அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும்போது சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டுள்ள சொற்களின் பொருத்த நயத்தை விளக்குகிறார்.
கணவன் இல்லாதபோது சிலம்பு அணிவதில்லை
கோவலன் மாதவியை விட்டுவிட்டுக் கண்ணகியிடம் மீள்கிறான். அவளுடன் வாழத் தன்னிடம் பொருள் இல்லை என்று நாணி நிற்கிறான். கண்ணகி சிலம்பு உள; கொள்க என்கிறாள்.
கணவன் தன்னிடம் இல்லை என்பதால் அவள் தன் சிலம்பை காலில் அணியாமல் பாதுகாப்பாக வைத்திருந்தாள். அணிந்திருந்த பிற அணிகலன்களை எல்லாம் மாதவிக்காகக் கொடுத்துவிட்டாள். இது கோவலனுக்குத் தெரியாது. எனவே இவ்வாறு கூறினாள் - என்று எழுதுகிறார்.
கருங்கண் - செங்கண்
கண்ணகி செங்கண் சிவப்ப அழுதாள் என்று துன்பமாலையில் குறிப்பிடுகிறார். கண்ணகி கருங்கணும், மாதவி செங்கணும் என்று இந்திரவிழவு ஊர் எடுத்த காதையில் குறிப்பிட்டிருந்தார். உடலுறவு இல்லாதபோது கண் சிவப்பது இல்லை. கூடித் திளைத்த பின் கண் சிவப்பு ஆகிவிடும். கோவலன் திரும்பி வந்த பின்னர் கண்ணகி கூடி மகிழ்ந்தனரா இல்லையா என்னும் ஐயப்பாட்டை உணர்த்தவே கருங்கண், செங்கண் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. வழியில் காவுந்தி ஐயை துணை இருந்ததால் புணர்ச்சி இல்லை - என்கிறார்.
கொன்றச் சிலம்பு கொணர்க
என் தாழ்பூங்கோதை தன் காற்சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகில், கொன்று அச் சிலம்பு கொணர்க - என்று பாண்டியன் காவலனை ஏவுகிறான். கொல்ல அச் சிலம்பு கொணர்க - என்று கூற நினைத்தவன், வினைவிளை காலம் ஆதலின் வாய் குளறிக் கூறிவிடுகிறான் - என்று விளக்குகிறார்.
பொய்கரி
காவலன் கோவலனைக் கொல்லத் தயங்கியபோது பொற்கொல்லன் கள்வன் ஒருவன் தப்பித்துக்கொண்டதாக, கட்டுக்கதை ஒன்றைக் கூறுகிறான். இந்தக் கட்டுக்கதை பொய்கரி என்று கூறப்பட்டுள்ளது - என்கிறார்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 49
No comments:
Post a Comment