புராணங்களில் உள்ள நீதிக் கருத்துகள் மக்கள் மனத்தில் பதியும்பொருட்டு கதை வடிவில் இருக்கும் புராணங்களை, புராண வல்லுநர்கள், கோயில் மண்டபங்களிலும், அம்பலங்களிலும் (சாவடிகளிலும்) இருந்துகொண்டு சொற்பொழிவாற்றினர்.
இதனைப் ‘புராணப் பிரவசனம்’ என்றனர்.
புராணம் சொல்வது ‘புராணம் வக்காணித்தல்’ எனப்பட்டது. பழமைகளையும், வழமைகளையும் காட்டிப் பேசும் ஒருவனை "வக்கணையாகப் பேசுகிறான்" எனக் குறிப்பிடுவது வழக்கம்
தமிழில் புராண நூல்கள் தோன்றுவதற்கு முன்னர் அவை வடமொழியில் இருந்தன.
பார்ப்பனர்கள் வடமொழியில் வல்லவர்களாக விளங்கினர். அவர்கள் தாம் படித்தறிந்த புராணத்தை தமிழில் மக்களுக்குச் சொன்னார்கள். அவற்றைக் கேட்டு மகிழ்வெய்திய மக்களும், மன்னனும் அவர்களின் நல்வாழ்வின் பொருட்டு நிலங்களை அவர்களுக்குக் கொடையாக வழங்கினர்.
இந்தக் கொடையைக் கல்வெட்டுகள்
- வேத விருத்தி
- பட்ட விருத்தி
- பாரத விருத்தி
- புராண விருத்தி
என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.
இதனைச் சதாசிவ பண்டாரத்தார் தம் பிற்காலச் சோழர் வரலாறு மூன்றாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாகம் செய்யும் நாட்கள் ஒன்றில் இந்தச் சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம். புராணச் சொற்பொழிவு செய்தவர்களை,
- சூதர்
- சூதமாமுனிவர்
என்றனர்.
வேதம் பற்றிச் சொல்லும்போது காலத்துக்கு ஏற்ற சில கருத்துகள் சேர்த்தும் சொல்லப்பட்டன. அவற்றை இதிகாச புராணம் என்றர்.
இந்தச் சொற்போழிவாளர்களுக்கு மன்னன் இறையிலியாக நிலக்கொடை வழங்கினான். இதனைப் புராண மானியம் என்றனர்.
சொற்பொழிவு கேட்க அமைக்கப்பட்ட இடம் ‘நிபந்தம்’ எனப்பட்டது.
திருவாரூரிலும், திருபுவனத்திலும் ‘புராண மண்டபம்’ என்னும் பெயரிலேயே அரங்கங்கள் உள்ளன.
திருவொற்றியூரில் பங்குனி உத்தரப் பெருவிழா நடைபெற்ற காலத்தில் ஆளுடைய நம்பிகள் செய்த ஸ்ரீபுராணம் விரிவுரையை, அங்குள்ள கோயில் இறைவன் படம்பக்க நாயக தேவர் கோயில் மகிழ மரத்தடியில் இருந்துகொண்டு கேட்டார்; சோழ வேந்தனும் கேட்டான் - என்னும் குறிப்பு உள்ளது, (ஔவை துரைசாமிப்புள்ளை, ஞானாமிர்தம், 1914, முகவுரை, பக்கம் 35)
சிலப்பபதிகாரம் இந்திரவிழவூர் எடுத்த காதையில் வரும் "திறவோர்க்கு உரைக்கும் செயல் சிறந்து ஒர்பால்" என்னும் தொடருக்கு "புராணம் படித்தல்" என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார்.
இவை புராணச் சொற்பொழிவுகள் நிகந்ததைக் காட்டும் ஆவணங்கள்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், முன்னுரை, பக்கம் 9
No comments:
Post a Comment