Pages

Monday, 19 January 2026

வச்சத்தொள்ளாயிரம்

வச்சராயன் என்பவன் வச்சன் என்று குறிப்பிடப்படுகிறான். 

இவன் குலோத்துங்கச் சோழனுடைய (1070-1120) படைத்தலைவர்களில் ஒருவன். மேலைச் சாளுக்கியரை வென்றவன். வத்ஸராசன் என்னும் பட்டத்தைச் சோழனிடம் பெற்றவன். 

தம் பெற்றோர் நற்கதி பெறவேண்டும் என்று வேண்டி, கோதாவரி மாவட்டம் தீட்சாராமம் என்ற ஊரில் உள்ள பீமேசுவரமுடைய மகாதேவர்க்கு,  நந்தாவிளக்கு வைத்தான். 

இவன் சோழ நாட்டுக் கஞ்சாறு (ஆனந்ததாண்டவபுரம்) என்னும் ஊரினன். திருவையாறு வாணன் என்பவனின் மகன். 

வச்சத்தொள்ளாயிரம் என்னும் நூல் வச்சன்மீது பாடப்பட்டது என்று வீரசோழிய உரைகாரர் பெருந்தேவனார் குறிப்பிடுகிறார்.     


இவனைக் குறிக்கும் சில பாடல்கள். 

💧

வேட்டொழிவது அல்லால் வினைஞர் விளைவயலுள் 
தோட்ட கடைஞர் சுடுநந்து - மோட்டாமை
வன்புறத்து மீதுடைக்கும் வச்சத்து இளங்கோவை 
இன்புறுத்த வல்லமோ யாம். 

இந்தப் பாடல் ‘தொகைமொழி’ என்னும் இலக்கணப் பாங்குக்கு எடுத்துக் காட்டாக வீரசோழிய நூலில் தரப்படுள்ளது. 

நத்தையைச் சுட்டுத் தின்னும் உழவர்கள் நத்தையின் ஓட்டை ஆமை ஓட்டில் உடைப்பர். இப்படிப்பட்டவர் வாழும் நாடு வச்ச-நாடு. இந்த நாட்டு இளங்கோவுக்கு இன்பம் தரும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா என்று ஒருத்தி கூறிவதாகப் பாடல். 

💧

உ வே சா பெருங்கதை முகவுரையில் தரும் 2 வெண்பா

வாடை குளிர மருந்து அறிவார் இல்லையோ
கூடல் இனி ஒருகால் கூடாதோ - ஓடை
மத வாரணத்து உதயன் வத்தவர் கோன் நாட்டில் 
கதவு ஆனதோ தமியேன் கண்

அவன் வத்தவர் கோன். மதம் கொண்ட யானைமீது தோன்றுபவன். அவன் நாட்டுக் கதவு என் கண்ணுக்கு மட்டும் சாத்தப்பட்டிருக்கிறதோ? வாடைக் குளிருக்கு மருந்து யாருக்கும் தெரியாதோ? ஒரு முறையேனும் அவனை அணைத்து என் குளிரைப் போக்கிக்கொள்ள மாட்டேனா? - அவள் பிதற்றுகிறாள்.

💧

உன் உயிரும் என் உயிரும் ஒன்று என்பது இன்று அறிந்தேன்
மன்னு புகழ் வச்சத்தார் மன்னவா -  உன்னுடைய 
பொன் ஆகத்து எங்கையர் தம் பொற்கை நகச் சின்னம் கண்டு
என் ஆகத்தே  எரிகையால்.   

வச்சத்தவர் மன்னவா! உன் மார்பில் என் தங்கையர் வருடிய நகக் குறியைப் பார்த்து என் நெஞ்சு எரிகிறது. இதனால் என் உயிரும் உன் உயிரும் ஒன்று எனத் தெரிந்துகொண்டேன். - அவள் நினைவு.  

💧

அடுத்த 3 பாடல் பெருந்தொகை என்னும் திரட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. 

ஒற்றை அலவன் உழுத வரப்பு அருகே
முற்றி எழுந்த முடத்தாழை - மற்று அவ்
வயலே கனி உதிர்க்கும் வச்சத்தார் கோமான்
கயலே பிறவே அவா

அது வச்சத்தார் கோமான் நாடு. அதில் நண்டு உழுத வரப்பு. அருகில் முடத் தாழை. தாழைக்கனி வயலில் விழுமா தின்னலாம் என்று வயலில் மேயும் கயல் மீன்கள் ஆசையோடு திரிகின்றன. (கயல் பெண்கள் திரிகின்றனர்)

💧

அரி குருகு தின்ற கனி கிடப்ப ஆங்கே
வரி அலவன் வாயில் வால் நீட்டி - நரி தனது
வால் வாங்க மாட்டாத வச்சத்தார் கோமான் என்
மால் வாங்க வல்லலனோ வந்து. 

அது வச்சத்தார் கோமான் நாடு. அங்கே, குருகு கடித்த பழத்தை நரி தின்றுகொண்டிருந்தது. அந்த நரியின் வாலை வலைக்குள் இருக்கும் நண்டு கவ்விக்கொண்டது. நரியால் தன் வாலை இழுக்க முடியவில்லை.  

💧

அவல் பதத்த செந்நெல் அருந்தி அருகே
துவர் பதத்த செங்கிடையும் துய்த்துக் - கவர் பதத்த
மாமேதி மேய்ந்து வரும் வச்சத்தார் கோமானுக்கு 
யாம் ஏதும் இலமே இலம். 

நெல் அவல் இடிக்கும் பதத்தில் விளைந்திருந்தது. வேலியில் துவர்க்கும் சிவந்த கோவைப் பழங்களும் இருந்தன. எருமை இரண்டையும் மேயும். இது வச்சத்தார் கோமான் நாடு. அவனுக்கு நான் எதற்கும் பயன்படாவளாக இருக்கிறேன். (அவள் சொல்கிறாள்)     

💧

வீரசோழிய உரையில் காணப்படும் ஆசிரியப்பா

கொங்கை கோங்கு  அரும்பாக, அங்கை
அணிநிறத் தாமரையாக, மணிநிறக்
கண்ணிணைக் குவளையாக, நுண்ணிழை
நுண்ணிடை வல்லியாக, நண்ணிய
முறுவல் முல்லையாக, இறுமாந்து
செவ்வாய் கொவ்வையாக, கைவிரல்
சீறடித் தளிர்களாக, சீறும்
மா அஞர் தந்த இம் மங்கை தன்னைக்
கரத்தும் என்று எனக்கு இரக்கம் இன்றி 
ஓடரிக் கண்ணியை ஒளித்தீர் ஆயினும்
காட்டுமின் என்று கை தொழுது இறைஞ்சினன் 
வாள் திறத் தடக்கை வத்தவர் கோவே. 

அவள் கொங்கை கோங்கம் பூ அரும்பு. கை தாமரை. கண் குவளைமலர். இடை ஆடும் கொடி. பல் முல்லை மலர். வாய் கோவைப்பழம். கைவிரல் தளிர். அவள் என் நினவில் அஞர் செய்துகொண்டிருக்கிறாள். வத்தவர் கோவே! கை தொழுது இறைஞ்சுகிறேன். ஒளித்து வைத்திருந்தால் காட்டுங்கள். - அவன் வேண்டுகிறான்.    

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 272 முதல் 

No comments:

Post a Comment