தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான்
கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான். 1
கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர் கட்டி
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான். 2
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
ஆயர்கள் ஏறு என் புறம் புல்குவான். 3
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகித் தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான்
உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான். 4
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண்பல செய்த கருந்தழைக் காவின் கீழ்
பண்பல பாடிப் பல்லாண்டு இசைப்பப் பண்டு
மண்பல கொண்டான் புறம் புல்குவான்
வாமனன் என்னைப் புறம் புல்குவான். 5
சத்திரம் ஏந்தித் தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட
பத்திரா காரன் புறம் புல்குவான்
பார் அளந்தான் என் புறம் புல்குவான். 6
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேலேறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
ஆழியான் என்னைப் புறம் புல்குவான். 7
மூத்தவை காண முதுமணல் குன்று ஏறி
கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான். 8
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவது என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான்
உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான். 9
தரவு கொச்சகக்கலிப்பா
ஆய்ச்சி அன்று ஆழிப்பிரான் புறம் புல்கிய
வேய்த் தடந்தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே. 10
பெரியாழ்வார் திருமொழி 1-10
புறம்புல்கல்
No comments:
Post a Comment