Pages

Sunday, 12 October 2025

அறி (வினைத்தொகை)

இது சொல்லாட்சி அடிப்படையில் தொகுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு.


வினைத்தொகை


அறிகாட்சி (அறிந்த, அறிகின்ற, அறியும் காட்சி)

  • தன் கடமை இன்னது என உணர்ந்து அதனைச் செய்து மகிழ்ந்துகொண்டிருப்பவர் தன் கடமையைச் செய்ய முடியாத நிலை வந்தாலும் மனம் தளராமல் உலக நலனுக்காகத் தன் கடமையைச் செய்துகொண்டிருப்பர். 
  • இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன் அறி காட்சியவர்

அறிகுற்றம் (அறிந்த, அறிகின்ற, அறியும் குற்றம்)

  • தன் நெஞ்சமே தான் செய்தது குற்றம் என உணரும்போது, போற்றத்தக்க உடல் தோற்றத்தால் என்ன பயன்?
  • வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் தான் அறி குற்றப்படின்
அறிகொன்று (அறி > அறிகு ஒன்று) (அறிகு - மூன்று காலமும் காட்டும் சொல்)

  • அரசன் அறியவேண்டிய ஒன்றை அறியாதவனாக இருந்தாலும் அவனுடன் இருக்கும் அமைச்சன் அவனுக்கு எடுத்துரைக்க வேண்டியது கடமை. 
  • அறி கொன்று அறியான் எனினும் உறுதி உழை இருந்தான் கூறல் கடன்
அறிதோறு அறியாமை (அறி < அறிதோறு) (மூன்று காலமும் காட்டும் சொல்)

  • ஒன்று தெரியும்போது மற்றொன்று தெரியவில்லையே என்ற ஏக்கம் வரும். அதுபோல பெண்ணின்பம் துய்க்கும்போது மீண்டும் துய்க்க வேண்டும் என்னும் ஆவல் தோன்றிக்கொண்டே இருக்கும். 
  • அறிதோறு அறியாமை கண்டு அற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு

வியங்கோள் வினைமுற்று


அறிக 

  • தான் ஓர வஞ்சனையோடு செயல்படுவதை அவன் மனமே உணருமாயின் தனக்குக் கேடு வரப்போகிறது என்பதை அவன் உணர்ந்துகொள்ள வேண்டும். 
  • கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின்

  • தீங்கு செய்யும் ஒருவனுக்கு தீங்கு செய்யாமல் ஒருவன் இருப்பானாயின் அவனுக்குக் கேடு விளையாது என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 
  • அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி தீவினை செய்யான் எனின்

பெயரெச்சம்


அறிந்த 

  • அறிந்திருக்க வேண்டிய ஒன்றை அறிவதுதான் அறிவு. இப்படி அறிந்த பிள்ளைகளைப் பெற்றிருப்பதுதான் ஒருவருக்குச் சிறந்த செல்வம் ஆகும். 
  • பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற

  • வினைத்தொகை, வேற்றுமைத்தொகை என்றெல்லாம் சொல்லும்பொது ‘தொகை’ என்னும் சொல் வினையின் காலமும், வேற்றுமைப் பொருளும் தொக்கிக்கொண்டு நிற்பதை நாம் அறிவோம். 
  • அதுபோல, ‘சொல்லின் தொகை’ என்னும் தொடரில் சொல்லால் விளையும் பயன் தொக்கிக்கொண்டு / தொத்திக்கொண்டு நிற்கிறது
  • சொல்லின் பயனை உணர்ந்தவர் தூய்மையானவர்.
  • இவர்கள் அவையில் ஒன்றைச் சொல்லும்போது, அவையோர் அதனை எப்படி உணர்ந்துகொள்வார்கள் என்பதை எண்ணிப்பார்த்துச் சொல்ல வேண்டும். 
  • அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்

  • சொல்லின் தொகை அறிந்த தூய்மையாளர் ஒன்றை அவையில் சொல்லும்போது சொல்லும் முறைமை அறிந்து பக்குவமாகச் சொல்ல வேண்டும். 
  • வாய் தடுமாறாமல் சொல்ல வேண்டும்.
  • வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்

  • ஊர் அறிந்த கௌவை என்பது ஊரார் பேசிக்கொள்ளும் பேச்சு.
  • என் காதலனோடு எனக்கு இருக்கும் கள்ளத் தொடர்பை ஊரார் பேசிக்கொள்கின்றனர். 
  • இதற்குக் ‘கௌவை’ என்று பெயர். 
  • இப்படி அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். 
  • இப்படியாவது என் காதலனைப் பெற்றிருக்க வேண்டும். 
  • உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை பெறாஅது பெற்று அன்ன நீர்த்து

அறியா 

  • பகைவரால் அழிக்கப்படாமலும், அழிக்கப்பட்டாலும் இயற்கை வளம் குன்றாமலும் இருக்கும் நாடு மேன்மையான நாடு ஆகும்.
  • கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா நாடு என்ப நாட்டின் தலை

  • கைப்பழக்கம் இல்லாதவன் கை அறியாப் பேதை ஆவான்
  • கைப்பழக்கம் இல்லாமல் ஒன்றைச் செய்தால் அது நிறைவேறாது. 
  • பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா பேதை வினை மேற்கொளின் 

  • வானத்தில் அசையும் நிலாவுக்கும், மண்ணில் தோன்றும் பெண்ணின் முகத்துக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் தம் கண்களைச் சிமிட்டிக்கொண்டு பார்க்கின்றன. 
  • மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்


வினையெச்சம்


அறிய 

  • அறியச் செய்யற்க
  • அரசன் ஒற்றனுக்குச் சிறப்பு செய்யும்போது மற்றவர்களுக்குத் தெரியுமாறு செய்யக்கூடாது. செய்தால் இவன் ஒற்றன் என்று மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். 
  • சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை 

  • அறிய வல்லார் (வல்லார் - குறிப்பு வினைமுற்று)
  • அழும்படிச் செய்த தவற்றினைச் சுட்டிக் காட்டி இடித்துரைக்க வல்லவனை நண்பனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். 
  • அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் 

  • அறிந்தக்கடைத்தும் செய்க
  • செய்யும் முறைமையை நன்கு அறிந்திருந்தாலும், உலகியலோடு பொருந்துமாறு எதையும் செய்ய வேண்டும். 
  • செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்

  • அறியாது ஈந்தது
  • என் காதலி மலர் போன்ற கண்ணினை உடையவள். அவள் கண் அழும்படி ஊரார் என்னை அலர் தூற்றுகின்றனர். 
  • மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது அலர் எமக்கு ஈந்தது இ ஊர்

வினைமுற்று


அறிந்தேன் 

  • உயிரைக் கொல்லும் எமனை முன்பெல்லாம் எனக்குத் தெரியாது. 
  • என் காதலியின் கண்தான் எனக்கு எமன் என்பதை இப்போது தெழிந்துகொண்டேன். 
  • பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் பெண் தகையால் பேர் அமர் கட்டு

வினையாலணையும் பெயர்


அறியலம் 

  • என் காதலன் என்னிடம் காதல் குறும்புகளைச் செய்யும்போது எனக்கு நாணம் தெரியவில்லை. 
  • நாண் என ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின் 

அறியார் 

  • அறம் செய்வதற்கு மட்டும்தான் என்று கூறுபவர்கள் ஆழமாக எண்ணிப்பார்க்கத் தெரியாதவர்கள். 
  • அறியாதவர் செய்யும் மறச் செயலை மன்னிக்கவும் அன்பு வேண்டும்
  • அறியார் என்னும் சொல்லை இருமுறை ஒட்டிக்கொள்ள வேண்டும். 
  • இது தீவக அணி 
  • (விளக்கு ஒளி தருவது போல் ஒட்டிக்கொளும் சொல்லை ஒட்டிக்கொள்ளும் அணி) 
  • அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை

  • ஒருநாள் கூட நிம்மதியாக வாழத் தெரியாதவர்-தான் கோடிக் கணக்கில் எண்ணங்களைப் பறக்க விட்டுக்கொண்டு இருப்பார்கள்.  
  • ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல

  • தனக்கு இருக்கும் வலிமை தெரியாமல் ஏதோ ஊக்கத்தினால் உந்தப்பட்டுச் செயலாற்றினால், செய்யும்போதே முரிந்து விழுந்துவிடுவர். 
  • இப்படி விழுந்தவர்கள் பலர்.
  • உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்-கண் முரிந்தார் பலர்

  • அறிவு இன்னதெனத் தெரிந்துகொள்ளாதவர் ‘அறிவு அறியார்’ ஆவார். 
  • ஒருவர்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அறிவு அறியா ஒருவரை வல்லவர் என்று தெளிவாக நம்புதல் அறியாமை ஆகும். 
  • காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்

  • தான் சொல்வதைக் கேட்கும் அவையினரின் தன்மை அறியாமல் சொல்லிக்கொண்டிருத்தல் அறியாமை ஆகும். 
  • அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் வல்லதூஉம் இல் 

  • என் காதலனோடு என்னைச் சேர்த்து ஊரார் பேசுகின்றனர். அதனால் என் உயிர் என்னிடம் இன்னும் இருக்கிறது. இது அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது என் பாக்கியம். 
  • அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை பலர் அறியார் பாக்கியத்தால்

அறியார்-கொல் (கொல் என்பது இடைச்சொல்)

  • பொருளைப் பாதுகாத்து வைத்திருந்து சாகும்போது அதனை இழந்துவிடும் கொடியவர் பிறருக்குக் கொடுத்து அவர்கள் மகிழத் தானும் மகிழும் இன்பத்தை அறியமாட்டாரோ? 
  • ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர்

அறியார்க்கு 

  • தான் மனம்  நொந்துகொண்டிருப்பதை உணர்ந்துகொள்ளாத ஒருவரிடம் தன் நோவைச் சொல்ல வேண்டாம்.
  • தன் மென்மையைப் பகைவனிடம் வெளிப்படுத்தக் கூடாது. 
  • நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து

அறியான் 

  • தன்னிடம் இருக்கும் செல்வத்துக்கு ஏற்ப வாழாதவன்
  • தன் வலிமை முதலானவற்றை அறியாதவன் 
  • தன்னைத் தானே வியந்து பெருமை பட்டுக் கொள்பவன்
  • விரைவில் கெட்டு ஒழிவான். 
  • அமைந்தாங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்

  • அறியவேண்டிய ஒன்றை அரசன் அறியாதவனாக இருந்தாலும், அவனுக்கு அருகில் இருக்கும் அமைச்சன் அரசன் அறிக்க வேண்டியதை அரசனுக்கு எடுத்துரைக்க வேண்டும். 
  • இது அமைச்சனின் கடமை.  
  • அறி கொன்று அறியான் எனினும் உறுதி உழை இருந்தான் கூறல் கடன் 

  • எதற்கெடுத்தாலும் அஞ்சுபவனாகவும் 
  • ஏதும் அறியாத அப்பாவியாகவும்
  • பொறுமை இல்லாதவனாகவும் 
  • ஈகைக்குணம் இல்லாதவனாகவும்
  • பகைவனிடம் தஞ்சம் அடைபவனாகவும்
  • இருக்கும் அரசன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.
  • அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு


No comments:

Post a Comment