பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு 1
மணிவண்ணா! உன் செவ்விய அடி காட்சி எங்களுக்குக் காப்பாக அமைய, நீ பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் எங்களுக்காக வாழவேண்டும்.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. 2
அடியோமும் நீயும் பிரிவின்றி வாழவேண்டும். உன் வல-மார்பில் உறையும் மங்கையும், உன் வலக்கை ஆழியும், இடக்கை சங்கும் எங்களோடு பிரிவின்றி வாழவேண்டும்.
வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 3
வாழ்வையெல்லாம் மணிவண்ணனுக்கு ஆட்படுத்திக்கொண்டு நிற்பவர் உள்ளீரேல் வந்து அவன் திருமண்ணை உம் நெற்றியில் ஏற்றுக்கொள்ளுங்கள். சோற்றுக்காக வாழ்பவர்கள் எங்கள் குழுவில் சேர நாங்கள் விடமாட்டோம். இப்படி ஏழு தலைமுறை பழிப்பு இல்லாமல் வாழ்கிறோம். இராக்கதர் வாழ் இலங்கை பாழாகப் போரிட்டவனுக்கு வாழ்த்து கூறுவோம்.
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனமுடையீர்கள் வரம்(பு) ஒழிவந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்(கு)அறிய நமோநாராயணாய என்று
பாடும் மனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே. 4
நூல் ஏடுகளை நிலத்தில் வைப்பதற்கு முன்னர் எங்கள் குழுவில் சேரும் விருப்பம் கொண்டவர்கள் காலம் கடத்தாமல் வந்து சேர்ந்துகொள்ளுங்கள். நமோநாராயணாய என்று பாடும் மனமுடையீர்! வந்து பல்லாண்டு கூறி வாழ்த்துங்கள்.
அண்டக் குலத்துக்(கு) அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர். வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே. 5
இடையர் குலத் தலைவன், அரக்கர் குலத்தைக் களைந்தவன், - குலத்தில் உள்ளவர்களே! தொழுது அவன் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சொல்லி வாழ்த்துங்கள்.
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே. 6
- யான்
- என் தந்தை
- அவர் தந்தை
- அவர் தந்தையின் தந்தை
- அந்தத் தந்தையின் தந்தை
- அவன் அப்பன்
- அவன் மூத்த அப்பன் - என்று 7 கால்வழியில் வந்தவர்கள் ஆட்பட்டு உனக்குத் தொண்டு செய்கின்றோம். திரு ஓணத் திருநாளில் அரி உருவில் இரணியனை அழித்தவனுக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்துங்கள்.
தீயின் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 7
சூரியனைச் சக்கரமாகக் கொண்டவனுக்கு குடி குடியாக அடிமைப்பட்டுத் தொண்டு செய்கின்றோம். மாயப்போர் செய்த 1000 தோள் வாணனைக் கொன்றவனுக்குப் பல்லாண்டு கூறுங்கள்.
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. 8
நெய்ச்சோறு, சேவகருடன் கூடிய அரச போகம், வெற்றிலை-பாக்கு, கழுத்துக்குப் பூண்-அணி, காதுக்குக் குண்டலம், மார்புக்குச் சந்தனம், - என்னை வெள்ளை உயிராக வளர்த்துவரும், நாகத்தின் பகையாகிய கருடனைக் கொடியாகக் கொண்டவனுக்குப் பல்லாண்டு கூறுங்கள்.
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 9
மணிவண்ணன் உடுத்திக் களைந்த ஆடையை உடுத்திக்கொள்கின்றோம். அவனுக்கும் படைத்த உணவை உண்கிறோம். அவனுக்கு அணிவித்த துளசி மாலையைச் சூடிக்கொள்கிறோம். திசைதோறும் அவனுக்குத் தொண்டு செய்கிறோம். திருவோண நன்னாளில் அவனுக்குப் பல்லாண்டு கூறுவோம்.
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்ததுகாண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலை பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 10
எந்த நாளில் உனக்கு அடியோம் என்று எழுதப்பட்டோமோ, அன்றே உன் வீடு பேற்றினை அடைந்து உய்ந்தோம். வடமதுரையில் அம்பு எய்து அரவின் தலையில் பாய்ந்தவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்.
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோநாராயணா என்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. 11
திருக்கோட்டியூர் அரசன் அபிமான துங்கன் செல்வன் போல், திருமாலே! நானும் உனக்குப் பழமையான அடியவன். நமோநாராயணா என்று உன்னைப் பரவி உனக்குப் பல்லாண்டு கூறுவேன்.
பல்லாண்டு என்று பவித்திரனைப்ப ரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோநாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே. 12
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார் பாடியது
திருக்கோட்டியூர் அரசன் அபிமான துங்கன் பெரியாழ்வாரைப் பேணியவன்.
ReplyDelete