இது சொல்லாட்சி அடிப்படையில் தொகுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு.
அறிந்து என்னும் சொல் திருக்குறளில் 38 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அவை என்ன சொல்கின்றன என்பது இங்குத் தொகுத்துக் கூறப்படுகிறது.
அறிந்து
- அறியவேண்டியதை அறிந்துகொண்டு அடக்கத்துடன் இருந்தால் சிறப்பினை அடையலாம்.
- செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து ஆற்றின் அடங்க பெறின்
- ஒழுக்கத்திலிருந்து வழுக்கி விழுந்தால் துன்பம் உண்டாகும் என்பதை உணர்ந்து, மனவலிமை உள்ளவர் ஒழுக்கம் தவறாமல் நடந்துகொள்வர்.
- ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து
- ஒழுக்கம் தவறினால் துன்பம் உண்டாகும் என்பதைத் தெரிந்துகொண்டவர் யார் மீதும் பொறாமை கொண்டு அறமல்லாச் செயலைச் செய்யமாட்டார்.
- அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து
- அறநெறி இன்னதென உணர்து, பேராசைப்படாமல் வாழ்பவரின் திறமையை உணர்ந்துகொண்டு செல்வம் அவரிடம் சேர்ந்துகொள்ளும்.
- அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு
- அறம் இன்னதென உணர்ந்து வாழ்வில் கடைப்பிடித்து மூத்திருக்கும் அறிவுடையவர் நட்பினை நாம் தேடிக்கொள்ள வேண்டும்.
- அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன் அறிந்து தேர்ந்து கொளல்
- உதவியும் பண்பு உள்ளவருக்கே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த உதவி அவருக்குத் துன்பம் விளைவிக்கும்.
- நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை
- தன்னால் எது செய்யமுடியும் என்று தெரிந்துகொண்டு செய்தால் எந்தச் செயலும் நிறைவேறும்.
- ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி செல்வார்க்கு செல்லாதது இல்
- தன் வருவாயின் அளவுக்கேற்பக் கொடை வழங்குவதே பொருளைப் போற்றும் நெறி ஆகும்.
- ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் போற்றி வழங்கும் நெறி
- தனக்கு வரும் வருவாயின் அளவை அறிந்துகொண்டு அதற்கேற்ப வாழாதவன் வாழ்க்கை இருப்பது போன்றி இல்லாமல் போய்விடும்.
- அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல இல்லாகி தோன்றா கெடும்
- காலம் பார்த்துக் கருவியின் துணை கொண்டு செய்தால் எதனையும் செய்து முடிக்கலாம்.
- அரு வினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்
- செயலாற்றும் இடம் தனக்குச் சாதகமானதா என அறிந்துகொண்டு செய்தால் செய்ய முடியாதவரும் வெல்லலாம்.
- ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து போற்றார்-கண் போற்றி செயின்
- தனக்குச் சாதகமான இடம் அறிந்து செயல்பட்டால் வெல்ல நினைத்தவரைத் தோல்வியுறச் செய்யலாம்.
- எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து துன்னியார் துன்னி செயின்
- காலமும் இடமும் அறிந்து செயல்படுபவனிடம் செயலை ஒப்படைக்க வேண்டுமே தவிர, செயலாற்ற வல்லவன் என்று ஒருவனிடம் எந்தச் செயலையும் ஒப்படைக்கக் கூடாது.
- அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான் சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று
- பொறி என்பது ஒருவனைத் தேடிவரும் நல்ல காலம். இதனை விதி என்பர். நன்மை உண்டாக்கும் விதி ஒருவனுக்கு இல்லாமை அவனுக்குப் பழி ஆகாது. அறிய வேண்டியனவற்றை அறிந்து முயலாமல் இருத்தலே அவனுக்குப் பழி உண்டாக்கும்.
- பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி
- அறம் அறிந்தவன். ஆழமான சொல்லாற்றல் உள்ளவன். செயலாற்றும் முறைமை தெரிந்தவன். இப்படிப்பட்டவனைத் தனக்காகச் செயலாற்றும் துணைவனாகக் கொள்ள வேண்டும்.
- அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சி துணை
- செய்யவேண்டிய முறைமை தெரிந்திருந்தாலும், உலகியலை அறிந்து எதனையும் செய்ய வேண்டும்.
- செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்
- கேட்போரின் திறமையை அறிந்துகொண்டு எதையும் சொல்ல வேண்டும்.
- திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின் ஊங்கு இல்
- மிகப் பொருத்தமான சொல்லை கையாண்டு உரையாட வேண்டும்.
- சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அச் சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து
- தூது சொல்பவன் தன் கடமையை உணர்ந்து, இடம் பார்த்துப் பேச வேண்டும்.
- கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து எண்ணி உரைப்பான் தலை
- பேச்சுத் திறம் அறிந்தவர் அவையில் இருந்து கேட்போரின் தன்மையை உணர்ந்து பேச வேண்டும்.
- அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்
- பேச்சுத்திறம் அறிந்தவர் சொல்ல வேண்டிய முறைமை அறிந்து, நாக்குத் தடுமாற்றம் இல்லாமல் சொல்ல வேண்டும்.
- வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்
- அவையைக் கண்டு அஞ்சாமல் தக்க விடை சொல்லும் அளவுக்கு முறையாகப் படித்தறிய வேண்டும்.
- ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்-பொருட்டு
- பிறருக்குத் தீமை செய்யாமல் தேடிய செல்வம் அறத்தையும், இன்பத்தையும் பெற்றுத் தரும்.
- அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்
- அணிவகுத்துச் செல்வது படையின் கடமை. அது போரின் தனமையை அணிந்திருக்க வேண்டும்.
- தார் தாங்கி செல்வது தானை தலைவந்த போர் தாங்கும் தன்மை அறிந்து
- முறைமையைத் தெரிந்துகொண்டு செயலாற்றித் தன்னைப் பாதுகாப்புடன் உயர்த்திக்கொள்வானே ஆனால், பகைவனின் வீறாப்பு அழியும்.
- வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்-கண் பட்ட செருக்கு
- உண்ட உணவு செரிமானம் ஆன உணர்வு வந்த பின்னர் அளவோடு சாப்பிடுதல் உடலைப் பாதுகாக்கும் முறைமை ஆகும்.
- அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு
- உண்ட உணவு செரிமானம் ஆன பின், நன்கு பசி எடுத்த பின்னர் உண்ணவேண்டும்.
- அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல துய்க்க துவர பசித்து
- அளவுக்கு அதிகமாக உண்பவனிடம் நோய் நிலைத்திருப்பது போல, போதுமான குறைந்த அளவு உண்பவனிடம் இன்பம் நிலைத்திருக்கும்.
- இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் கழி பேரிரையான்-கண் நோய்
- சான்றாண்மை மேற்கொண்டு கடமையைச் செய்தல் சான்றோர் கடன்.
- கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவற்கு
- காதலனைப் பிரிந்திருக்கும் காலத்தில் காதலி தன் தோழியிடம் சொல்கிறாள். "என் கண்ணுக்குள் என் காதலர் இருக்கிறார். கண்ணுக்கு மை தீட்டினால் அந்த மையில் மறைந்துவிடுவார் என்று நினைத்து கண்ணுக்கு மை தீட்டாமல் இருக்கிறேன்" என்கிறாள் அவள்.
- கண்ணுள்ளார் காதலவராக கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து
- "என் நெஞ்சில் இருக்கும் காதலர் வெந்துவிடுவார் என்று சுடச் சுடச் சாப்பிடாமல் இருக்கிறேன்."
- நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து
- தண்ணீர் தூக்கிவிடும் என்று தெரிந்துகொண்டு நீந்துபவர் தண்ணீரில் பாய்ந்து மிதப்பது போல் என் பிணக்கு பொய்யாகிப் போய்விடும் என்று தெரிந்துகொண்டே என் கணவனிடம் நான் பிணக்குப் போட்டுக்கொள்கிறேன்.
- உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் பொய்த்தல் அறிந்து என் புலந்து
- தும்மினால் பிறர் வாழ்த்துவர். நான் என் கணவருடன் பிணக்குப் போட்டுக்கொண்டிருந்தேன். அவர் தும்மினார். நான் வாழ்த்துவேன் என்று அவர் எதிர்பார்த்தார்.
- ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து
No comments:
Post a Comment