அம்பிகாபதிக்கோவை பாடியவர் கம்பன் மகன் அம்பிகாபதி என்னும் கருத்து நிலவுகிறது.
இதில் ஐயம் எழுகிறது.
இது ஒரு பழமையான இலக்கியம்.
- நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறனைச் சிறப்பித்துப் பாடிய பாண்டிக்கோவை
- தில்லை நடராசர்மீது பாடப்பெற்ற சிற்றம்பலக்கோவையார்
ஆகிய கோவை இலக்கியங்கள் அம்பிகாபதிக் கோவைக்கு முன் தோன்றியவை
💢
அம்பிகாபதிக் கோவையின் அவையடக்கச் செய்யுள் இது.
அருள் அம்பிகாபதி பொன்னடித் தாமரை சூட்டி அகப்
பொருள் அம்பிகா பதிகம் புனைந்தேன் இப் புனைந்த செஞ்சொல்
தெருள் அம் புலவர் முன் செப்பியபோது உள தப்பு உரையார்
மருள் அம் குழவி மழலைக்கு என்னோ பொருள் மற்று இங்கு அன்றே
இதில் வரும் அம்பிகாபதி என்னும் சொல் அம்பிகை கணவன் சிவனைக் குறிக்கிறது.
- இதனை அம்பிகாபதி பாடினான் என்று எடுத்துக்கொள்வது சரியா?
- அகப்பொருள் அம்பிகா பதிகம் என்பதில் கம் என்பதை விட்டுவிட்டு அகப்பொருள் அம்பிகாபதி என்று எடுத்துக்கொள்வது சரியா?
சரியில்லை.
எனவே அம்பிகாபதி யார்
💢
கம்பன் மகன் அம்பிகாபதி பற்றி முன்பே கண்டோம்
💢
கம்பனாடன் உரை செவி சாற்று பூங்
கொம்பனாடன் கொழுநன் இராமப் பேர்
பம்பநாடு அழைக்கும் கதைப் பாச்செய்த
கம்ப நாடன் கழல் தலையில் கொள்வாம்.
கம்பன் இராமாயணம் பாடி முடித்தபோது அவன் மகன் அம்பிகாபதி இந்தப் பாடலைப் பாடினானாம். இதில் கம்பநாடு என்பது கம்பை ஆறு பாயும் நாடு.
💢
அம்பிகாபதி சோழமன்னன் மகள் அமராவதியைக் காதலித்தான். அவளும் இவனைக் காதலித்தாள். செய்தி அறிந்த மன்னன் சினம் கொண்டான். சோதித்து அறிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தான். தன் மகளையே விருந்து பரிமாறச் செய்தான். அவள் பரிமாற வந்தாள். மோகத்தில் அம்பிகாபதி பாடினான்.
இட்டடி நோவ எடுத்தடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருகசைய
உடனே தந்தை குறுக்கிட்டு, முழுவதும் மகன் பாடினால், மகனின் காதல் வெளிப்பட்டு, மன்னனால் மகன் உயிருக்குத் தீங்கு நேரும் என்று எண்ணி,
- கொட்டிக்
கிழங்கோ கிழங்கு என்று கூறுவாள் எந்தை
வழங்கோசை வையம் பெறும்.
என்று பாடிப் பாடலை முடித்து வைத்தான்.
💢
உற்றுநோக்கிய மன்னனின் மனம் ஆறவில்லை.
காதல் சுவையே இல்லாமல் 100 பாடல்கள் பாடினால், அம்மபிகாபதியை மன்னிப்பதாக அறிவித்தான். அம்பிகாபதி ஒப்புக்கொண்டான்.
அரசவையில் அம்பிகாபதி பாடினான். அவனுக்குத் தெரியாமல் அவன் காதலி இளவரசி உப்பரிகையில் இருந்துகொண்டு பாடல்களை எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டிருந்தாள்.
💢
100 பாடல் பாடினான். அவற்றில் ஒன்று காப்புச் செய்யுள். எனவே நிறைவுற்ற பாடல் 99 மட்டுமே.
இது தெரியாத மன்னன் மகள், 100 முடிந்தது என்று எண்ணித் உப்பரிகையில் வெளிப்பட்டடாள்.
அவளைக் கண்ட அம்பிகாபதி அவள் போட்ட கணக்கின்படியே தானும் கணக்கிட்டுக்கொண்டு, இலக்கு முடிந்துவிட்டதாகக் கருதி, அவள் தோற்றத்தைப் பாடினான்.
💢
சற்றே பெருத்த தனமே குலுங்கத் தரளவடம்
துற்றே அசைய குழை ஊசலாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக நடன சிங்கார இடை அழகின்
பொற்றேர் இருக்கத் தலை அலங்காரம் புறப்பட்டதே.
- தனம் குலுங்க, முத்துவடம் அசைய, குழை ஆட, இதழில் தேன் ஒழுக, சிங்கார இடை கொண்ட தேர் தோன்றிற்று.
எனப் பாடினான்.
அகச்சுவை கலவாத 100 பாடல் பாடாமல் 99 மட்டுமே பாடியதால் அரசன் அம்பிகாபதியின் தலையை வெட்டி வீழ்த்தினான்.
💢
கம்பர் சினந்தார்
வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு
வில்லம்பின் சொல்லம்பே மேலதிகம் - வில்லம்பு
பட்டதடா என் மார்பில் பார் வேந்தா நின் குலத்தைச்
சுட்டதடா என் வாயில் சொல்.
கம்பர் சாபத்தின்படு சோழர் குலம் அழியவில்லை.
இரண்டாம் குலோத்துங்கன் மகனான இராசாசன் ஆண்டபின் நேர்பரம்பரை நின்றுவிட்ட போதிலும் 100 ஆண்டுகள் கழித்தே (1279-ல்) சோழர் பரம்பரை முடிவுக்கு வந்தது.
💢
அம்பிகாபதி தனிப்பாடல்கள் - மேலும் சில
மா உறங்கின புள் உறங்கின வண்டு உறங்கின தண்டலைக்
கா உறங்கின இன்னம் என் மகள் கண் உறங்கிலள் கையணைக்
கோ உறங்கு கடைத்தலைக் குலதீப வள்ளை குதட்ட நின்
ஆ உறங்கு புகார் அரசு அஞ்சல அஞ்சல என்ன அடுக்குமே
- குல தீப! மா, புள், கா எல்லாம் உறங்குகின்றன. என் மகள் மட்டும் உறங்கவில்லை. அஞ்சாதே என்று அவளைத் தேற்றக் கூடாதா?
💢
வீரம் உண்டோ மதன் கை அம்பினால் வெந்து வீழும் உகைக்கும்
நேரம் உண்டோ வஞ்சி நேர்பட்ட காலையில் செஞ்சை விடப்
பேரம் உண்டோ சொல ஒண்ணாத காமப் பெருநெருப்புக்கு
ஈரம் உண்டோ ஐயனே என்ன பாவம் இனிச் சொல்வதே
- காமன் அம்பு பாய்ந்து வெந்துகொண்டிருக்கிறேன். காலை, மாலை என்று அதனிடம் பேரம் பேச முடியவில்லை. பெருநெருப்புக்கு ஈரம் உண்டோ? ஐயனே! என்ன பாவம் செய்தேனோ?
💢
உருகி உடல் கருகி உள் ஈரல் பற்றி
எரிவது அவியாது என் செய்கேன் - வரி அரவ
நஞ்சிலே தோய்ந்த நளின விழிப் பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு
- அவன் பெருமாள். அவன் பார்வை நஞ்சில் தோய்த்தெடுத்த மலர். அவன் என் நெஞ்சில் நெருப்பை மூட்டி விட்டிருக்கிறான். அதில் நான் உருகுகிறேன். எனக்குள் அது அவியாமல் எரிகிறது.
💢
ஏகா வடம் என் இரு கொங்கையின் மேல்
ஆகா வடமானது அறிந்திலையே
த்யாகாபரணா திசை யானைகளின்
பாகா பா ராச பயங்கரனே
- தியாகத்தை அணிகலனாகப் பூண்டவனே! எட்டுத் திசைகளிலும் வெற்றி கண்டவனே! பாடல்களால் போற்றப்படுபவனே! பகைவர்களை அஞ்ச வைப்பவனே! என் கொங்கை மேல் இருக்கும் மணிவடம் எனக்குப் பயன்படாமல் இருப்பது உனக்குத் தெரியவில்லையா. உன் மார்பு என் கொங்கைக்கு வேண்டுமல்லவா?
💢
பாடல்களும், கதைகளும் புலவர்களுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கத்தோடு, 19 ஆம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டவை. ஆனால் அவர்கள் வரலாற்றுக் கண் கொண்டு பார்க்காமல் புனைந்துள்ளனர்.
💢
அம்பிகாபதி என்னும் பெயரில் 3 புலவர்கள் காணப்படிகின்றனர்.
- அம்பிகாபதி கோவை பாடியவர்
- தண்டியலங்காரம் பாடிய தண்டி ஆசிரியரின் தந்தை பெயர் அம்பிகாபதி
- நெல்லை வருக்கைக்கோவை பாடிய அம்பிகாபதி. இவர் வீரை என்னும் ஊரில் வாழ்ந்தவர். சௌந்தரிய லகரியைத் தமிழில் பாடிய வீரை கவிராச பண்டிதரின் மகன்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 260
No comments:
Post a Comment