தொல்காப்பியம் சொல்கிறது
- சிலர் தம் கருத்தை நயமாகவும் நாசுக்காவும். மறைமுகமாகவும் பேசிப் பிறருக்கு உணர்த்துவர்.
- சங்கப்பாடல்களில் பல இவ்வாறு கருத்தை உணர்த்துகின்றன.
- இப்படிக் கருத்துணர்த்தும் பாங்கைத் தொல்காப்பியம் இறைச்சி என்றும் உள்ளுறை என்றும் குறிப்பிடுகிறது.
இறைச்சி
காதல் வாழ்க்கையில் தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவரும் இறைச்சிப் பொருளில் தம் கருத்தைப் புலப்படுத்துவர்.
செய்யுளில் பொருளைப் புலப்படுத்தும் முறைமைகளில் இறைச்சி என்பது ஒன்று.
- இறைச்சி பொருள்-வயின் செய்யுளுள் கிளக்கும் - பெயரியல் 42
- இறைச்சியின் பிறக்கும் பொருளும்-மார் உளவே - பொருளியல் - 36
இதில் கருப்பொருள்களின் செயல் வேறு பொருளைப் புலப்படுத்தும்.
- இறைச்சி-தானே உரி புறத்ததுவே - பொருளியல் - 35
💜
தோழி தலைவியிடம் பேசும் இறைச்சிப் பொருள்மொழி அன்பு மொழியாக இருந்தாலும், அது தலைவியை வற்புறுத்தும் பொருள் கொண்டதாகவே இருக்கும்.
- அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் - பொருளியல் - 37
தலைவி தலைவனுடன் செல்வது உடன்போக்கு எனப்படும். தலைவி இந்த எண்ணத்தைத் தலைவனிடம் கூறும்போது தலைவன் வழியில் நேரும் துன்பங்களை இறைச்சிப் பொருள்களால் தெரிவிப்பான்.
- இடைச்சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி - கற்பியல் - 7
தலைவன் தலைவியை நாடி அவள் இருக்கும் இடத்துக்கு வரும்போது நேரும் இன்னல்களைத் தலைவி தோழியிடம் இறைச்சிப் பொருளால் கூறி வருந்துவாள்.
- ஆற்று-இடை கண்ட பொருளும் இறைச்சியும், தோற்றம் சான்ற அன்னவை பிறவும் - கற்பியல் - 29
எல்லாம் என்னும்போது அதில் நான், யாம் என்னும் தன்மைச் சொற்களும் உள்ளன. இதனைத் தொல்காப்பியம் "தன் உள்ளுறுத்த பன்மை" என்று குறிப்பிடுகிறது. (பெயரியல் 33) என்பது அதன் பொருள்.
காதல் வாழ்க்கையில் தலைவன், தலைவி இருவருக்கும் உதவுபவர்கள் "வாயில்" எனப்படுவர். இவர்களைத் "தோழி உள்ளுறுத்த வாயில்" (கற்பியல் 8) தொல்காப்பியம் குறிப்பிடும்போதும் உள்ளுறுத்த என்னும் சொல்லின் பொருளை உணர முடிகிறது.
தலைவியிடம் காணப்படும் நாற்றம், தோற்றம், ஒழுக்கம், உண்டி, செய் வினை மறைப்பு, செலவு, பயில்வு - ஆகியவற்றால் அவள் புணர்ச்சியை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறாள் என்பது உணரப்படும். இவை "புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழு" (தொல்காப்பியம் களவியல் 23) என்று கூறப்பட்டுள்ளன.
இந்தப் பொருளை நினைவில் வைத்துக்கொண்டு "உள்ளுறை உவமம்" என்னும் சொல்லை அணுக வேண்டும்.
💜
புறப்பொருளில் வேற்றுப்பொருள் வைப்பு அணி.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதி ஆகிவிடும். வலிமை அறிந்து செயலாற்ற வேண்டும் என்னும் கருத்தை இந்தக் குறள் குறிப்பிடுகிறது.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து - இந்தக் குறள் இடமறிந்து செயாற்ற வேண்டும் என்னும் கருத்தை உணர்த்துகிறது.
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து - என்னும் குறள் காலம் அறிந்து செயல்பட வேண்டும் என்னும் கருத்தைப் புலப்படுகிறது.
💜
அகப்பொருளில்
உள்ளுறுத்து இதனொடு ஒத்து பொருள் முடிக என உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
எடுத்துக்காட்டு
- உன் காதலி உன்னுடன் உன் ஊருக்கு வர விரும்புகிறாள் - தோழி கூறினாள்.
- காலடி வைக்க முடியாமல் பொடி சுடும். அந்த வழியில் அவளை எப்படி அழைத்ததுச் செல்வேன்? - இப்படிச் சொல்லித் தலைவன் மறுக்கிறான்.
💜
- காலடி வைக்க முடியாமல் பொடி சுடும். அந்தக் காட்டில் எப்படி அழைத்ததுச் செல்வேன்? - என்று அவர் கூறுகிறார், என்கிறாள் தோழி.
- அந்தக் காட்டில் எங்கேயாவது கொஞ்சம் தண்ணீர் இருக்கும். அதை யானைக் கன்று பருகும்போது அந்த நீர் கலங்கிவிடும். மீந்த கொஞ்சம் தண்ணீரையும் ஆண்யானை உறிஞ்சித் தன் பெண்யானை வாயில் ஊட்டும். - இப்படித்தானே என்னிடம் சொன்னார் - என்று தலைவி சொல்லி, அவருடன் செல்ல இருக்கும் தன் விருப்பத்தைப் புலப்படுத்துகிறாள்.
💜
- பொடி சுடும் என்பது உவமை
- அழைத்துச் செல்ல இயலாது என்பது உள்ளுறை
- களிறு கலங்கல் நீரைப் பிடிக்கு ஊட்டும் என்பது உவமை
- அவருடன் சென்றே தீர்வேன் என்பது உள்ளுறை
பாடல் பகுதி
அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனம்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே.
💜
தொல்காப்பியம்
உள்ளுறை உவமம், வெளிப்படை உவமம் என்று உவமம் 2 வகைப்படும்.
- உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத் தள்ளாது ஆகும் திணை உணர் வகையே. 49
திணைக்குரிய கருப்பொருள்களில் தெய்வம் அல்லாத பிற கருப்பொருள்கள் அனைத்தும் உவமையாகக் காட்டப்படும்.
- உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக் கொள்ளும் என்ப குறி அறிந்தோரே. 50
பொருளை உள்ளுக்குள் வைத்து மறைத்துக் கூறுவது உள்ளுறை உவமம்
- உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக என உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம். 51
வெளிப்படை தானே தெரியவரும்
- ஏனை உவமம் தான் உணர் வகைத்தே. 52
No comments:
Post a Comment