Pages

Wednesday, 28 January 2026

புராண இயல்பு

அறிஞர் மு. அருணாசலம் தமிழில் உள்ள புராண நூல்களைத் தொகுத்து ஆராய்ந்து அவற்றில் காணப்படும் இயல்பை விளக்குகிறார். 

பெரும்பாலான விரிந்த புராணங்கள் பூர்வகாண்டம், உத்தரகாண்டம் என இரண்டு பிரிவுகளாய் உள்ளன. 

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களில் உள்ளது போல், நூலில் உள்ள பதிவைக் காட்டும் பதிகம் எல்லா நூல்களிலும் அமைந்துள்ளது. 

5000 பாடல் கொண்ட மச்சபுராணத்தில் பாயிரம்  மட்டும் 52 பாடல். 

எல்லா நூல்களின் தொடக்கத்திலும் கடவுள் வாழ்த்துப் பகுதி உள்ளது. இது அவரவர் மனம்போல் சுருக்கமாகவும் விரிவாகவும் உள்ளது. 

முனிவர்கள் கேட்க, நைமிசாரம் என்னுமிடத்தில் சூதமுனிவர் இப் புராணத்தைச் சொன்னார் என்று அவற்றில் சொல்லப்பட்டிருக்கும். 

பெருங்காப்பிய இலக்கண நெறிக்கேற்க நாட்டுச் சிறப்பு, நகர்ச் சிறப்பு ஆகியவை அவற்றில் கூறப்பட்டிருக்கும். 

இந்தப் புராணம் எந்தத் தெய்வத்துக்குரியது என்று சில புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும். 

வேறு சில மகாபுராணங்களில் உலகத் தோற்றம், உலக ஒடுக்கம் பற்றிக் கூறப்பட்டிருக்கும். 

இங்குக் காலம் பற்றிய விளக்கம் அமைவதுண்டு. தேவர்க்குரிய கால அளவுகள், யுகங்கள், யுகங்களில் மக்கள் இயல்பு முதலானவை இங்குச் சொல்லப்படும்.

சில புராணங்கள் கலியுக தர்மத்தை விரிவாகப் பேசும். இக்கால நடைமுறையில் உள்ள செய்திகள் இங்குக் கூறப்படும். இவற்றில் கற்பனைக் கண்ணோட்டமும் இருக்கும். 

அடுத்து, சூரியமண்டலம், பிற மண்டலங்கள், மூவகை உலகம், நாவலந்தீவு முதலிய 7 தீவு, 7 சமுத்திரம், நரகம் பற்றிய செய்தி இருக்கும். இவை கற்பனை. 

எல்லாப் புராணகளும் வருணாசிரம தர்மத்தை வலியுறுத்துகின்றன. 

அடுத்து அறிவு முதிர்ந்த முனிவர் மரபு, வீரம் மிக்க அரசர் மரபு ஆகியவை விரிவாகப் பேசப்படும். 

14 ஆம் நூற்றாண்டு கடவுள்மாமுனிவர் பாடிய வாதவூரடிகள் புராணம் முழுவதும் பக்தியை மட்டுமே பேசுகிறது. 

18 ஆம் நூற்றாண்டில் கச்சியப்பர் பாடிய தணிகை புராணம் கோவை நூல்களில் உள்ள அகத்துறைச் செய்திகளையெல்லாம் தொகுத்துக் கூறுகிறது. 

புராணம் பாடிய எல்லாப் புலவர்களும் சந்தப்பாடல்களை இணத்துள்ளனர். யமகம், திரிபு, மடக்கு அணிப்பாடல்களும் அவற்றில் உண்டு. 

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை 4 அடியின் மிக்கு வந்த தாழிசைப் பாடல்களையும், மிறைகவிகளையும் தம் புராண நூல்களில் சேர்த்துள்ளார். 

பல புராணங்களில் இறைவனைப் போற்றும் துதிப்பாடல்கள் பல  உள்ளன. 

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், முன்னுரை, பக்கம் 4

No comments:

Post a Comment