வினைமுற்றுகள் பெயராக மாறி வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது அவற்றை வினையாலனையும் பெயர் என்கிறோம்.
அறி என்னும் ஏவல் வினைமுற்று பகுதியாக நின்று
காலம்,
எதிர்மறை
முதலானவற்றைக் காட்டும் இடைச்சொற்களுடன் இணைந்து,
வினையெச்சம்,
பெயரெச்சம்,
முற்றெச்சம்,
வினைமுற்றுச் சொற்களாக மாறி நின்று
பொருள் உணர்த்தும் இடங்கள்
திருக்குறளில் திறட்டப்பட்டுள்ளன.
அவை உணர்த்தும் கருத்துக்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.
அறிந்தார்
- வயிறு உண்ணும் உணவை அறவு அறிந்து நிறுத்திக்கொள்வது போல ஒருவர் தனக்கெனச் சேர்க்கும் பொருளையும் அளவோடு நிறுத்திக்கொண்டால் அது அறம். அவர் மனத்தில் அறம் நிலைத்திருப்பது போல திருட்டுத்தொழிலை அடிந்தவர் மனத்தில் திருட்டுத்தனம் நிறைந்திருக்கும்.
- அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் களவு அறிந்தார் நெஞ்சில் கரவு
- கற்று அறிந்தவர் உலகம் இன்புறுவதைப் பார்த்து இன்பம் அடைவர்.
- தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு காமுறுவர் கற்று அறிந்தார்
அறிந்தான்
- அறம் அறிந்தவனாகவும், கருத்தாழம் உள்ள சொற்களைப் பேசுபவனாகவும், செயலாற்றும் வல்லமை பெற்றவனாகவும் இருப்பவனை அரசன் தனக்குக்குத் துணைபுரியும் நண்பனாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சி துணை
அறிந்தது
- தலைவி சொல்கிறாள். என் தலைவன் என்னோடு இருக்கும்போது, மாலைக்காலம் எனக்குத் துன்பம் தந்தது இல்லை. இப்போது அவர் பொருளுக்காகப் பிரிந்துள்ளார். இப்போது மாலைக்காலம் எனக்குக் காமத் துன்பத்தை உண்டாக்குகிறது.
- மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்
அறிந்தவை
- மறைந்திருந்து கேட்கும் திறம் பெற்றவனாக ஒற்றன் இருக்க வேண்டும். மற்றவர்கள் அவனை ஒற்றன் என்று ஐயுறாவண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.
- மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று
அறிவில்லார்
- ஊரார் என் கண் முன்னரே என்னை அலர் தூற்றி, என்னை ஏளனம் செய்கின்றனர். அவர்கள் அறிவில்லாதவர்கள். அவர் இல்லாமல் நான் படும் பாடு அவர்களுக்குத் தெரியவில்லை.
- யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம் பட்ட தாம் படாவாறு
அறிவினர்
- தான் இன்பம் அனுபவிக்க ஒருவனைத் தழுவுபவள் ‘மாய மகளிர்’. பயனை ஆராய்ந்து பார்க்கும் அறிவு இல்லாதவருக்கு அவள் ‘பேரழகி’ (அணங்கு).
- ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப மாயமகளிர் முயக்கு
அறிவினவர்
- பிறரோடு மாறுபட்டு நடந்துகொள்பவர் துன்புறுத்தும் அறிவினைக் கொண்டவர் ஆவார். அவர்கள் தற்பெருமையை விரும்புவர். ‘மெய்ப்பொருள்’ அவர்களுக்கு விளங்காது.
- மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல் இன்னா அறிவினவர்
- அருள் என்னும் பொருளை அடைய அதனைத் தேடிக்கொண்டிருப்பவர் பொருளுக்காகத் தன் அழகை விற்கும் பெண்ணின் இன்பத்துக்காக அவளைத் தழுவ மாட்டார்.
- பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள் ஆயும் அறிவினவர்
- மதிநலம் - மதிக்கத் தக்க அறிவு. மாண்ட அறிவு - மாட்சிமை மிக்க அறிவு. பொது நலத்தார் - தன் உடல் நலத்தை எல்லாருக்கும் பொது ஆக்கும் பெண். எல்லாருக்கும் இன்பம் தரும் பெண்ணின் அழகை, சிறந்த அறிவாளி துய்க்க மாட்டான்.
- பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் மாண்ட அறிவினவர்
அறிவினார்
- சொல்லால் பெரிதும் பயன் விளையுமாறு பேசுபவர், பெரிய பயனை விளைவிக்காமல், சிறிது நேரம் இன்பம் தரும் சொற்களைப் பேசமாட்டார்கள்.
- அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும் பயன் இல்லாத சொல்
அறிவினார்க்கு
- பின்னர் விளையக்கூடியதை முன்னமேயே அறிந்து தடுத்துக்கொள்ளக் கூடிய ஒருவருக்கு அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் துன்பம் வருவதில்லை.
- எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்
No comments:
Post a Comment