Pages

Wednesday, 11 March 2026

எதிர்பாராத இன்பம்

🌳

உன் ஊர் மலையிலுள்ள விலங்குகளும் எதிர்பாராத இன்பம் (குறியா இன்பம்) துய்க்கின்றன. உனக்கு நீ எதிர்பாக்கும் இன்பம் கிடைக்காதா? 

உன் காதலியாகிய, என் தலைவியும் உன் இன்பத்தை விரும்புகிறாள். 

இவள் தந்தையும், காவலரும் சோர்ந்திருக்கும் இரவு நேரத்தில் நீ வந்தால் நீ விரும்பும் இன்பத்தை இவளிடம் பெறலாம் - என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 

🌳
பாறைக் குழியில் மழைநீர் தேங்கிநிற்கும் சுனை. அதில் வாழைப்பழங்களும், பலாப்பழங்களும் உதிர்ந்தன. ஊறின. சுனை நீர் தேறல் என்னும் கள்ளாக விளைந்தது. 

அங்கு வந்த கடுவன் என்னும் ஆண்குரங்கு அந்தத் தேறல் நீரைப் பருகிற்று. போதை அதன் தலைக்கு ஏறிற்று. 

மிளகுக்கொடி படர்ந்திருந்த சந்தன மரத்தில் அதனால் ஏற முடியவில்லை. பூ மணக்கும் மலைநிலத்திலேயே படுத்து உறங்கலாயிற்று. 

இது அந்தக் குரங்குக்குக் கிடைத்த எதிர்பாராத இன்ம். 

🌳
உன் நாட்டுக் குரங்குக்கே அது எதிர்பார்க்காத இன்பம் கிடைக்கிடைக்கிறது. உனக்கு நீ எதிர்பார்க்கும் இன்பம் கிடைக்காதா? 

உன் இன்பத்துக்காக இவள் ஏங்கிக்கொண்டிருக்கிறாள். 

🌳
இரவில், இவள் தந்தையும், ஊர்க்காவலரும் உறங்கும் நேரம் பார்த்து வருக. விருப்பம் போல் இவளிடம் இன்பம் துய்க்கலாம். 

🌳
வேங்கை பூத்திருக்கிறது. முழுநிலா முளைத்திருக்கிறது. - என்கிறாள் தோழி. 

🌳
வேங்கை பூக்கும் பருவ காலமும், முழுநிலா நாளும் பண்டைய தமிழ்மக்களின் திருமண நாட்கள். 

🌳
  • எனவே, வேங்கை மலர்தலும், முழுநிலா ஊர்தலும் திருமணத்தை உணர்த்தும் இறைச்சிப் பொருள்

  • குரங்கு குறியா இன்பம் பெறும் என்றது உள்ளுறை உவமம். 

🌳
பாடல்

கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை \ ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த \ சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு \ பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் \ அறியாது உண்ட கடுவன் அயலது  \ கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, \ நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் \ குறியா இன்பம், எளிதின், நின் மலைப் \ பல் வேறு விலங்கும், எய்தும் நாட! \ குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?  \ வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், \ நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, \ இவளும், இனையள் ஆயின், தந்தை \ அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, \ கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்   \ வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; \ நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. --- கபிலர் - அகநானூறு 2 

No comments:

Post a Comment