என்றும் அருணேசன் இரு பதத்தை நம்பாதார்
குன்றில் வனத்தில் குகைதனில் - சென்று
திரிந்தேன் கல மருந்து தின்று சில காலம்
இருந்தேன் இராமல் இருந்தேன்.
திருவண்ணாமலை அருணேசர் திருவடிகளை நம்பாமல் மலை, காடு, குகைகளில் இருந்துகொண்டு தவம் செய்வதால் என்ன பயன்?
எல்லார் பிறப்பும் இறப்பும் இயற்பாவலர் தம்
சொல்லால் தெளிந்தோம் நம் சோணேசர் - இல்லில்
இல்லில் பிறந்தமையும் கேளேம் பேருலகல் வாழ்ந்துண்டு
இறந்ததையும் கேட்டிலேம்
எல்லாத் தெய்வங்களுக்கும் பிறப்பு இறப்பு காட்டிப் புலவர்கள் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். திருவண்ணாமலை சோணேசுவரர்க்கு பிறப்போ, இறப்போ யாருக்கும் தெரியவில்லை
வன் பெருக்கில் கல் மிதக்கும் வாய் முதலை பிள்ளை தரும்
என்பு உருக் கொள் பெண்ணாய் இருக்ககுமே - அன்பருக்கு
நாட்டு குரு சோணகிரி நாதன் அடியார் மூவர்
பாட்டின் இசை கேட்ட பரம்
வெள்ளப் பெருக்கு வலிமையில் பாறாங்கற்களும் மிதந்து உருளும். அதுபோல, திருநாவுக்கரசரைக் கட்டிக் கடலில் போட்ட கல் அவர் பாடலைக் கேட்டுக் கடலில் மிதந்து வந்தது. சுந்தரர் பாடலைக் கேட்டு முதலை தான் விழுங்கிய குழந்தையைக் கக்கித் தந்தது. எரித்த பாவை எலும்பு சம்பந்தர் பாடலைக் கேட்டு உயிருள்ள பெண்ணாக மாறியது. எல்லாம் சிவன் பெயரின் மகிமை.
வெய்ய பிறவி தனை வேரறுக்கும் சோணகிரி
ஐயர் அடியார் பாட்டிற்கு அல்லாமல் - துய்யகரா
வாய்க்குள்ளே பிள்ளையும் தண் வாரிதியில் கல் மிதந்து
காய்க்குமோ ஆண்பனையும் காய்
சோணகிரி ஐயரைப் போற்றும் பாடல் முதலை தான் உண்ட பிள்ளையைக் கக்கச் செய்தது. கடலில் கல் மிதந்தது. ஆண்பனை காய்த்தது.
சும்மா கிடைக்குமோ சோணாசலன் பாதம்
அம்மால் விரிஞன் அறிகிலார் - நம்மால்
இருந்து கதை சொன்னக்கால் என்னாகும் நெஞ்சே
பொருந்த நினையாத போது.
ஆசையில் மூழ்கிக் கிடப்பவனுக்கு (திருமாலுக்கு எனலுமாம்) சோணாசலன் பாதம் தெரியாது. நெஞ்சே! அவன் கதைகளைக் கேட்காமல் அவன் நிலையை உன் உள்ளத்தில் கொள்.
வரதுங்கராமர் பாடிய நூல் அருணகிரி அந்தாதி. இதில் காப்பும் 100 பாடல்களும் உள்ளன. அவற்றுள் சில. மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 164
No comments:
Post a Comment