Pages

Friday, 12 September 2025

போட்டிக் கவிதைகள்

வரலாற்று அடிப்படை இல்லாமல் 


புலவர்களை இணைத்து கட்டிவிட்ட கதைகள் தமிழில் பல உள்ளன.  நூல் - தனிப்பாடல் திரட்டு

அந்தக் கதைக்கு என பாடப்பட்ட பாடல்களும் உள்ளன. 

பகைமை போக்கும் திருமண உறவு

ஆட்சியில் செல்வாக்கு பெற மூவேந்தரும் தமக்குள் பகைமை கொண்டிருந்தனர். இந்தப் பகைமையைப் போக்க திருமண உறவுகளை உருவாக்கிக் கொண்டனர்.

செங்குட்டுவனின் தந்தை குடவர் கோமான் செடுஞ்சேரலாதன். 
தாய் சோழன் மணக்கிள்ளி 
மணக்கிள்ளி என்பது பெண்-பெயர்
இவளை ஞாயிற்றுச் சோழன் மகள் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
இது சேரன், சோழன் மகளை மணந்திருந்த சங்ககால வரலாறு. 

பாண்டியன் மகளை குலோத்துங்க சோழன் திருமணம் செய்துகொள்ள விரும்பினான்.

தன் அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தருடன் சென்று பெண் கேட்டான். 

அதைக் கேட்ட பாண்டியன், 
“பாண்டியரைவிடச் சோழரும், 
பாண்டிய நாட்டைவிடச் சோழநாடும் 
எந்தவகையில் சிறந்தது?" 
என வினவினான். 

அதற்கு ஒட்டக்கூத்தர்
இந்தப் பாடலைப் பாடினார். 

பாடல்


கோரத்துக்கு ஒப்போ கனவட்டம் அம்மானே
கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானே
ஆருக்கு வேம்புநிகர் ஆகுமோ அம்மானே
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே
வீரருக்குள் வீரனொரு மீனவனோ அம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே
ஊருக்கு உறந்தைநிகர் கொற்கையோ அம்மானே
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டிநாடு அம்மானே

பாடலின் பொருள்


சோழன் குதிரைக்குப் பெயர் கோரம். 
பாண்டியன் குதிரைக்குப் பெயர் கனவட்டம். 
கோரத்துக்குக் கனவட்டம் ஒப்பாகுமா

காவிரி சோழநாட்டில் பாயும் ஆறு. 
வையை பாண்டிய நாட்டில் பாயும் ஆறு. 
காவிரிக்கு வையை ஒப்பாகுமா
சோழன் அணியும் ஆர் என்னும் ஆத்தி மாலை சிவனுக்கு உரியது. 
பாண்டியன் அணியும் வேம்பு பேய் ஓட்ட உதவுவது. 

சோழன் சூரிய குலத்தவன். 
பாண்டியன் நிலா குலத்தவன். 
நிலா சூரியனுக்கு ஒப்பாகுமா

சோழன் சின்னம் புலி. 
பாண்டியன் சின்னம் மீன். 
மீன் புலிக்கு ஒப்பாகுமா

சோழன் தலைநகர் உறையூர். 
பாண்டியன் தலைநகர் கொற்கை. 
கொற்கை உறையூருக்கு ஒப்பாகுமா
(குலோத்துங்கன் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்)

எனவே பாண்டிநாடு சோழநாட்டுக்கு ஒப்பு ஆகாது
இவ்வாறு ஒட்டக்கூத்தர் பாடினார். 

அவையில் அதனைக் கேட்டுக்கொண்டிருந்த பாண்டியனின் அவைக்களப் புலவர் புகழேந்தி ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடினார்.

பாடல்


ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளித்தது அம்மானே
ஒப்பரிய திருவிளையாட்டு உறைந்தையிலோ அம்மானே
திருநெடுமால் அவதாரம் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவை பரந்ததுவும் சோழன் பதந்தனையோ அம்மானே
பாண்டியனார் பராகிரமம் பகர்வறிதே அம்மானே

பாடலின் பொருள்


தமிழ்முனிவன் அகத்தியன் தங்கியது சோழநாட்டு நேரிமலையிலா? 
பாண்டிய நாட்டுப் பொதியமலையில் அல்லவா? 

சிவன் திருவிளையாடல் சோழனின் உறையூரிலா நடந்தது? 
பாண்டிநாட்டு மதுரையில் அல்லவா நடந்தது? 

திருமால் சோழனின் புலி உருவம் கொண்டா தோன்றினார்? 
பாண்டியனின் மீன் உருவம் கொண்டல்லவா தோன்றினார்? 

சிவன் முடியில் ஏறுவது சோழனின் சூரியனா? 
பாண்டியனின் சந்திரனா? 

சம்பந்தர் எழுதிய தமிழ்-ஏடு வெள்ளத்தை எதிர்த்துச் சென்றது சோழனின் காவிரி ஆற்றிலா? 
பாண்டியனின் வையை ஆற்றில் அல்லவா? 

பாண்டியன் வேம்பு போல் சோழனின் ஆத்தி பேய்களை ஓட்டுமா? 

கடலலை வடிம்பலம்ப நின்ற பாண்டியன் அடிகளை அல்லவா விட்டு விலகிச் சென்றது? 
சோழனின் அடிகளையா? 

இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்தால் பாண்டியனின் வலிமையை அளவிட முடியுமா?  

சீதனம்


இந்த வாதங்களைக் கேட்ட பாண்டியன் தன் மகளைச் சோழனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். 

அத்துடன் புகழேந்திப் புலவரையும் தன் மகளுடன் சோழன் அவைக்கு அனுப்பிவைத்தான். 

No comments:

Post a Comment