Pages

Friday, 13 March 2026

கவிதைத் தொழும்பன்

வரதுங்கராமர் தன் தலைநகரம் கரிவலம்வந்த நல்லூரில் உள்ள சிவனைப் போற்றிப் பாடுகிறார்.


என் நெஞ்சில் வைத்ததற்கு  இனிய தவம் யாது செய்தேன். 
பொன் அம் சிலையால் புரம் எரித்த - முன்னவனே
அன்னம் பயில் குருவையானே அரவு தோழப்
பொன் அம்பலத்து ஆடும் பூ. 

முன்னவனே உன்னை என் நெஞ்சில் வைத்திருப்பதற்கு நான் எத்தகைய பெருந்தவம் செய்திருக்கிறேன்.

சிவ கருமம் செய்யார் திருநீறு சாத்தார் 
தவநிலையாம் சைவநெறி சாரார் - அவனி தனில் 
கான் பரந்த பச்சைக் களா நிழலைத் தாம் தொழார்
ஏன் பிறந்தார் மானிடராய் இன்று 

களா மரநிழல் சிவனுக்குத் தொண்டு செய்யாமல், திருநீறு அணியாமல், சைவநெறி சாராமல் வாழ்பவர் மனிதராக எதற்காகப் பிறந்தார்? 

பேறு பெற்றேன் வாழ்ந்தேன் பிறவிக்கு இனி அஞ்சேன்
ஆறுபெற்ற வேணியர்க்கு ஆட்பட்டேன் - நூறுமட்டம்
சந்தித்தேன் தெய்வத் திருக்களவைக் கை கூப்பி
வந்தித்தேன் தீர்ந்தேன் மயல். 

திருக்களா நிழல் வாழ்வானைக் கை கூப்பித் தொழுதேன். மயக்கம் ஒழிந்தது. பிறவி பற்றி எனக்கு இனிக் கவலை இல்லை.  

சேணில் கொடி நுடங்கும் தென் கருவை அம்மானே
கோணப் பிறை அணியும் கோமானே - பேணித் 
தொடுக்கும் கவிதைத் தொழும்பனுக்கு வந்த
இடுக்கண் களையாதது  என் 

நான் கவிதை பாடும் தொழும்பன். 

நன் கவிஞன் ஆக வியன் நா அளித்து நாள்தோறும்
தன் கழலே பாடும் தரம் அளித்தான் - நன்கு அவை வைத்த
சூலத்தான் தென் பொதியத் தொல்லோன் தொழுத மனக்
கோலத்தான் தென் கருவைக் கோ 

கருவைக் கோ தன்னைப்பற்றிக் கவிதை பாட எனக்கு நா அளித்தான்.

வரதுங்கராமர் பாடிய திருக்கருவை வெண்பா அந்தாதி 100 பாடல்களில் ... 
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 161

No comments:

Post a Comment