Pages

Saturday, 22 November 2025

ஆடலரங்கு அமைத்தல்

நாடக அரங்கு, நாடகமேடை அமைக்கும் நிலம், அளவு முதலியவை பற்றியும், அரங்கில் திரை போன்றவற்றை அமைக்கும் முறை பற்றியும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. 

இப் பகுதிக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் கீழ்க்காணும் பாடலை அப் பகுதிக்கு விளக்கமாகக் குறிப்பிட்டு இதற்கும் விளக்கம் தருகிறார்.  

பாடல்

தந்திரத்து அரங்கு இயற்றும் காலை 
அறன் அழித்து இயற்றா அழகு உடைத்து ஆகி
நிறைகுழி, பூழிகுழி நிறைவாற்றி
நாற்றமும் சுவையும் மதுரமும் ஆய், கனம்
தோற்றிய திண்மைச் சுவடு அது உடைத்தாய்
என்பு உமி கூர்ங்கல் களி உவர் ஈளை
துன்ப நீறு துகள் இவை இன்றி
ஊர் அகத்து ஆகி உளைமான் பூண்ட 
தேரகத்தோடும் தெருவு முகம் நோக்கிக்
கோடல் வேண்டும் ஆடரங்கு அதுவே

இலக்கண (தந்திரம்) முறைப்படி அரங்கு அமைக்க வேண்டும்.
அறநெறி பிறழாமல் அமைக்க வேண்டும்
அழகுடன் அமைக்க வேண்டும்
மண் கொட்டிய நிலமாகவோ, புழுதி படிந்த நிலமாகவோ இருக்கக் கூடாது
மணக்கும் நல்ல மண் தரையாக இருக்க வேண்டும் 
இறுகிய மண் தரையாக இருக்க வேண்டும் 
  • எலும்பு
  • உமி
  • கூர்மையான கல் 
  • களிமண் தரை
  • உவர்மண் தரை
  • இளகும் மண்
  • சாம்பல்
இல்லாத மண்தரையாக இருக்க வேண்டும்
தோரோடும் தெருவைப் பார்ப்பதாக அரங்கு இருக்க வேண்டும்.  

இந்த எடுத்துக்காட்டுப் பாடல் இத்தகைய செய்திகளைத் தருகிறது. 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 47

No comments:

Post a Comment