Pages

Sunday, 9 November 2025

தக்கயாகப்பரணி பாடியது பற்றிய கதை

வீரசிங்காதன புராணம் 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு நூல். அதில் அகளங்கச் சோழன் சருக்கம் என்பது ஒரு பகுதி. அதில் ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணி பாடிய வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது.  

இராசராசன் காலம். குடந்தையில் வீரசிங்காதன மடம் என்று ஒரு மடம் இருந்தது. அதில் ஒரு சிவயோகி. அவர் தேவாரப் பாடல்களைப் பாடிக்கொண்டு வீடு வீடாகச் சென்று பிச்சை வாங்கி உண்டு வாழ்ந்துகொண்டிருந்தார். 

ஒருநாள்,

ஒட்டக்கூத்தர் இல்லத்துக்கு முன் வந்தார். 

"கல் ஆல் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்
எல்லாம் ஒரு தேராய் அவன் மறை பூட்டி நின்று உய்ப்ப
வல்லாய் எரி காற்றீர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எயில் எய்தானிடம் வீழிம் மிழலையே"

  • கல்லால மரத்தின் கீழ் இருப்பனே! காப்பாற்று. வானவர்களை தேராகவும், மறைகளைக் குதிரைகளாகவும், தீயைக் காற்றாகவும், திருமாலை அம்பாகவும், வாசுகி பாம்பை நாணாகவும், மலையை வில்லாகவும் கொண்டு மூன்று எயில்களை அழித்தவனாகிய திருவீழிமிழலை சிவனே காப்பாற்று.

என்னும் சம்பந்தர் தேவாரத்தைப் பாடிக்கொண்டு வந்தார். ஒட்டக்கூத்தர் பாடலைக் கேட்டார். ஒட்டக்கூத்தருக்குப் பொருள் விளங்கவில்லை. 

பாடலின் பொருள் என்ன என்று பாடியவரையே ஒட்டக்கூத்தர் கேட்டார். 

"இதன் பொருளை யான் அறிந்திலேன். நீரும் இதனை அறியவல்லீர் அல்லீர்" என்று சினத்துடன் கூறினார். 

அதனைக் கேட்டுச் சினம் கொண்ட ஒட்டக்கூத்தர் தன்னிடமிருந்த கசையால் சிவயோகியாரை நையப் புடைத்தார். சிவயோகியார் அவ்விடத்திலேயே விழுந்து இறந்துபோனார். 

மடத்தில் இருந்தவர்கள் செய்தியை அறிந்தனர். ஒட்டக்கூத்தரைப் பழிவாங்க ஆயுதங்களோடு வந்து அவரது இல்லத்தைச் சூழ்ந்துகொண்டனர். 

இதை எதிர்பார்த்த ஒட்டக்கூத்தர் அரசனிடம் சென்று முறையிட்டார். 

அப்போது அங்கு வந்த அடியவர்கள் ஒட்டக்கூத்தரைத் தங்களிடம் விட்டுவிடுமாறு அரசனை வேண்டினர். 

அரசன் ஒட்டக்கூத்தருக்குப் பதிலாகத் தன் மகனைப் பல்லக்கில் ஏற்றி மறைத்து அனுப்பிவைத்தான். 

கூத்தர் இல்லம் வந்ததும் பல்லக்கைத் திறந்து பார்க்க, பல்லக்கில் இருந்தவர் அரசனின் மகன் எனத் தெரியவந்தது. 

மட அடியவர்கள் மீண்டும் அரசனிடம் வந்து முறையிட்டனர். அப்போது ஒட்டக்கூத்தர் தானே அவர்கள்முன் வந்து சரணடைந்தார்.    

தான் நீராடிப் பூசை முடிக்கும் வரையில் தன்னைக் கொல்லாமல் இருக்கும்படி கூத்தர் அவர்களை வேண்டிக்கொண்டார். அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கூத்தர் அரிசிலாற்றில் நீராடினார். பின்னர் அருகில் இருந்த முளைச்சாள் அம்மை கோயிலில் புகுந்து தாளிட்டுக்கொண்டார். 

மடத் தொண்டர்கள் வெளியில் காத்திருந்தனர். 

தேவி கூத்தர் முன் தோன்றினார்.

"உன் குலதெய்வமாகிய வீரபத்திரன் மீது ஒரு பிரபந்தம் பாடுக" என்று தேவி ஒட்டக்கூத்தரிடம் கூறினாள். 

"பாடுகிறேன். அதனை நீதான் எழுதவேண்டும்" என்றார் கூத்தர். 

தேவி ஒப்பினாள். 

ஒட்டக்கூத்தர் வீரபத்திரன் வெற்றியை, தக்கயாகப் பரணி என்னும் நூலாகப் பாடினார். 

தேவி எழுதிக்கொண்டிருந்தாள். அப்போது, அவளது நான்கு கைகளில் எழுதிய கை ஒன்றில் இருந்த தீபம் அசைந்தது. அதனைக் கண்ட கூத்தர் "கைத்தீபம் அசைவது என்" எனக் கூறி, தேவியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். 

வீரச்சுவைப் பாடல்கள் முடிந்தன. 

கூத்தர் தம் பிழையை உணர்ந்தார். பொறுத்தருளும்படித் தேவியை வேண்டினார். 

"நீ உன் உணர்வு இன்றிச் செய்த செயல் அது. அதைப்பற்றிக் கவலைப்படாதே" என்று கூறி, தேவி ஒட்டக்கூத்தருக்கு அருள் புரிந்தாள். 

தாம் எழுதிய தக்கயாகப்பரணி நூலை ஒட்டக்கூத்தரைக் கொல்லக் காத்திருந்த மட அடியார் கையில் கொடுத்தாள். 

அதனை வாங்கிப் படித்த அடியவர்கள் "நீர் செய்த கொலைக்கு இந்த நூலே கழுவாய்" என்று சொல்லி, கூத்தரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். 

ஈட்டி எழுபது


இந்தக் கதையில் வரும் அரசனுக்குப் பதிலாக, சோமன் வள்ளலையும், மட-அடியவர்களுக்குப் பதிலாக, செங்குந்தரையும் புகுத்தி, ஈட்டி எழுபது என்னும் நூல் செய்யப்பட்டுள்ளது. 

இது 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய சாதிக் கதைகளில் இதுவும் ஒன்று. 

வரலாற்றுப்படி இராசராசனுக்குப் பிள்ளை இல்லை. கதையில் மகன் இருப்பதாகக் கூறப்படுள்ளது. 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 341 

No comments:

Post a Comment