திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் நடந்தனவாகக் காட்டப்படும் வியத்தகு செயல்கள் பல.
3 வயது சிறுவன் பாடினான்
ஞானசம்பந்தர் மூன்று அகவைக் குழந்தையாக இருந்தபோது தந்தையுடன் நீராடச் சென்றார்.
தந்தை கோயில் குளத்தில் மந்திரங்களை மனத்துக்குள் சொல்லிக்கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் (அகமருடண செபம்) செய்துகொண்டிருந்தார்.
மகன் தந்தையைக் காணாமல் தோணிபுரம் கோயில் கோபுரச் சிலையைப் பார்த்து “அம்மே! அப்பா” என்று அழுதார்.
சிவன் உமையுடன் காளையில் தோன்றினார்.குழந்தைக்குப் பால் ஊட்டுமாறு பணித்தார்.உமை பொற்கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டினார்.எழுந்த தந்தை குழந்தை வாயில் பால் இருக்கக் கண்டு வெகுண்டு, “யார் கொடுத்த பாலை அருந்தினாய்” என்று அதட்டினார்.பிள்ளை கோபுரத்திலிருந்த உமையைக் காட்டிக்கொண்டு இந்தப் பதிகப் பாடல்களைப் பாடினார்.
தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண்மதி சூடிக்காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்தபீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.
தங்கத் தாளம்
ஞானசம்பந்தர் திருக்கோலக்கா என்னும் ஊரில் கைகளைத் தட்டித் தாளம் போட்டுக்கொண்டு “மடையில் வாளை” எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடினார்.அதனைக் கேட்ட சிவன் ஐந்தெழுத்து பொறித்த தங்கத் தாளத்தைத் தந்து அதனைத் தட்டிக்கொண்டு பாடுமாறு செய்தார்.
பாலை நெய்தலாக மாற்றியது
ஞானசம்பந்தர் அவரது தாயார் பிறந்த ஊர் நனிபள்ளி சென்றார்.அப்போது அது பாலைவனமாக இருந்தது.சம்பந்தர் “காரைகள் கூகை” எனத் தொடங்கும் பதிகம் பாடி, நெய்தல் நிலமாக மாற்றினார்.
நடக்க வேண்டாம்
பல்லக்கில் செல்
ஞானசம்பந்தர் கால் கடுக நடந்து திருநெல்வாயில் அரத்துறை கோயிலுக்குச் செல்லும்போது, இடையில் மாறன்பாடி என்னும் ஊரில் தங்கினார்.அவ்வூர்ச் சிவன் ஆணைப்படி அவ்வூர் அடியார்கள் முத்துப் பல்லக்கு, குடை, சின்னம் முதலானவற்றை வழங்கினர்.அவற்றை ஏற்றுக்கொண்ட சம்பந்தர் “எந்தை ஈசன்” என்னும் பதிகம் பாடிப் போற்றினார்.
பெண்ணின் மனநோயை நீக்கியது
ஞானசம்பந்தர் திருப்பாச்சில் ஆச்சிரமம் வந்தார்.அங்கே கொல்லிமழவன் என்னும் அரசனின் மகள் முயலகன் (மனநல) நோயில் வருந்திக்கொண்டிந்தாள்.ஞானசம்பந்தர் “துணிவளர் திங்கள்” என்னும் பதிகம் பாடி அவளது நோயைப் போக்கினார்.
சீடர்களின் குளிர் சுரம் போக்கியது
ஞானசம்பந்தர் கொடிமாடச் செங்குன்றூர் வந்தார்.அங்கு அவரது சீடர்கள் குளிர் சுரத்தால் நடுங்கினர்.அப்போது ஞானசம்பந்தர் “அவ்வினைக்கு இவ்வினை” என்னும் பதிகம் பாடி நோயை நீக்கினார்.
இறைவன் பந்தல் போட்டுக் கொடுத்தார்
ஞானசம்பந்தர் பட்டீசுரம் சென்றபோது வெயில் அவரை வாட்டியது.இறைவன் அவருக்கு முத்துப் பந்தல் அமைத்துக் கொடுத்தார்.
அதனைப் போற்றித் ஞானசம்பந்தர் பாடல்மழை எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.
இறைவனிடம் தங்கம் பெற்று
தந்தைக்குத் தந்தார்
ஞானசம்பந்தர் திருவாவடுதுறையில் இருந்தபோது, இவரது தந்தை வேள்வி செய்வதற்காகப் பொன் வேண்டி “இடரினும் தளரினும்” என்னும் எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.அப்போது இறைவன் அளித்த 1000 பொன் கொண்ட பொன் முடிப்பைத் தந்தைக்கு வழங்கினார்.
செத்தவனைப் பிழைக்க வைத்தது
ஞானசம்பந்தர் திருமருகல் சென்றார்.அப்போது வணிகன் மகள் ஒருத்தி தன்னை மணக்க அழைத்துச் சென்றவனோடு அங்கிருந்த மடத்தில் துயின்றாள்.அப்போது அவள் காதலன் பாம்பு கடித்து இறந்தான்.வணிகன் மக்கள் ஓலமிட்டு அழுதாள்.அது கேட்டு அங்கு வந்த ஞானசம்பந்தர் “சடையான் எனுமால்” எனத் தொடங்கும் பதிகம் பாட, விடம் நீங்கி வணிகன் பிழைத்தெழுந்தான்.
செல்லாக் காசு
ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரோடு திருவீழிமிழலை சென்றார்.அப்போது பெரும் பஞ்சம்.மக்கள் உணவின்றி வாடினர்.அப்போது “கண்ணுதலான் திருநீற்றுச் சார்பினோர்க்கு கவலை வருமோ” என்று வினவிப் பதிகம் பாடினர்.இறைவன் இருவர் கனவிலும் தோன்றி “இருவருக்கும் பொற்காசு அளித்தோம்” என்று கூறினார்.அன்று முதல் நாள்தோறும் கோயில் பீடத்தில் இருவருக்கும் 2 பொன் காசுகள் கிடந்தன.அதனை விற்று இருவரும் மக்களுக்கு உணவு அளித்துவந்தனர்.திருநாவுக்கரசர் தந்த நாணயத்தை உடனே எடுத்துக்கொண்டு பொருள்கள் வழங்கப்பட்டன.ஞானசம்பந்தர் தந்த நாணயத்தைப் பேரம் பேசி, கழிவு கொடுத்து விற்க வேண்டியதாயிற்று.அதனால், ஞானசம்பந்தர் மடத்தில் உணவளிக்கக் காலம் தாழ்ந்தது.அப்போது “வாசி தீரவே” என்னும் பதிகம் பாடி தம் நாணயத்தையும் ‘வாசி’ உள்ளதாக ஆக்கிக்கொண்டார்.
கதவு சாத்திக்கொள்ளப் பாடியது
திருநாவுகரசர் ஒரு பதிகம் பாடி, திருமறைக்காடு கோயில் கதவைத் திறந்தகொள்ளும்படிச் செய்தார்.அதனை ஞானசம்பந்தர் “சதுரம் மறை” எனத் தொடங்கும் ஒரே ஒரு பாடல் பாடித் தாளிட்டுக்கொள்ளும்படிச் செய்தார்.
அரசி அழைப்பு
ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரோடு திருமறைக்காடு மடத்தில் தங்கியிருந்தபோது ஞானசம்பந்தரைப் பாண்டிய நாட்டுக்கு வரும்படி அரசி மங்கையர்க்கரசியார் அழைப்பு அனுப்பியிருந்தார்.அப்போது “நாளும் கோளும் நன்றாக இல்லை; செல்லவேண்டாம்” என்று திருநாவுக்கரசு தடுத்தார்.அப்போது ஞானசம்பந்தர் “பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால், பழுது அணையாது” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.அப்போது பாடியது “வேயுறு தோளிபங்கன்” என்னும் பதிகம்.
சமணர் மூட்டிய தீ
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருந்த மடத்துக்குச் சமணர்கள் தீ இட்டனர்.அதனை அறிந்த ஞானசம்பந்தர் இந்தத் தீ வெப்பு நோயாக ‘பையவே சென்று பாண்டியற்கு ஆகவே’ என்று “செய்யனே” எனத் தொடங்கும் பதிகம்.
பாண்டியனின் வெப்பு நோய் நீக்கியது
சமணர் இட்ட தீ பாண்டியனுக்கு வெப்புநோயாக மாறிற்று.பாண்டியன் ஞானசம்பந்தரை வேண்டிக்கொள்ள, “மந்திரமாவது நீறு” என்று தொடங்கும் பதிகம் பாடினார்.வெப்பு நோய் நீங்கிற்று.
ஓலை தீயில் எரியவில்லை
ஞானசம்பந்தர் அனல் வாதத்தின்போது தாம் பாடிய திருநள்ளாற்றுப் பதிகத்தில், “போகம் ஆர்ந்த பூண்முலையாள்” என்னும் பாடல் எழுதிய ஏட்டைத் தீயில் இட்டார்.அப்போது “தளிரிள வளரொளி” என்னும் பதிகம் பாடினார். நெருப்பிலிட்ட ஏடு வேகவில்லை.
ஏடு ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது
ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்தபோது “வாழ்க அந்தணர்” என்னும் பதிகத்தைப் பாடி அதனை எழுதிய ஏடுகள் வைகைப் புனலின் ஓட்டத்தை எதிர்த்துச் செல்லுமாறு செய்தார்.இதன் மூலம் சமணாக இருந்த பாண்டியனைச் சைவனாக மாறச் செய்தார்.
பதிகம் பாடி ஓடம் ஓட்டினார்
ஞானசம்பந்தர் மதுரையிலிருந்து சோழநாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.வழியில் கொல்லம்புதூரில் முள்ளிவாய்க்கால் என்னும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று.ஓடம் செலுத்துவோர் தம் தொழிலை விட்டுவிட்டு இல்லம் சென்றுவிட்டனர்.ஞானசம்பந்தர் அங்கிருந்த ஓடம் ஒன்றில் தம் அடியவர்களை ஏறச்செய்து, “கொட்டமே கமழும்” என்னும் பதிகம் பாடி ஓடத்தை ஓட்டிச் சென்று அக்கரை அடைந்தார்.
ஆண்பனையைப் பெண்பனை ஆக்கிக் காய்க்கச் செய்தது
ஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் தல யாத்திரையின்போது “பூத் தேர்ந்து ஆயன” என்னும் பதிகம் பாடி, திருவோத்தூரில் இருந்த ஆண்பனைகளைப் பெண்பனைகளாக மாற்றிக் காய்க்கச் செய்தார்.
எலும்பைப் பெண் ஆக்கியது
ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் “மட்டிட்ட புன்னை” என்னும் பதிகம் பாடி, இறந்த பூம்பாவை என்னும் பெண்ணின் எரித்த எலும்புகளை மீண்டும் பெண்ணாக மாறும்படிச் செய்தார்.
திருமணம் - சோதி - சிவனடி
ஞானசம்பந்தர் தம் பெற்றோர் விருப்பபடி திருமணம் செய்துகொண்டு, மனைவியுடன் திருநல்லூர் கோயில் சென்று வழிபட்டார்.அப்போது கோயிலில் தோன்றிய தீ மணமக்களை அரவணைத்துக்கொண்டது.அப்போது “காதலாகிக் கசிந்து” என்னும் பதிகம் பாடி, தம்முடன் வந்தோரையும் சோதியில் அரவணைத்துக்கொண்டு சிவனடி சேர்ந்தார்.
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் (தலமுறை), காசித் திருமடம், 2008, முன்னுரை பக்கம் 19
No comments:
Post a Comment