Pages

Thursday, 29 January 2026

தலபுராணங்களால் ஏற்பட்ட மாற்றம்

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எனக் கருதிய மக்கள் ஊருக்கு ஊர் கோயில் கட்டினர். கோயில்களுக்குத் தலபுராணம் பாடிப் பெருமைபடுத்திக்கொண்டனர். 

16 முதல் 19 நூற்றாண்டுகளில் தலபுராணங்கள் பல்கின. 

நாயன்மார்கள் பல சிவன் கோயில்களுக்குச் சென்று தமிழ் பாடினர்.

இறைவனுக்கு உருவம் உண்டாக்கினர். உருவத்துக்கும் கதைகள் உண்டாக்கினர். அடையாளம் காட்ட, தல-விருச்சங்களை (இருப்பிட மரங்களை) வளர்த்தனர். 

0

தலபுராணங்களில் கதைகளைப் புகுத்தினர். கதைகளுக்கு வடமொழியில் கால் உள்ளது என்று தோன்றும்படி வடமொழியில் சில பாடிவைத்தனர்.  

கோயில் படைக்கும் பிராமணர்களே வடமொழிப் பாடல்களை எழுதியதோடு, கோயிலின் புகழுக்காக வல்லுநர்களும் வடமொழியில் பாடிவைத்தனர். 

0

மும்மூர்த்திகள், சரசுவதி, இலக்குமி, இந்தின், சந்திரன், சூரியன் முதலான தேவர்களும், அகத்தியர், துருவாசர் போன்ற முனிவர்களும் அக்கோயிலுக்கு வந்து வழிபட்டுப் பேறு பெற்றதாகவும் எழுதிவைத்தனர். 

0

இந்தச் செய்திகளை வடமொழியில் எழுதும்போது தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயர்களாக மாற்றிக்கொண்டனர். 

இதனால் மயிலாடுதுறை மாயவரம் ஆயிற்று. குடந்தையூர் (குடந்தை) கும்பகோணம் ஆயிற்று. தமிழ்ப்பெயர்களே வடமொழி ஆயின என்னும் உண்மை மறைந்துபோயிற்று.   

0

தலக் குடிசைகள் மாடங்கள் என்று பாடப்பட்டன. 

கோயில்களின்மீது மக்களுக்கு  நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் விளைநிலம், பொன் முதலானவற்றைத்  தானமாக வழங்கினர். 

ஆட்டபாட்டம், இசைமுழக்கம் போன்றவற்றால் கலைகள் வளர்ந்தன. கோயில் கோபுரங்கள் கட்டடக்கலைக்கு உயிரூட்டின. 

0

பழையாறை பெருநகரமாக, சோழரின் தலைநகரமாக விளங்கிற்று. பாண்டியனால் அழிக்கப்பட்ட பின்னர் பட்டீசுரம், சத்திமுற்றம் என்னும் கோயில் தளங்களாக மானின. உறையூர் சிறப்பு குன்றி திருச்சி பெருநகரம் ஆயிற்று. 

0

உலா, தூது, கலம்பகம், கோவை, குறவஞ்சி, அந்தாதி போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றின. 

இவற்றில் ஊர், கோயில் போன்றவற்றின் தோற்றம் கண்ணில் கண்டது போல் பாடப்படாமல், எப்படி இருக்கவேண்டும் என்று கருதினார்களோ, அப்படி இருந்தது எனப் பாடிவைத்துள்ளனர். 

கோயில்கள் மக்களுக்கு மட்டுமல்லாமல், அங்கு வரும் விலங்கு, தாவரங்களுக்கும் முக்தி  தந்தன என்று தல புராணங்கள் கூறுகின்றன. 

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், முன்னுரை, பக்கம் 13

No comments:

Post a Comment