வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே. 1
பிறந்த குழந்தை கண்ணனுக்குப் பூசிய எண்ணெயும், சுண்ணப் பொடியும் அவன் பிறந்த வீட்டு முற்றத்தில் கலந்து வழிந்தன
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. 2
நம்பி எங்கு இருக்கிறான் என்று காணத் தடுமாறிக்கொண்டு ஓடினர். பறை முழக்கிக்கொண்டு பாடினர்
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேர் இல்லைகாண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே. 3
கண்டவர்கள் இவனைப் போன்ற ஆண்மகன் இல்லை, திரு ஓண நாளில் பிறந்த இவன் அரசாளும் - என்று பேசிக்கொண்டனர்
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென்கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4
ஆய்பாடி மகளிர் உறியை முற்றத்துக்குத் தூக்கிக்கொண்டு ஓடி அதிலிருந்த நெய், பால், தயிர் ஆகியவற்றைத் தூவினர். கூந்தல் அவிழ ஆடிப் பாடினர்.
கொண்ட தாளுறி கோலக் கொடுமழு
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார். 5
உறி, மழு, தண்டு, ஓலை கொண்டு உறங்கியவர் தம் முல்லை போன்ற பல்லைக் காட்டிக்கொண்டும் ஒருவரோடொருவர் முண்டிக்கொண்டும் புகுந்து அவன் மேல் நெய் ஊற்றினர்.
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே. 6
அவன் கையையும் காலையும் நிமிர்த்தி நீராட்டிய மகளிர், மஞ்சள் தடவி அவன் நாக்கை வழிக்கும்போது, அவன் வாய்க்குள் 7 உலகினையும் கண்டனர்.
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே. 7
வாயில் உலகைக் கண்டவர் இவன் ஆயர் மகன் அல்லன், மாயன் என எண்ணி மகிழ்ந்தனர்.
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே. 8
12 ஆம் நாள் குழந்தையைத் துணித்தொட்டிலில் இட்டு ஆட்டி மகிழ்ந்தனர்.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய். 9
அப்போது அவன் தொட்டில் கிழிய உதைத்தான். தூக்கின் இடுப்பை நெரித்தான்.
செந்நெல் ஆர்வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே. 10
பெரியாழ்வார் திருமொழி - பத்து 2
No comments:
Post a Comment