Pages

Friday, 13 March 2026

மாணிக்கம் தித்திக்கில்

உயிர் இறந்த பொய்க்காட்டை உற்றார் எடுத்து 
வயிர விறகில் தீ மடுத்து - பெயர் அழியச்
சுட்டு  நீறாக்கும் முனம் சொல்வீர் கருவை முன்றில் 
நட்டமிடும் காலின் நலம். 

  • சாவதற்கு முன்னர் கருவை முன்றில் ஆடும் ஈசன் அடிகளைப் போற்று

தாரம் மனை மட்டும் தனை அறிந்தோர் ஊர் மட்டும் 
சேரும் உறவு அத் தெரு மட்டும் - சார்வது அன்றி
நம் கருவையான் என்ற நல்வினை போல் செல் கதியின் 
எங்கும் உதவாரே இவர். 

  • பிணமாகிச் செல்லும்போது மனைவி வீட்டு வாசல் மட்டுமே வருவாள்
  • தெரிந்தவர்கள் ஊர் வரையில் பிணத்துடன்  வருவர். 
  • உறவுக்காரர் தெரு வரையில் வருவர் 
  • செய்த நல்வினை எப்போதும் உயிரைத் தொடர்ந்து வரும். 

இமைப்பொழுதும் நீங்காது இரு கண்ணும் நெஞ்சும் 
கறைக் களமும் செஞ்சடிலக் காடும் - பிறைக் கொழுந்தும்
புண்டரிக வாள் முகமும் பூங்களவின் நீழலோன்
ஒண் தரளப் பொன் மூரலும் 

  • பூங்களவின் நீழலோனை எல்லா நேரங்களிலும் நினை.

சென்றது காலம் சிதைந்தது இளமை நலம் 
நின்றது சாவு என்று நினைந்து உருகி - மன்றில் 
நடிக்கின்ற பால்வண்ணன் நாமம் எண்ணா மாந்தர்
படிக்கின்ற நூல் எல்லாம் பாழ்.

  • காலம் கடந்து போயிற்று
  • இளமை போயிற்று 
  • சாவு வரப்போகிறது 
  • இந்த நிலையிலும் கருவைப் பால்வண்ணனை நினைக்காமல் வேறு நூல்களைப் படித்துக்கொண்டிருத்தல் வீண்.

வரதுங்க அவைக்களப் புலவர் ஒருவர் பாடிய பாடல். 

பூண் நித்திலத்துப் புய வீர மாறன் புகல் கவிக்கு 
நாணிப் புலவர் சொல்லாது என் செய்வார் இந்த நானிலத்தே
ஆணிக் கனகம் மணம் தரில் பூ மணம் யார் கொள்வார்    
மாணிக்கம் தித்திக்கில் என்னாம் மற்றை மதுரங்களே 

  • வீர மாறன் (வரதுங்கராமர்) சொல்லும் பாடல்களைக் கேட்டுப் புலவர்கள் தம் பாடல்களைச் சொல்லாமல் நாணுவர். 
  • தங்கம் மணந்தால் பூ மணத்தை விரும்புவரோ
  • மாணிக்கம் தித்தித்தால் பிற இனிப்புகளை விரும்புவரோ

வரதுங்கராமர் பாடிய திருக்கருவை வெண்பா அந்தாதி 100 பாடல்களில் ... 
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 161

No comments:

Post a Comment