Pages

Sunday, 23 November 2025

கவவு என்னும் உரிச்சொல்

தொல்காப்பியம் தொகுத்து வழங்கும் 120 உரிச்சொற்களுள் ‘கவவு’ என்பது  ஒன்று.

ஒரு சொல் பல பொருளுக்கு உரிமை பூண்டும், பல சொல் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டும் செய்யுளுக்கு உரிமை உடையதாக வரும் சொல் உரிச்சொல் எனப்படும். 


“கவ வகத்திடுமே” (தொல். உரியியல்.60) 
என்னும் நூற்பாவின் வழி 
‘கவவு’ என்னும் உரிச்சொல் 
‘அகத்திடுதல்’ என்னும் பொருள் உணர்த்தும் 
தன்மை பெறப்பட்டது. 

இசை, பண்பு, மற்றும் குறிப்பு ஆகிய தோற்றக் களன்களுள், இக்கவவு என்னும் உரிச்சொல் குறிப்புப் பொருண்மையில் தோன்றும். 

இவ்வுரிச்சொல் ‘வினையடி’ என்னும் இலக்கண வடிவில் அமைந்துள்ளதாக இசரயேல் குறிக்கின்றார். (இசரயேல், 1977, ப. 139). 

இவ்வுரிச்சொல் வேறு வகைப்பட்ட இலக்கண வடிவங்களிலும் பொருண்மைகளிலும் சங்கச்செய்யுள்கள் முதலான இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. 

இருப்பினும் பெருமளவில் கவவு என்னும் சொல் ‘தழுவுதல்’, ‘முயக்கம்’ முதலிய பொருண்மைகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

காதலர்ப் பிரியாமல் கவவு கை நெகிழாமல் வாழவேண்டும் என்று கண்ணகி கோவலன் மணமக்களை வாழ்த்துவதாக, சிலப்பதிகாரம் கூறுமிடத்தில் கவவு என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது. 

வாயால் கவ்வுவது போல் கையால் கட்டி அணைத்தலுக்குப் பெயர் கவவு  

வாயால் கவ்வும்போது கவ்வும் பொருள் உள்ளே இடப்படுகிறது. இது அகத்து இடுதல் தானே?

கையால் கவவும்போது கைகளுக்கு உள்ளே உடம்பு இடப்படுகிறது. தழுவப்படுகிறது.   தழுவப்படுவது அகத்திடுதல் தானே?

எனவே
கவவு என்பது
அகத்திடுதல் ஆகும்.  

No comments:

Post a Comment