ஒட்டக்கூத்தர் பிழையான பாடல்களைப் பாடிய புலவர்களைத் தண்டித்தார். அப்படிப்பட்ட புலவர்கள் இருவர் தலைகளை ஒன்றாகச் சேர்த்து முடிச்சுப் போட்டு வெட்டினார்.
இது பாவச்செயல் என்று சேரனும், பாண்டியனும் சோழனுக்கு ஓலை அனுப்பினர்.
அது கண்டு சோழன் சினந்தான். அவர்கள்மீது போர் தொடுக்க முனைந்து சில அடிகள் நடந்தான். அப்போது, ஒட்டக்கூத்தர் ஒரு பாடலைப் பாடி, சோழன் சினத்தைத் தணித்தார். அந்தப் பாடல்:
அற்றையிலும் இற்றைக்கு அகன்றதோ, அல்லாது
குன்று எடுத்து நீ திரித்துக் கொண்டாயோ - என்றும்
அடைந்தாரைத் தாங்கும் அகளங்கா! நீயும்
நடந்தாயோ நால் ஐந்து அடி.
அகளங்கன் எனப் போற்றப்படும் சோழனாக வந்திருப்பவன் திருமால். திருமால் குன்றைக் குடையாகப் பிடித்து மழையிலிருந்து ஆயர்பாடி மக்களைக் காப்பாற்றினார். பெருமழை பெய்ய ஏவிய இந்திரன்மீது அப்போது சினம் கொள்ளவில்லை. அன்று அப்படி நடந்துகொண்ட நீ இன்று சினம் கொண்டு போர் தொடுக்க அடியெடுத்து நடக்கலாமா
இப்படிச் சொல்லி ஒட்டக்கூத்தர் போரை விலக்கினார்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 262
No comments:
Post a Comment