சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவள வாயீர்! வந்து காணீரே. 1
தன் பாதத்தைத் தனே சுவைத்து உண்ணும் - பாத கமலம்
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்து காணீரே. 2
முத்து, பவளம், வயிரம், பொன் பதித்தது போன்ற - கால் விரல் 10
பணைத்தோள் இளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக் காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர்! வந்து காணீரே. 3
ஆய்ச்சி பால் உண்டவனின் வெள்ளிக் காப்பு அணிந்த - கணைக்கால்
உழந்தாள் நறுநெய் ஓரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந் தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
முகிழ் முலையீர். வந்து காணீரே. 4
கடையும் மத்தில் சுற்றிய பழங்கயிற்றால் அடிக்க வரும்போது பயந்து தவழ்ந்து ஓடிய - முழந்தாள்
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறங்கொள் இரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குவளை வந்து காணீரே
குவிமுலையீர்! வந்து காணீரே. 5
பேய்ச்சி முலைப்பால் உண்டு மயங்கியவன் போலக் கிடந்தவன் இரணியனைக் கிடத்திக் கிழித்த - தொடை
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர்! வந்து காணீரே. 6
தேவகி வயிற்றில் தோன்றியவனின் - முத்தம் (ஆணுறுப்பு)
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடு பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
வாணுதலீர்! வந்து காணீரே. 7
களிற்றைக் கட்டி இழுக்கும் - இடை
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளியிழையீர்! வந்து காணீரே. 8
போராளிகளைப் பிடித்து யானை போல் தூக்கி எறிந்து விளையாடும் - உந்தி
அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்த
பதரப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர்! வந்து காணீரே. 9
ஆய்ச்சியர் பாலை வஞ்சித்து உண்டதற்காக அசோதை பழங்கயிற்றால் கட்டிவைத்த - வயிறு
பெருமா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே
சேயிழையீர்! வந்து காணீரே. 10
உரலில் கட்டிவைத்தபோது, அதனை இழுத்துச் சென்று இரண்டு மருத மரங்களைச் சாய்த்த - மார்பு
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே
சுரிகுழலீர்! வந்து காணீரே. 11
20 மாதப் பிள்ளையாக இருக்குபோது தேர்ச் சக்கரமாக உருண்டு வந்த அரக்கனை அழித்த - தோள்
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே
கனங்குழையீர்! வந்து காணீரே. 12
யசோதை வளர்க்கும் பிள்ளையிடம் சங்கு, சக்கம் தோன்றும் - கைகள்
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர்! வந்து காணீரே. 13
அண்டம், நாடு அனைத்தும் விழுங்கிய - தொண்டை
எந்தொண்டைவாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச்
செந்தொண்டைவாய் வந்து காணீரே
சேயிழையீர்! வந்து காணீரே. 14
ஆய்ச்சியர் எடுத்தணைத்து ஊட்டப் பால் உண்ணும் - வாய்
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே
மொய்குழலீர்! வந்து காணீரே. 15
அசோதை மஞ்சளால் நாக்கு வழிக்கும்போது தோன்றும் - கண், வாய் முறுவல், மூக்கு
விண்கொள் அமரர்கள் வேதனை தீர முன்
மண்கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து
திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே
கனவளையீர்! வந்து காணீரே. 16
வாசுதேவர் மகனாகப் பிறந்து, அசுரரைத் தேய்க்க வளர்கின்றவன் - கண்கள்
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணிவண்ணன்
புருவம் இருந்தவா காணீரே
பூண்முலையீர்! வந்து காணீரே. 17
தேவகி பெற்ற மணிவண்ணனின் பருவம் நிறம்பாத - புருவம்
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே
சேயிழையீர்! வந்து காணீரே. 18
உலகு உண்ட பிள்ளையின் - மகரக்குழை தொங்கும் காது
முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களை
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே
நேரிழையீர்! வந்து காணீரே. 19
முறம், தூதை, பூவை வைத்துக்கொண்டு சிற்றில் விளையாடும் பாவையரின் பொருள்களைப் பறித்துக்கொண்டு ஓடும் - நெற்றி
அழகிய பைம்பொன்னின்கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் அர்ப்ப
மழகன்று இனங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே
குவிமுலையீர்! வந்து காணீரே. 20
மாடு மேய்க்கும் மணிவண்ணன் - குழல் (தலைமுடி)
ஆகிவற்றைக் காணுமாறு தோழியர் ஒருவரை ஒருவர் அழைப்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன
திருப் பாதகேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே. 21
திருமொழி 1-3
பெரியாழ்வார் பாடியது
No comments:
Post a Comment