Pages

Tuesday, 10 March 2026

வாழ்த்திட நா உண்டு

🔰

வாழ்த்திட நா உண்டு
பாவிக்க நீ உண்டு
மண்ணில் உறத்
தாழ்த்திடச் சென்னியும் 
உண்டு கண்டாய் 
தண் களவின் மலர்
ஊழ்த்திட நீழல் உறைவார் 
அடி அண்டு உனை நிரயம் 
வீழ்த்திடுவார் உண்டோ 
நெஞ்சே என் மெலிவதுவே

கருவை சிவன் இருக்கும் களா மலர் நிழலில் வாழ்வார்க்கு எல்லாம் உண்டு. நிரயம் இல்லை. எதற்காகக் கவலைப்பட வேண்டும் 

 🔰


வழுத்துதல் போற்றல் 
வணங்கல் குழைதல் 
மகிழ்தல் நெஞ்சில் 
பழுத்த அன்புற்று,
பலகால் உருகுதல்
பாவனை போய் 
முழுத்த இன்பக் கடல் மூழ்கி,
களித்தல்  
முகலிங்கன் தாள் 
அழுத்த என் சென்னி 
கொடுத்த பின் 
பெற்றது அதிசயமே

கருவை சிவனை வாழ்த்துதல், அவன் புகழைப் போற்றுதல் முதலான செயல்களால் அவன் திருவடிகள் தன் தலைமேல் வைக்கப் பெற்றவர் பலப்பல இன்ப அதிசயங்களைக் காணலாம். 

🔰

கருத்து அறு மாயை 
இருளுக்குத் தீபம்
கழி பிறவிப்
பெருத்து எழு நோவுக்கு 
அமிர்த சஞ்சீவினி
பேதித்து உள்ளம்
வருத்திடு துன்பத் திரை
வாரிதிக்கு 
வடவை மன்றத்து
அருத்தியின் ஆடும் 
கருவைப் பிரான் 
திரு ஐந்தெழுத்தே 

கருவைச் சிவன் வடவைத்தீ எரியும் மன்றத்தில் ஆடுகிறான். என் மன-இருள் மாயையைப் போக்கும் ஒளிவிளக்கு அவன். என் பிறவி நோயைத் தீர்க்கும் மருந்து அவன். என் துன்பம் போக்கும் கடலலை அவன்.  

🔰

பாடுவது  உன் திரு நாமங்கள் 
நாள்தொறும் 
பத்தி செய்து 
சூடுவது உன்
திருவடித் தாமரை
தொண்டு செய்து
கூடுவது உன்
அடியார்க் கூட்டம் 
அக் கூட்டத்துடன் 
ஆடுவது உன் நிலை காண்
கருவாபுரி நாயகனே

கருவை சிவனே! நான் பாட்டுவதோ உன் பெயர். சூடுவது உன் அடியாகிய தாமரை. கூடியிருப்பது சிவனடியார் கூட்டம். என் வாழ்க்கை நீ தரும் நிலைப்பாடு. 

🔰

புகுவது மூப்பு 
வனப்போடு இளமையும் 
போயது இனி
மிகுவது தோயும் 
துயரும் என்றால் 
அடல் மேவலரூர்
தகுவதன் முன் எரித்தோர் 
கள ஈசரைத் தாம் பணியத்
தருவதுகாண் நெஞ்சமே 
இது போலும் 
சதுர் இல்லையே  

என் வனப்பும் இளமையும் போய் மூப்பு வந்துவிட்டது. இனி துயரந்தான். கள நிழல் ஈசன் தான் என் துயரரைப் போக்க வேண்டும். அவனே எனக்குச் சதுரப்பாடு.

வரதுங்க ராம பாண்டியர், திருக்கருவைக் கலித்துறை
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 158

No comments:

Post a Comment