Pages

Saturday, 22 November 2025

வரிக்கூத்து

வரிக்கூத்து என்பது பாடிக்கொண்டு ஆடுதல். 

வரிக்கூத்து 100 வகைப்படும் எனக் கூடும் அடியார்க்கு நல்லார் கலிவெண்பா ஒன்றை சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டுகிறார். 

அந்தப் பாடல்:

சிந்துப் பிழுக்கையுடன், சந்தியோர்முலை,
கொந்தி, கவுசி, குடப் பிழுக்கை, - கந்தன்பாட்டு,
ஆலங்காட்டு-ஆண்டி, படுமணல், எல்லிச்சி,
சூலம் தரு நட்டம், தூண்டிலுடன், - சீலம் மிகும் 
ஆண்டி, அமண், புனவேடு, ஆளத்தி, கோப்பாளி, 

பாண்டிப் பிழுக்கையுடன், பாம்பாட்டி - மீண்ட
கடவுட்சடை, வீரம், மா கோசம், காமன்
மகிழ் சிந்து, வாமன ரூபம், - விகட நெடும் 
பத்திரம், கொற்றி பலகை, வான் பப்பரப் பெண்டு
அத்த சம்பாரம், தகுணிச்சம் - கத்தும்

முறை ஈண்டிரும் சிந்து, முடிதம் மன்னப்
பறை, பண்டிதன் புட்ப பானம் - இறை பரவி,
பத்தன் குரவையே, பப்பறை, சாவதன்,
பித்தனொடு, மாணி பெரும் பிழுக்கை, -  எத்துறையும்
ஏத்திவரும் கட்களி, யாண்டு விளையாட்டு, 

கோத்த பறைக் குடும்பு, கோல்கூத்து, - மூத்த
கிழவன், கிழவியே, கிள்ளுப்  பிறாண்டி,
அழகுடைய பண்ணி, விகடாங்கம், - திகழ் செம்பொன்
அம்மானை, பந்து, கழங்கு ஆடல், ஆலிக்கும் 
விண்ணகக் காளி விறல் கொந்தி, - அல்லாத 

வாய்ந்த தனிவண்டு, வரிச்சி, பிச்சியுடன்,
சாந்தமுடைய சடாதாரி, - ஏய்ந்த விடை
தக்க பிடார், நிர்த்தம், தனிப்பாட்டுச் சாதுரங்கம், 
தொக்க தொழில் புனைந்த சோணாண்டு, - மிக்க
மலையாளி, வேதாளி, வாணி, குதிரை, 

சிலையாடு, வேடு சிவப்பு, - தலையில்
திருவிளக்கு, பிச்சி, திருக் குன்றயில் பெண்டு,
இருள் முகத்துப் பேதை, இருளன், - பொருமுகத்துப்
பல்லாங்குழியே, பகடி, பகவதியாள்         
நல்லார் தம் தோள் வீச்சு நச்சாழல் - அல்லாத

வந்தி அவலிடி, ஊராளி, யோகினிச்சி,
குந்திவரும் பாரன், குணலைக் கூத்து - அந்தியம்போது
ஆடும் அணி செய்யும் உள்ளிப் பூ, ஐயனுக்குப்
பாடும் பாட்டு, ஆடும் படுபள்ளி, - நாடறியும்
கும்பீடு, நாட்டம், குணாட்டடம், குணலையே, 

துஞ்சாத சும்மைப் பூ, சோனகம், - மஞ்சரி
ஏற்ற உழைமை, பறைமை, முதல் என்று எண்ணிக்
கோத்த வரிக்கூத்தின் குலம். 

இந்த வரிக் கூத்து பற்றிச் சில செய்திகள்


இவற்றுள் அம்மனை, உந்தி, சாழல், தோள்வீச்சு (தோள்-நோக்கம்) போன்ற பாடல்களைத் திருவாசகத்தில் காணலாம். 

கழங்கு, குணலை, குரவை, பகடி, பகவதி, பந்து, பறை, பாம்பாட்டி, பிடாரன் போன்றவற்றில் சில சிலப்பதிகாரத்திலும், 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் இலக்கியங்களிலும் உள்ளன. 

ஆலங்காட்டாண்டி என்பது காரைக்காலம்மையார் ஆலங்காட்டு ஆட்டத்தோடு தொடர்புடையதாகலாம். 

கம்பைப் பூ என்பது கம்மலோ கம்மல் விளையாட்டு ஆகலாம். 
ஆயின் இது வள்ளைப் பாட்டு. 
வள்ளைப்பாட்டு கலிங்கத்து பரணியில் வருகிறது. 
கம்மலோ கம்மல் சொல்லாட்சி 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இரணிய வதைப் பரணியில் வருகிறது. 

பல்லாங்குழி இன்றைய ஆட்டங்களில் ஒன்று 

படுபள்ளி என்பது பள்ளு நூலில் வரும் பாடல் ஆகலாம். 

அவலிடி என்பது அவல் இடிக்கும் வள்ளைப்பாட்டு. 

பிச்சி என்பது கோயில்களில் திருவிளக்கு வைக்கும் தொழில்விளையாட்டு. 

பெண்பால் பிழுக்கை என்பது சிந்து பாடல்களைப் பாடிக்கொண்டு பெண்கள் விளையாடுதல். 

ஏற்ற உழைமை என்பது ஏற்றப்பாட்டு

மாதவி ஆடிய 11 ஆடலும் வரிக்கூத்துகளே. 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 58

No comments:

Post a Comment