Pages

Tuesday, 16 September 2025

ஒட்டக்கூத்தருக்கு அஞ்சாப் புலவர்கள்

இங்குக் காணப்படும் நெற்குன்றவாணர் முதலான புலவர்கள் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர்கள். 

நெற்குன்றவாணர்


கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர் கோகநகப்
பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூதலம் ஏழ்
காக்கின்ற மன்ன! கவி ஒட்டக்கூத்த! நின் கட்டுரையாம்
பாக்கண்டு ஒளிப்பர்களோ தமிழ்ப்பாடிய பாவலரே. (22)

பேரரசனைக் கண்டு சிற்றரரசர்கள் கடலுக்குள் ஒளிந்துகொள்ளவதில்லை. தங்கம் போன்ற தாமரை பூத்திருக்கிறது என்று (அக் குளத்தில்) கொட்டிப்பூ பூக்காமல் இருப்பதில்லை. நாட்டைக் காக்கும் மன்னனின் அரசவைக் கவிஞனாகிய ஒட்டக்கூத்த! உன்னைக் கண்டு முன்பே தமிழ் பாடிவந்த நாங்கள் இனி பாடமல் இருந்துவிடுவோமா?

கருமான்

செல்லன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம்
கொல்லன் கவியைக் குறை சொல்லுவோரைக் குறடுகொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டிப் பகைவர் முன்னே
அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே. (23)

நான் கொல்லன். என் குரு திருவேங்கடவன். என் கவியைக் குறை சொல்லுவோரைக் குறட்டால் பல்லைப் பிடுங்கிப் பருந்து போல் மாட்டித் தூக்கிச்சென்று என் பாட்டாகிய இரும்பு ஆணியால் பகைவர் முன்னிலையில் இரவும் பகலும் அடிப்பேன்.

அம்பட்டன்

விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலத்துப்
புண்பட்ட நெஞ்சொடு மிங்குநின்றாய் பொட்டையாய் புகலாய்
கண்பொட்டை யாயினு மம்பட்டனான் கவிவாணர் முன்னே
பண்பட்ட செந்தமிழ் நீயுந் திடுக்கிடப் பாடுவனே. (24)

முன்னிரண்டு அடி ஒட்டக்கூத்தன் பாடல்

வல்லூறு கண்ட கொக்கு போல விலவிலத்துப் பண்பட்ட நெஞ்சோடு நிற்கும் பொட்டையாய் பாடு.

பின்னிரண்டு அடி அம்பட்டன் பாடல்

"நான் அம்பட்டன். என் கண் பொட்டையாக்கப்பட்டாலும் கவிவாணர் முன்னே நீ திடுக்கிடும்படி பண்போடு கூடிய செந்தமிழ்ப் பாடல் பாடுவேன்"

பாடல் 25,26,27

குயவன்

மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன்வந் தெதிர்த்தவ னாரடா
கூனையுங் குடமுங் குண்டு சட்டியும்
பானையும் வனை யங்குசப் பையல்யான். (25)

ஒட்டக்கூத்தன் முன் இரண்டு அடி பாடுகிறான்.

முத்தமிழாகிய மும்மதம் பொழியும் யானையாகிய என்முன் வந்து எதிர்த்தவன் ஆரடா?

குயவன் பின் இரண்டு அடி பாடுகிறான்.

கூன், குடம், குண்டுசட்டி, பானை வனையும் அங்குசப் பயல்.

தச்சன்

சொன்ன சந்தக்கவி யாவருஞ் சொல்லுவர் சொற்சுவைசேர்
இன்ன சந்தக்கவி யேதென்ற போதில் எதிர்த்தவரை
வன்ன சந்தங்கெட வாயைக் கிழித்திந்த வாய்ச்சினாற்
கன்ன சந்தங்களி நிற்கவி யாப்பைக் கடாவுவனே. (26)

ஒட்டக்கூத்தன் வினா

பிறர் சொன்ன சந்தக்கவியை எல்லாரும் சொல்லுவர். நீ பாடிக் கொண்டுவந்த கவி ஏது?

தச்சன் விடை

என்னை எதிர்த்தவரை, அவர் பாடிய வண்ணச் சந்தம் கெட அவர் வாயைக் கிழித்து என் பாட்டு என்னும் இந்த வாய்ச்சியினால் 'கன்ன-சந்தம்' களித்தாடி நிற்க, யாப்புக்கவி எதிர்பாட்டாகப் பாடுவேன்.

தட்டான்

திகிரி வட்டக்குடைச் செங்கோ லபயன் செழுஞ்சிலம்பிற்
பகுதி யொட்டக்கூத்த பட்டனை நானப்பணைக் கவியின்
மிகுத வொட்டத்தட்டி விட்டகை யோட்டி லிருக்கிக்குத்திப்
புகுத வொட்டித்தட்டி மேலணுகா வண்ணம் போர்செய்வனே. (27)

சொங்கோல் அபயன் (சோழன்) மலைநாடு இது. ஒட்டக்கூத்தன் பணைக்கவி. அவன் தலைதூக்க முடியாமல் அவனை ஒட்டத் தட்டிவிட்டு என் கையைச் சேர்த்து அவன் தலையில் குட்டி, மீண்டும் அவையில் புகாவண்ணம் போரிடுவேன்.

பாடல் 28,29,30

ஒட்டக்கூத்தனும் புகழேந்தியும்

வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
என்று முதுகுக்கிடான் கவசம்- துன்றும்
வெறியார் தொடைகமழு மீனவர்கோன் கைவேல்
எறியான் புறங்கொடுக்கி னென்று. (28)

வளவன் தன் முதுகில் கவசம் அணிய மாட்டான் _ என்று ஒட்டக்கூத்தர் பாடினார்.

மீனவன் பகைவன் முதுகில் வேல் எய்ய மாட்டான் என்று வளவனுக்குத் தெரியும் என்று புகழேந்தி பாடினார்.



பழியும்புகழு மெவர்க்குமுண்டா மிந்தப்பாரி லுனக்
கழியுஞ்சிலையுங் கயலுமென்றா லகளங்க துங்கா
மொழியும்பொழு தெங்கள்பெண் சக்ரவர்த்தி முகத்திரண்டு
விழியும்புருவமு மாகியந்தோவுனை வெல்கின்றதே. (29)

புகழேந்தி ஒட்டக்கூத்தருக்குச் சொல்கிறார்.
பழியும் புகழும் எல்லாருக்கும் உண்டு.
அளக்க துங்கா 
வில்லையும் மீனையும் நீ வெல்வார் என்றால் உன்னை என் மீனவன் மகள் கண்கள் வெல்லும்.

திக்கு ளெட்டுக்கயந் துக்கமுற்றுத் திடுக்கிட்டலற
மைக்கடற்குட் விட்டோர்க் கிடமாமதுர
இக்குமுற்றிக் கணுச்சற்று விட்டுத் தெறித்திட்ட முத்தைக்
கொக்குமொக்கி விக்கிக்கக்குமச் சோலைக்குறுங் குடியே .(30)

புகழேந்தி பாடுகிறார் 

குறுங்குடி என்பது நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு வைணவத் தலம்.
இதன் அரசன் பாண்டியன். 
இவன் தன் அம்பைக் கடல் நீரில் விட்டான்.
கடல் அலை அவன் காலைத் தழுவி அவன் கட்டுக்குள் அடங்கிற்று.
அவன் பெயர் வடிம்பலம்ப நின்ற பாண்டியன்.
அவன் குறுங்குடி கரும்புச் சாறு முத்து வளம் கொண்டது.

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 261

No comments:

Post a Comment