ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் 100 ஆண்டுகள் இடைவெளியில் வாழ்ந்த இருவேறு புலவர்கள்.
இவர்கள் இருவரும் பாடியதாக முடிச்சுப் போட்டுத் தோன்றிய கதைகளும் பாடல்களும் உண்டு.
இங்குத் தரப்பட்டுள்ள பாடல்கள் இரண்டும் அப்படிப்பட்டவை.
வரலாற்று அடிப்படை இல்லாதவை.
வித்தைக்காரன் வேடிக்கை காட்டி மக்களை மகிழ்விப்பது போல, சில புலவர்கள் தமிழில் விளையாட்டுக் காட்டி மக்களை மகிழ்வித்திருக்கிறார்கள்.
சோழன் குலோத்துங்கன் மனைவி கணவனிடம் ஊடல் கொண்டிருந்தாள்.
தன் அந்தப்புர மனைக் கதவைச் சாத்தித் தாளிட்டுக்கொண்டாள்.
அவளது ஊடல் தீரவேண்டும் என்று கருதி அரசன் புலவர் ஒட்டக்கூத்தரை விருந்தாளியாக அழைத்துக்கொண்டு அவளிடம் வந்தான்.
ஒட்டக்கூத்தர் இந்தப் பாடலைப் பாடினார்.
பாடல்
நானே இனி உன்னை வேண்டுவது இல்லை நளினமலர்த்
தேனே கபாடம் திறந்திடு திறவாவிடிலோ
வானேறு அனைய வாள் இரவி குலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்கும் நின் கை இதழாகிய தாமரையே!
பொருள்
தாமரை மலர்த் தேனேகதவைத் திறஎன்று இனி நான் உன்னை வேண்டப்போவது இல்லை.சூரியன் வந்தால் தாமரை மலரும்அதுபோலச் சூரிய குலத்தவன், உன் கணவன் வந்தால் நீ தானே மலர்வாய்உன் கைகள் தானே கதவைத் திறக்கும்.
இப்படிச் சொல்லிப் பாடினார்.
அரசி மேலும் சினம் கொண்டாள்.
ஒட்டக்கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
என்று சொல்லி, கதவில் மற்றுமொரு தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.
அரசன் வறிதே மீண்டான்.
பின்னர் அரசன் புகழேந்திப் புலவருடன் வந்தான்.
புகழேந்தி பாடினார்.
இழை ஒன்று இரண்டு வகிர் செய்த நுண்ணிடை ஏந்திய பொன்
குழை ஒன்று இரண்டு விழி அணங்கே கொண்ட கோபம் தணி
மழை ஒன்று இரண்டு கைப் பாணாபரணன் நின் வாசல் வந்தால்
பிழை ஒன்று இரண்டு பொறாரோ குடியில் பிறந்தவரே!
நூல் போன்ற இடையவளேகாதில் பொன் குழை அணிந்தவளேவிழி இரண்டும் ஒன்றையே பார்ப்பது போல் கணவனோடு ஒன்றுபட்டவளேஇரு கைகளாலும் கொடை வழங்குபவன் உன் கணவன்அவன் உன் வாசலுக்கு வந்தால்அவன் செய்த ஒன்றிரண்டு பிழைகளைநற்குடியில் பிறந்த பெண் பொறுத்துக்கொள்ள மாட்டாளா?
இப்படிக் கெஞ்சும் நயமான பாடலைக் கேட்டதும்,
அரசி
பாண்டியன் மகள்
சோழன் மனைவி
ஊடல் நீங்கி, கதவுகளைத் திறந்து கணவனுக்கு வழி விட்டாள்.
No comments:
Post a Comment