காலிங்கராயன் கல்வெட்டுப் பாடல்கள்
முதல் குலோத்துங்கன்
அவன் மகன் விக்கிரமன்
ஆகிய இருவர் காலத்திலும்
படைத்தலைவனாக விளங்கியவன்
இந்தக் காலிங்கராயன்.
பொன்னம்பலக் கூத்தன்
மணவிற் கூத்தன்
நரலோக வாரன்
என்றெல்லாம் இவன் குறிப்பிடப்படுகிறான்.
சிதம்பரம் நடராசப் பெருமானுக்குத் திருப்பணிகள் பல செய்தான்.
இந்தக் கோயில் வெளிப் பிரகாரத்தில் இவனைப்பற்றிய பாடல்கள் 38 உள்ளன. அவற்றுள் சில:-
0
தில்லைப் பொன்னம்பலத்தை செம்பொனால் வேய்ந்து வான்
எல்லையைப் பொன்னாக்கினான் என்பரால் - ஒல்லை
வடவேந்தர் செல்வமெலாம் வாங்க வேல் வாங்கும்
குடைவேந்தன் தொண்டையர் கோ
இவன் தொண்டையர் கோ என்று போற்றப்படுகிறான். வடவேந்தர் செல்வங்களையெல்லாம் வாரிக்கொண்டு வந்து பொன்னம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான்.
0
தென்வேந்தன் கூன் நிமிர்த்த செந்தமிழர் தென்கோயில்
பொன் வேய்ந்து திக்கைப் புகழ் வேய்ந்தான் - ஒன்னார்க்குக்
குற்றம் பல கண்டோன் கோள் இழைக்கும் வேல் கூத்தன்
சிற்றம்பலத்தில்லை சென்று
(சம்பந்தர் பாடக் கேட்டு) தில்லை நடராசர் பாண்டியன் கூனை நிமிர்த்து, கூன்பாண்டியனை நெடுமாறன் ஆக்கினார்
0
நட்டப் பெருமானால் ஞானம் குழைத்து அளித்த
சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக்
கேட்பார்க்கு மண்டபத்தைச் செய்தான் அவ் வேந்தர் கெட
வாட்போர்க்கும் தொண்டையார் மன்
இவன் வள்போரில் வல்லவன். தொண்டைநாட்டு மன்னன். பேச்சாளர் பேசுவதைக் கேட்பதற்கென்று தில்லையில் ஒரு மண்டபம் கட்டினான்.
0
எவ்வுலகும் எவ்வுயிரும் ஈன்றும் எழில் அழியாச்
செவ்வியார் கோயில் திருச்சுற்றை - பவ்வம் சூழ்
எல்லை வட்டம் தன் கோற்கு இயலவிட்ட வாள் கூத்தன்
தில்லை வட்டத் தேய மைந்தன் சென்று
எல்லா உலகங்களையும், உயிர்களையும் பெற்றெடுத்த பின்னும் எழில் அழியாமல் இருப்பவர் தில்லை நடராசர். அந்தக் கோயிலைத் தன் ஆட்சிக்குள் இவன் கைத்துக்கொண்டான். அதனால் தில்லைவட்டத் தேய மைந்தன் என்று போற்றப்படுகிறான்.
0
மாசிக் கடலாடி வீற்றிருக்கும் மண்டபமும்
பேசற்று அவற்றைக் பெறு வழியும் - ஈசற்குத்
தென்புலியூர்க்கே அமைத்தான் கூத்தன் திசை அனைத்தும்
மன் புலி ஆணை நடக்க வைத்து.
மாசி மக நாளில் கடலில் குளித்துவிட்டு வர வழியும், தங்க மண்டபமும் தென்புலியூரில் இந்தக் கூத்தன் அமைத்தான்.
0
திருவதிகையில் இவன் செய்த திருப்பணிகள் பற்றிய கல்வெட்டுப் பாடல்கள்
பொன் மகரத் தோரணமும் பூண் அணியும் பட்டிகையும்
தென் அதிகை நாயகற்குச் செய்து அமைத்தான் - மன்னவர்கள்
தன் கடைவாய் நில்லாதார் தாள் வரைவாய் நின்று உணங்க
மின் கடை வேல் காலிங்கர் வேந்து
இவன் காலிக்கரை வெற்ற வேந்தன். தோரணம், அணிகலன், பட்டாடை ஆகியவற்றை திருவதிகை நாயகர்க்கு அளித்தான்.
0
மண்டபமும் மாளிகையும் வாழ்திசை வீரட்டார்க்கு
எண் திசையும் ஏத்த எடுத்து அமைத்தான் - விண்டவர்கள்
நாள் வாங்கச் சேயிழையார் நாண் வாங்க நல் தடக்கை
வாள் வாங்கும் காலிங்கர் மன்.
கலிங்க நாட்டுப் பகைவர் வாழ்நாளைக் குறைத்தான். அவர்களின் மனைவியர் தம் மங்கலநாணை இழந்தனர்.
காலி என்னும் சொல் ஆடுமாடுகளைக் குறிக்கும். ஊரார் மாடுகளை ‘ஊர்க்காலி’ என்பர். கலிங்கர் ஆடுமாடு மேய்ப்பவர்.
0
அருமறை மாதாவின் அறக் காமக்கோட்டம்
திருவதிகைக்கே சமயச் செய்து - பெரு விபரம்
கண்டான் எதிர்ந்தார் அழியத் தன் வேலைக்
கொண்டான் தண் தொண்டையர் கோ.
தொண்டையரை வென்று தொண்டையர்-கோ ஆனான். திருவதிகைக்குத் தன்னைச் சமைத்தான் (ஆளாக்கினான்). அங்கு அறக் காமக்கோட்டம் கட்டினான்.
0
போதியின் நீழல் புனிதர்க்கு இறையிலி செய்து
ஆதி அதிகையின் வாய் ஆங்கு அமைத்தான் - மாதர்முலை
நீடு உழக் காண் ஆகத்து நேரலரைத் தன் யானைக்
கோடு உழக் காண் கூத்தன் குறித்து.
திருவதிகை அரச மரத்தடிப் பிள்ளையார்க்கு இறையிலியாக நிலங்கள் வழங்கினான். இவன் மார்பை மங்கையர் முலை உழுதது. இவனது யானைகளின் கொம்புகளோ இவனுக்கு உதவாதவர்களின் மார்பை உழுதன.
0
மைசூர் நாட்டில், பல நிவந்தங்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகள்
நீண்ட அகவல் பாவிலும்
கலிவெண்பாவிலும்
உள்ளன.
இவை அரசர் செய்த நிவந்தங்களை மட்டுமல்லாமல் தனிப்பட்டவர் செய்த தருமங்களையும் குறிப்பிடுகின்றன.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 316
No comments:
Post a Comment