இரண்டாம் இராசராசன் (கண்டன்) மீது பாடப்பட்ட கோவை நூல் பாடல்கள் வேறு சில நூல்களில் குறிப்பிடப்படுள்ளன.
இவை ஒட்டக்கூத்தர் பாடியவை
கோவை நூல் பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. அகப்பொருள் செய்திகளைக் கூறுபவை.
ஆவி எங்கே என் ஆவி எங்கே என்னும் ஆன கஞ்சத்
தேவி எங்கே என்னில் தேவி எங்கே என்னும் செய் விருந்தைக்
கூவி அங்கே அழைக்கும் கலத்தான் கண்டன் கோழி வெற்பில்
பாவி இங்கே கொண்ட மால் கொண்டதோ இப் பனி வரையே
- வறுங்களம் நாடி மறுகல் (செவிலித்தாய் தன் மகளை அவள் இல்லாத இடமெல்லாம் தேடித் திரிதல்) என்னும் துறைக்கு இந்தப் பாடல் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது.
போகக் கடவன புள் என்று இருந்திலம் போந்து துணை
ஆகக் கடவன என்று இருந்தேம் அகிலாண்டம் எல்லாம்
தியாகக் கொடி கொண்ட கண்டன் புகாரில் தம் சேக்கை தொறும்
ஏகத் தொடங்கினவே அந்தி வாய் எம்மை விட்டு வைத்தே
- அந்தி வேளையில் தன்னவன் தன்னோடு படுக்கையில் இல்லை என்று அவள் வருந்திப் பாடுகிறாள்.
குறித்தான் குறித்து ஒன்றைக் கூறப்பெற்றறான் நின்றன் கொய் தழையைப்
பறித்தான் பறித்துப் பவளச் செவ்வாய் வைத்துப் பையப் பையக்
களித்தான் களித்த பின் கண்டன் புகார் வஞ்சி காந்தள் அம் கை
மறித்தான் மறித்தனவே கண்கள் நீர் வந்து மங்கினவே
- அவன் என்மீது குறி வைத்தான். ஒன்றைச் சொன்னான். நான் கொய்த பூக்களைப் பறித்துக்கொண்டான். என் வாயில் வாய் வைத்துச் சுவைத்துக் களிப்புற்றான். என் கையைப் பிடித்து மறித்துக்கொண்டான். என் கண்களில் நீர். மகிழ்ச்சியில் கண்கள் மங்கின. கண்களை மூடிக்கொண்டேன். அவன் அது செய்தான். அவள் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
"கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்" - என இதன் புலவன் பாராட்டப்படுகிறான்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 259
இலக்கிய வரலாறு 12 நூ
No comments:
Post a Comment