Pages

Monday, 16 March 2026

சிதம்பர தேவா

குகை நமசிவாய தேவரின் மாணாக்கர் குருநமசியர். இவர் பாடிய நூல் சிதம்பர வெண்பா. இதில் உள்ள 100 வெண்பாக்களும் சிதம்பர தேவா என்று முடிகின்றன. இது காப்பு 1 + 100 வெண்பா (101 வெண்பா)  கொண்டது. அவற்றில் சில:  

🔱

விரித்த சடாடவியும் வெண்ணீறும் மேய்யும் 
தரித்த சிலம்பும் இரு தாளும் - சிரித்த 
திருவாய் முகிழ் மலரும் தீவினையேன் காண 
வருவாய் சிதம்பர தேவா 

  • உன் விரித்த சடைக்காடு, மெய்யில் வெண்ணீறு, காலில் சிலம்பு, சிரிக்கும் இதழ் ஆகியவற்றுடன் சிதம்பர தேவா நீ என்னிடம் வருக.  

🔱

உறையும் பதி ஏது உரைத்து அருள வேண்டும் 
நிறையும் தவத்தோர் நினைவோ - மறையின் 
தலையோ கனக சபை தானோ கயிலை
மலையோ சிதம்பர தேவா

  • சிதம்பர தேவா!  நீ எங்கே இருக்கிறாய்? 
  • தவத்தோர் நினைவிலா
  • மறையின் தலையிலோ
  • பொன்னம்பலத்திலோ
  • கயிலை மலையிலோ
  • எனக்குச் சொல்ல வேண்டும்.

🔱

எடுத்த பிறப்பெல்லாம் எனக்கு வந்து தாய்மார் 
கொடுத்த முலைப் பாலனைத்தும் கூட்டில் - அடுத்த விறல்
பல் நாகணைத் துயில் மால் பால் ஆழியும் சிறிதாம் 
மன்னா சிதம்பர தேவா

  • எத்தனையோ பிறவிகளில் எத்தனையோ தாய்மார்கள் எனக்கு ஊட்டிய முலைப்பால் அனைத்தையும் சேர்த்தால் திருமால் பள்ளி பள்ளிகொள்ளும் பால்கடலில் இருக்கும் பாலை விட அதிகமாக இருக்கும்.  

வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 170

No comments:

Post a Comment