கனியும் தமிழ்
💚
தெவிட்டா அருள் தேன்
கண்ட கண்கள் புனல் பாய,
களிப்பாய் உள்ளம் கரை அழிய,
விண்ட மொழியும் நாக் குழற,
விம்மி மேனி மயிர் பொடிப்ப,
பண்டை வசம் போய், பரவசமாய்,
பரமானந்தத்து ஒளி நறவம்
உண்டு தெவிட்டா அருள் புரிந்தான்
கருவை வாழும் உறவோனே
கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வர, உள்ளத்தில் களிப்பு பொங்க, உன்னைப் போற்றும் என் நாக்கு குழந்தை போல் குழற, விம்மிதம் கொள்ளும்போது மேனியில் உள்ள மயிர் நிமிர்ந்து நிற்க, என் பழைய நிலைமை மாறி பரமானந்தம் அடைகிறேன். அது உண்டால் தெவிட்டாத ஒளித்தேன்.
💚
செம்பில் களிம்பு
தோன்றியபோது உடன் தோன்றி
தோன்றாது மறத்து என்னை
ஆன்ற பெரும் செப்பில் உறை
களிம்பு போல் அகலாமல்
ஊன்று மலத் துகள் அகற்றி
உன் அருளும் பெறுவேனோ
மூன்று உலகும் தொழுது ஏத்தும்
முகலிங்கா முதல் பொருளே
செம்பாலான பாத்திரத்தில் களிம்பு ஏறுவது போல என்மேல் ஏறும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மலத்தை நீ அகற்றி, எனக்கு அருள் வழங்கும் பேறும் நான் பெறுவேனோ?
💚
தந்தையே
சிந்தனை உனக்குத் தந்தேன்
திருவருள் எனக்குத் தந்தாய்
வந்தனை உனக்குத் தந்தேன்
மலரடி எனக்குத் தந்தாய்
பைந்துணர் உனக்குத் த்தந்தேன்
பரகதி எனக்குத் தந்தாய்
கந்தனைப் பயந்த நாதா
கருவையில் இருக்கும் தேவே
தந்தேன்தந்தாய்
💚
பாலில் கொம்புத் தேன்
முன்னைப் பிறவித் தவப்பயனோ
முழுதும் அறியா மூடன் இவன்
என்னைக் கருதி இரங்கியோ
யாதோ அறியேன் இரவு பகல்
கன்னல் பாலில் கோல்தேனில்
கனியில் கனிந்த கவி பாட
அன்னத் தொகுதி வயல் கருவை
ஆண்டான் என்னை ஆண்டதுவே
கவி பாட என்னை ஆட்கொண்டதுமுன் பிறவியில் நான் செய்த தவத்தின் பயனோஏதும் அறியா மூடன் என்று என்மேல் இரக்கம் கொண்டு நீ அருளியதோ
வரதுங்கராம பாண்டியர், திருக்கருவை அந்தாதி
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 156
No comments:
Post a Comment