Pages

Friday, 21 November 2025

பிறக்கு rear

சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் பிறக்கு என்னும் சொல்லுக்கு பொருளும் விளக்கமும் தருகிறார். 

இது ‘பிருதக்’ என்னும் வடசொல்லின் திரிபு 
என்கிறார். 

பிற என்னும் சொல்லைத் தொல்காப்பியம் இடைச்சொற்களில் ஒன்று எனக் காட்டுகிறது. இதன் வழி பிறன், பிறள், பிறர் என்னும் சொற்களும் தோன்றியுள்ளன. இவை பிற என்னும் சொல்லின் வழியில் தோன்றிய பெயர்ச்சொற்கள். 

பிறக்கு என்பது பிற கு என்னும் சொற்களின் புணர்ச்சி. 
மலைக்கு - என்னும்போது ‘கு’ என்னும் 4-ஆம் வேஏற்றுமை உருபு இடம் என்னும் பொருளை உணர்த்துவதை அறிவோம். 

மலையனுக்குக் கொடு என்பதை மலையனிடம் கொடு என்றும் கூறலாம். இதனை ‘உருபு மயக்கம்’ என்கிறோம். 

இப்படி, கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்பதை ‘கடலைப் பின்புறம் ஒதுங்கச் செய்த’ என்று செந்தமிழ் நெறியில் பொருள் காணலாம். 

இது இப்படி இருக்க, அடியார்க்கு நல்லார் வடசொல்லின் திரிபு எனல் அவரது வடமொழிப் புலமையை வெளிப்படுத்துவதே அன்றி வேறு இல்லை. 

இச்சொல்லின் ஆட்சி 3 இடங்களில் காணப்படுகிறது. 

1

திருமாவளவன்        90
வாளும் குடையும் மயிர் கண் முரசும்
நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என
புண்ணிய திசைமுகம் போகிய அ நாள்
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய        95
பகை விலக்கியது இ பயம் கெழு மலை என
இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு
சிலப்பதிகாரம் 5 - 95

2

தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி
கங்கை பேர் யாற்று கரை போகிய        215
செங்குட்டுவனோடு
சிலப்பதிகாரம் 30 - 214

3

‘கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்’ என்று பதிற்றுப்பத்து 5-ஆம் பத்து பதிகம் குறிப்பிடுகிறது. 

இந்த இடங்களிலெல்லாம் 
பிறக்கு என்பதற்கு
பின்புறம் 
the rear
என்று 
பொருள்  கொள்வோமாக.

4

நன்னூல் பிறக்கு என்னும் இடைச்சொல்லைக் குறிப்பிடுகிறது. 

  • யா
  • கா
  • பிற
  • பிறக்கு
  • அரோ
  • போ
  • மாது
  • இகும்
  • சின்
  • குரை
  • ஓரும்
  • போலும்
  • இரும்
  • இட்டு
  • அன்று
  • ஆம்
  • தாம்
  • தான்
  • கின்று
  • நின்று
அசைமொழி  
நன்னூல் நூற்பா 440

பிறத்தல் பிணிபடல் மூத்தல் இறத்ததல்
திறப்பட்ட நான்கினும் தீர்வு இதற்கு என் என
இறத்தலும் ஆம்கொல் எனக்கும் என்று எண்ணிப்
பிறக்கு அதனுள் செல்லான் பெருந்தவப் பட்டான். 

இந்தப் பாடல் பிறக்கு என்னும் சொல்லாட்சியைக் காட்டும் மயிலைநாதர் உரை மேற்கோள்.  

பிறத்தல் பிணிபடல் மூத்தல் இறத்ததல் - இந்த 4-ம் இல்லாமல் இருக்கத் தீர்வு என்ன என்று எண்ணி, தவம் மேற்கொண்டவன் தொடர்ந்து பிறத்தல் முதலானவற்றுள் செல்லமாட்டான். 

இதில் பிறக்கு என்னும் சொல் ‘தொடர்ந்து’ என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. ‘மேலும் செல்லான்’ என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். 

‘தொடர்ந்து’, ‘மேலும் செல்லான்’ என்னும் பொருள்கள், மேலே காட்டப்பட்ட 3 சொல்லாட்சிகளுக்கும் பொருந்தும். 

No comments:

Post a Comment