இளங்கோவடிகள் துறவு பூண்டதைத் தெரிவிக்கும் பதிகப் பாடல் ஒன்று உண்டு. அது அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையில் உள்ளது.
பாடல்
குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று
ஏழ்பரி நெடுந்தேர் சோழன் தன்மகள்
நற்சோணை ஈன்ற மக்கள் இருவருள்
முன்னோன் தன்னைப் பின்னர் இயற்றிப்
பின்னோன் தன்னையும் பெருநம்பி ஆகு என
அன்னவர் தம்மொடு தென்னர் செம்பியர்
தன் அடி போற்றத் தமனிய மண்டபத்துள்
சிங்கம் சுமந்த பொங்கு அணை மீமிசை
உவரித் திரையின் கவரி இரட்ட
வேந்தன் இருந்துழிச் சார்ந்த நிமித்திகன்
அடிமுதல் முடிவரை நெடிது தோக்கி
இன்தோள் கழியப் பொன்திகழ் உலகம்
சேர்தி நீ எனச் சேரலற்கு உரைத்து அவன்
மைந்தரை நோக்கி, நந்தாச் செங்கோல்
அந்தம் இல் உலகத்து அரசாள் உரிமை
இளையோற்கு உண்டு என உளைவனன் தனி வெகுண்டு
அழுக்காற்று ஒழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன்
கண் எரி தவழ அண்ணலை நோக்கும்
கொங்கு அவிழ் நெடுந்தார்த் கொடித்தேர்த் தானைச்
செங்குட்டுவன் தன் செல்லல் நீங்கப்
பகல் செல் வாயில் படிமையோர் தம் முன்
அகல் இடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண் நெடும் தூரத்து
அந்தம் இல் இன்பத்து அரைசாள் வேந்து
ஆயினன்.
என்று அந்தப் பாடல் வரிகள் அமைந்துள்ளன.
சேரன் அரியணையில் இருந்தான்
அவனொடு அவன் மகன்கள் இருவரும் இருந்தனர்
நிமித்திகன் ஒருவன் அவைக்கு வந்தான்
இரண்டு மகன்களையும் உற்று நோக்கினான்
அரசாளும் உரிமை இளையானுக்கு உண்டு - என்று கூறினான்.
மூத்தவன் செங்குட்டுவன் வெகுண்டான்.
இளையவன் இளங்கோ மூத்தவன் செங்குட்டுவன் சினத்தைத் தணிக்க, தவம் செய்வோர் இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டான்
முடிவே இல்லாத பேரின்ப உலகை ஆள்பவன் ஆயினான்.
இவை அந்தப் பாடல் வரிகளில் சொல்லப்பட்ட செய்திகள்.
- இந்தப் பாடலின் முதல் 3 வரிகள் சிலப்பதிகாரம் 29-வது வாழ்த்துக் காதையின் தொடக்கமாக உள்ளன.
- கடைசியில் உள்ள 6 வரிகள் சிலப்பதிகாரம் வரம்தரு காதையில் உள்ளன.
- ஏனையவை துறவு நிகழ்ந்ததைக் கூறும் அடியார்க்குநல்லார் விளக்கம்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 38
No comments:
Post a Comment