தளர்வு வந்து எய்தின் விதியினை நோவர் தழைக்கும் செல்வக்
கிளர்வு வந்து எய்தின் தமைத் தாம் புகழ்வர் கிளைத்த பசும்
துளவு உவந்தோனும் முளரி வந்தோனும் துதித்து நிற்பக்
களவு உவந்தோன் செய்த கற்பனை ஈதென்று காண்கிலரே
- தளர்வு வந்தால் விதியை நொந்துகொள்வர்.
- செல்வம் வந்தால் தன்னைப் புகழ்ந்து கொள்வர்
- உண்மையில் இரண்டும் கற்கனை.
என் செயலாவது யாதொன்றும் இல்லை மற்று யான் புரிதல்
நின் செயலாக நினைவு அளித்தாய் உன்னில் நீக்கம் அற்றேன்
புன் செயல் ஈது என்றும் நன்செயல் ஈது என்றும் புந்தி செய்யேன்
உன் செயல் யாவும் என்றே கருவேச உளம் தெளிந்தே
- கருவை ஈசனே!
- என் செயல் எதுவும் இல்லை
- நான் செய்வதெல்லாம் உன் செயல்
பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆள பிறங்கு அருளால்
ஏணிப் படி நெறி இட்டுக் கொடுத்து இமையோர் முடிமேல்
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி
ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தளமே
- தொழுபவர் பொன்னுலகு ஆள்வர்
- அதற்கு ஏற ஏணி வைத்துக் கொடுத்தவன் நீ
விண் இடு வில்லும் புனல் மேல் குமிழியும் மின்னும் என்ன
மண்ணிடைத் தோன்றி அழியும் இக் காயத்தை மாய்வு இலது என்று
எண்ணிடும் எண்ணம் தவிர்த்து அழியா முத்தி ஏறுதற்கு
பண்ணிடும் ஏணி கண்டீர் கள ஈசர் பொற்பாதங்களே
- வானவில், நீரில் தோன்று குமிழி, மின்னல் போன்று அழியக்கூடியது உடல்.
- முத்தி வீடு பெற ஏறுவதற்கு உதவும் ஏணி களா மரநிழல் ஈசன்
முத்திக்கு ஒரு வித்து மோகாடு அவிக்கும் முழங்கு செந்தீ
சித்தக் கவலைப் பிணிக்கோர் மருந்து சிவ தவம் சேர்
புத்திக் கொடிக்குப் படரும் கொழுகொம்பு போலும் கண்டீர்
துத்திப் பணி அணியும் கள ஈசர் துணை அடியே
- களா மரநிழல் ஈசன் முத்தி தரும் வித்து
- கவலைப் பிணியைப் போக்கும் மருந்து
- பத்தி என்னும் கொடி பற்றி ஏறிப் படர உதவும் கொழுகொம்பு
வரதுங்கராமன், திருக்கருவை அந்நதாதிகள்
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 160
No comments:
Post a Comment