Pages

Saturday, 24 January 2026

நெற்குன்றவாணர்

சென்னைக்கு அருகிலுள்ள ஊர் நெற்குன்றம் 
இதனை, "சயங்கொண்ட சோழமண்டலத்து நெற்குன்றம்" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இந்த ஊரில் வாழ்ந்தவர் நெற்குன்றவாணர். 
முதலாம் குலோத்துங்கன் காலத்தவர். 
களப்பாளர் என்னும் சிற்றரசர் குடும்பத்தில் பிறந்தவர். 

63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனாரும், 
சிவஞானபோதம் நூலை இயற்றிய மெய்கண்ட தேவரும் 
இந்தக் களப்பாளர் மரபில் தோன்றியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

இவர் கல்வியில் வல்லவராகவும், வள்ளலாகவும் திகழ்ந்தார். 

வாணர் என்பது இவர் பெயர் ஆகலாம். 
அல்லது வாழ்நர் என்னும் சொல்லின் திரிபாகவும் இருக்கலாம். 
வாணர் என்பது தொண்டைநாட்டு முதலியார் பெயர்களில் ஒன்று வாணர். 

0

உணலைப் பசும்பொன் முதலானவற்றை உதவிப் பின்னும்
குணலச்சை உள்ளவர் கேட்கவும் கூசுவர் சொல்லெனவே
எணலைக் கருதி எழுதி வைப்பீர் என இல் மறைத்து 
மணலைப் பரப்பிய முன்றில் உள்ளான் தொண்டை மண்டலமே 
இவ்வாறு இவரைத் தொண்டைமண்டலச் சதகம் பாராட்டுகிறது.

உதவி வேண்டுவோர் கேட்கக் கூச்சப்பட்டால், மணலில் எழுதிவைக்கலாம் என்று இவர் தன் முற்றத்தில் மணலைப் பரப்பி வைத்திருந்தாராம். 

0

கற்கும் கவி வல்ல யாதவர்கோன் நம்பிகாளிக்கும் யாம்
விற்கும் பரிசனம் ஆகிவிட்டோம் வடவேங்கடமும்
பொற்குன்றமும் புகழ் கங்கா நதியும் பொதியமும் போல் 
நெற்குன்றமும் நம் மரபு என்னும் நாளும் நிலை நிற்கவே

நம்பிகாளி என்னும் புலவனுக்குத் தன்னை விற்றுவிட்டதாக நெற்குன்றவாணர் இந்தப் பாடலைப் பாடினார்.

0

பன்னும் தமிழ்க்கு அவன் மா மனைத் தாதி பரிசளிப்ப 
முன் நம்பிகாளிக்கு நெற்குன்றவாண முதலி என்போன் 
பின்னும் சிலபல பொன்னும் கொடுத்து தன் பேர் நிறுத்த
மன்னும் தமிழும் உரைத்தான் அவன் தொண்டை மண்டலமே

வாணன் இல்லாதபோது அவனை நாடி வந்த தமிழ்ப் புலவனுக்கு அவன் வீட்டு வேலைக்காரி பரிசு வழங்கிளாள். வாணன் வந்ததும் பொன்னும் வழங்கினான்.

0

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது சோழனுக்குச் செலுத்தவேண்டிய திறையைச் செலுத்த முடியவில்லை. தான் வழிபடும் திருப்புகலூர் பெருமானை வழிபடச் சென்றார். இவரைக் கைது செய்ய அரசன் ஆணையிட்டான். காவலர் வந்தனர். கோயிலில் வழிபாடு செய்த பின்னர் வருகிறேன் என்றார். கோயிலுக்குள் சென்றார். அங்குள்ள பிள்ளையார்மீது ஒரு பாடல் பாடினார். 

உரைசெய் மறைக்கும் தலை தெரியா ஒரு கொம்பை என்றே
பரசுமவர்க்குக் பெருயிழல் ஆக்கும் பழனம்  எல்லாம்
திரைசெய் கடல்துறைச் சங்கம் உலாவும் திருப்புகலூர்
அரசினிடத்து மகிழ் வஞ்சி ஈன்ற ஓர் அத்தி நின்றே

இந்தப் பாடலைக் கேட்ட அக் கோயில் தளிப்பெண் இப்பாடல் ஓர் அந்தாதியின் காப்புச் செய்யுளாக அமையலாமே என்று  கூறினாள்.  

அந்தாதிக்குக் காப்பு ஆனால் அது அரசு இறைக்குப் பொருள் ஆகுமா என்று வாணன் வினவினான். 

தளிப்பெண் திறையைத் தானை கட்டினாள். 
வாணர் பூக்கமலம் எனத் தொடங்கி அந்தாதி பாடி முடித்தார். 

0

புலவர் புராணம் பாடிய தண்டபாணி தேசிகர் நெற்குன்றவாணர் வரலாற்றை  30 பாடல்களாகப் பாடியிருக்கிறார். 

0

அம்பிகாளி என்னும் புலவன் நெற்குன்றவாணரைப் பாடினான். அவனுக்குக் கொடுக்க வாணரிடம் பொருள் இல்லை. 

என்னை விற்றுப் பொருள் பெற்றுக்கொள்க என்றார். 
அவ்வாறே அவரை விற்று அவன் பொருள் பெற்றுச் சென்றான். 

0

மனைவி உணவு உண்ண அழைத்தாள்
அப்போது அம்பிகாளிக்கு விலையானேன் என்றார்

பின்னர் திரிபந்தாதி பாடினார்.

கேட்ட தொண்டைமான் திறையைப் பெறாததோடு உம் நாட்டையும் ஊரையும் நீரே பெறுக என்று கொடுத்துவிட்டான். 

0

நெற்குன்றவாணர் சோழன் அவையில் புலவர் ஆனார் 

இளம்புலவர்களைத் தண்டிக்கும் ஒட்டக்கூத்தருக்கு அறிவுரை கூறும் பாடல் பாடினார்.

கோக் கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர் கோகனகப்
பூக் கண்டு கொட்டியும் பூவாது ஒழிந்தில பூவில் விண்ணோர் 
காக் கண்ட செங்கைக் கவிச்சக்கரவர்த்தி நின் கட்டுரை யாம்
பாக் கண்டு ஒளிப்பர்களோ தமிழ் பாடிய பாவலரே

பேரரசன் இருக்கிறான் என்று சிற்றரசன் இல்லாமல் போய்விடுவானா?
தாமரைப் பூ இருக்கிறது என்று கொட்டிப் பூ பூக்காமல் இருந்துவிடுமா?
இவ்வாறு வினவி ஒட்டக்கூத்தரை நெற்குன்றவாணர் தெருட்டினார். 
 
கேட்ட ஒட்டக்கூத்தர் திருந்தினார்.  

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 250

No comments:

Post a Comment