தான் உலகம். -- 224
சிலம்பி தன் வாயிலிருந்து நூலை உண்டாக்கி வலை பின்னி, தன் இரையை அதில் விழச்செய்து பாதுகாத்து வைத்துக்கொள்வது போல் இறைவன் உலகைப் படைக்கிறான். -- 225
பிரமத்தில் வான், வானில் வளி, வளியில் தீ, அழலின் வியர்வையாக நீர், நீரில் நிலவுலகம், மண்ணில் மருந்தும் சோறும் - உண்டாகின்றன. -- 226
இந்த ஆறு தாதுக்களால் ஆனது நம் உடம்பு. இதில் அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்று ஐந்து கோசங்கள் (சேமிப்பு மையங்கள்) உள்ளன. -- 227
இந்தக் கோசங்களில் பிரமம் இருக்கிறான். சூரிய ஒளிக்குப் பாசம் இல்லாதது போல இறைவன் கோசங்களில் இருக்கிறான். -- 228
மணியின் ஒளி அதனைக் கோத்து வைத்திருக்கும் நூலில் தெரிவது போல நம்மில் தோன்றுகிறான். -- 229
நாம் இறைவனுக்குப் பல பெயர் வைத்திருக்கிறோம். தோற்றம், நினைவு, கனவு, சுழுத்தி, துரியம் ஆகிய நிலைகளில் இறைவன் மாறி மாறித் தோன்றுகிறான். -- 230
நம் உடல் நமக்குக் கருவி. நம் உடலை ‘நான்’ எனல் பந்தம். பந்தம் விட்டது வீடு. உள்ளத்தில் விதை உண்டாகும். அது மாயச் செயல்களைச் செய்யும். இது அவித்தை. அவித்தை மாய்தல் ஞானம். -- 231
அன்றாடச் செயல்கள் அறமாக இருக்க வேண்டும். அந்தக்கரணம் (மன நினைவுகள்) தூய்மை பெற்றிருக்க வேண்டும். இது பிரமத்தை உணர்த்தும். -- 232
பிரமம் என்னும் அறிவு தன்னைத் தானே அனுபவிக்கும். ஊன், உயிர், உணர்வு ஆகியவற்றில் கலந்திருக்கும். வான் முதலாய பூதங்களில் மாயாமல் கலந்திருக்கும். -- 233
’தத்துவமசி’ என்பது வேத வாக்கு. அது நீ நான் என்பது இதன் தமிழ். அட்டாங்கயோகம் செய்தல் வேறு வகை. -- 234
மாயாவாதி மதத்துக்கு
மாறுபட்ட கோட்பாடு
சிவஞான சித்தன் சொல்கிறான்
காகம் கருமேகத்தின் தலையைப் பறித்து, அழும் தன் குஞ்சுக்கு ஊட்டி, பசியைப் போக்குகிறது - என்பது போல் பேசுகிறாய். -- 235
உன் பேச்சில் அநுபூதி (இறைவனை அனுபவித்துப் பூரிக்கும் நிலை) இல்லை. -- 236
சூரியன் வான நீரில் நீந்துகிறது - என்பது போல் பேசுகிறாய். -- 237
மனமே பிரமம் என்கிறாய். இதுதான் முயல்கொம்பு என்று கூறுகிறாய். -- 238
நூலில் மணியொளி என்று காட்டுகிறாய். பொன் கம்பியில் கோத்திருக்கும் பொற்காசின் ஒளியை நீ நினைக்கவில்லையே. -- 239
புற்றில் கிடக்கும் பழுதைக் கயிற்றைப் பாம்பு எனல் மனப் பிராந்தி. -- 240
உள்ளதும், இல்லதும், அல்லாப் பொருளும் பற்றிப் பேசுவார் உண்டோ? -- 241
ஐம்பூதங்கள் கலப்பதும் உண்டு. வெள்ளியின் வெள்ளை நிறத்தைப் பார்த்து இது சுத்தமானது என்று சொல்லமுடியுமா? -- 242
சிலம்பி வாயிலிருந்து மாயநூல் வருவது போல் இறைவன் உலகைப் படைக்கிறான். -- 243
உருவத்தில் பரம் வெளிப்படும் என நம்புகிற நீ ‘சத்திலே பிரமம் இருக்கிறது’ என்பதை நம்பாதது வியப்பு. -- 244
பரம் உடம்பில் பற்று இல்லாமல் நிற்கும் என்கிறாய். உடலில் நரை, திரை, நோய் தோன்றுகிறதே, ஏன்? ஆசையால். -- 245
பிரமம் ஒன்றே. அது வேறுபட்ட நிலைகளிலும் எல்லா யோனிகளிலும் நிற்கிறது. -- 246
பிரமம் உடலின் இன்ப துன்பங்களை அனுபவிக்காது எனல் பித்தன் உரை. -- 247
காந்தமும் இரும்பும் போல் பிரமம் உடலைப் பற்றிக்கொண்டிருக்கிறது.. -- 248
அமலனிடம் மலம் இருக்கிறது எனல் மருள். -- 249
விறகில் மட்டுமா தீ பற்றி எரிகிறது? -- 250
உன்னில் நீ இருக்கிறாய் (உனக்குள் உன் திமிர் இருக்கிறது) என்னும்போது நீ இரண்டு ஆகிறாய். -- 251
ஆரணங்கள் தரும் தத்துவம் ‘அசிபதங்கம்’. (பதப்பட்ட நிலை). காரணம் வேறு, நீ வேறு என்று நீ இரண்டு நிலை பெற்றிருக்கிறாய். நாரணனே பிரமன். இதை உணர்வதுதான் ஞானம். -- 252
அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் - சிவஞான சித்தியார் மூலம் பாடல் 252 முடிய.
No comments:
Post a Comment