காஞ்சிபுரத்தில் கம்பை ஆறு பாய்கிறது.
காமாட்சியாகப் பிறந்த உமை கம்பை ஆற்று மணலில் சிவலிங்கம் உண்டாக்கி வழிபட்டாள். ஆற்றில் வெள்ளம் வந்தது. வெள்ளம் மணல் லிங்கத்ததை அடித்துச் செல்லாமல் இருக்க தன் மார்பால் மணல் விங்கத்தை அணைத்துக் காப்பாற்றினாள்.
அப்போது அவள் முலையின் அழுத்தம் சிவலிங்கத்தில் பதிந்து தழும்பாக மாறிற்று. இது இந்த லிங்கத்துக்கு இருக்கும் பெருமை.
ஏ என்பது பெருமை என்னும் பொருளை உணர்த்தும். தொல்காப்பியம் "ஏ பெற்று ஆகும்" என்று இதனை விளக்குகிறது.
கம்பை ஆற்று மணலில் உருவாக்கப்பட்டவன் கம்பன். முலைத்தழும்பு வடு இவனுக்குப் பெருமை (ஏ). அதனால் இவன் ஏகம்பன்.
"கச்சி ஏகம்பனே" என்று இவனை 11 ஆம் திருமுறை பட்டினத்துப் பிள்ளையார் பாடுகிறார்.
இந்த கம்பன் (சிவன்) பெயர் சூட்டப்பட்டவன் கம்பராமாயணம் பாடிய கம்பன்.
கம்பன் தன் மகனுக்கு அம்பிகாபதி என்னும் பெயரைச் சூட்டினான். அம்பிகையின் பதி / உமையின் கணவன் அம்பிகாபதி.
கம்பன், அம்பிகாபதி என்னும் பெயர்கள் சிவன் பெயர்கள்.
கம்பனும் அம்பிகாபதியும் காஞ்சிபுரத்தில் பிறந்து வாழ்ந்தவர்.
"நகரேசு காஞ்சி" ("நகரேஷ் காஞ்சி") எனப் போற்றப்படும் இந்த நகரில் வடமொழி, தென்மொழி இரண்டிலும் சிறந்த புலவர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களில் ஒரு குடும்பம்தான் கம்பன் குடும்பம்.
இந்தக் கம்பன் சோழ வேந்தன் வேண்டுகோளின்படி வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடினான். இது கம்பன் இராமாயணம் பாடிய வரலாறு.
"அருள் அம்பிகாபதி பொன்னடி தாமரை சூட்டி, அகப்பொருள் அம்பிகா பதிகம் புனைந்தேன்" என்பது அம்பிகாபதிக்கோவை நூலின் அவையடக்கப் பாடல்.
அம்பிகாபதி என்பவன் சிவன் என மேலே குறிப்பிட்டோம். எனவே தந்தையும் மகனும் சைவர். கம்பராமாயணம் வைணவ காப்பியம்.
முதற்குறிப்பு - மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12 ஆம் நூற்றாண்டு - பாகம் 2 - பக்கம் 260
No comments:
Post a Comment