பன்னிரு நாமம் (பெயர்) : காது குத்துதல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
போய்ப்படு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்
பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்வண்ணா. உன்னைத்
தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே.
கேசவ நம்பீ. உன்னைக் காது குத்த
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்
அடைக்காய் திருத்தி நான் வைத்தேன். 1
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி
மலர்ப் பாதக் கிங்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத
நாராயணா. இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே. திரியை
எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகுடைய
கனகக் கடிப்பும் இவையா. 2
வையமெல்லாம் பெறுவம் வார்கடல் வாழும்
மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன்
நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய
ஒண்சுடர் ஆயர் கொழுந்தே.
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து
மாதவனே. இங்கே வாராய். 3
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு
வார் காது தாழப் பெருக்கி
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்
கோவிந்தா. நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்
இனிய பலாப்பழம் தந்து
சுண நன்று அணிமுலை உண்ணத் தருவன் நான்
சோத்தம்பிரான். இங்கே வாராய். 4
சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய்
சுரி குழலாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்
குணம் கொண்டிடுவனோ? நம்பீ.
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்
பிரானே திரியிட ஒட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல்
விட்டுவே. நீ இங்கே வாராய். 5
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்.
உன் வாயில் விரும்பியதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி
மதுசூதனே என்று இருந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காதும் அறியும்
பொறுத்து இறைப்போது இரு நம்பீ.
கண்ணா. என் கார்முகிலே.
கடல்வண்ணா. காவலனே. முலையுணாயே. 6
முலையேதும் வேண்டேன் என்று ஓடி
நின் காதில் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்துப்
பசுநிரை மேய்த்தாய்.
சிலை ஒன்று இறுத்தாய். திரிவிக்கிரமா.
திரு ஆயர்பாடிப் பிரானே.
தலை நிலாப்போதே உன் காதைப் பெருக்காதே
விட்டிட்டேன் குற்றமே அன்றே. 7
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டாகாண்
என்னை நான் மண்ணுண்டேன் ஆக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்
அனைவர்க்கும் காட்டிற்று இலையே
வன் புற்று அரவின் பகைக்கொடி வாமன நம்பீ.
உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே.
திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே. 8
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்
காணவே கட்டிற்றிலையே?
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்
சிரீதரா. உன் காது தூரும்
கையில் திரியை இடுகிடாய் இந்நின்ற
காரிகையார் சிரியாமே. 9
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்?
காதுகள் வீங்கி யெறியில்
தாரியாது ஆகில் தலை நொந்திடும் என்று
விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது
பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
இருடீகேசா என்தன் கண்ணே. 10
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்
கடிகமழ் பூங் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்
பெருமானே. எங்கள் அமுதே.
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும்
நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட
பற்பநாபா. இங்கே வாராய். 11
வா என்று சொல்லி என் கையைப் பிடித்து
வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்றென்?
காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற்பழம் கொண்டு வைத்தேன்
இவை காணாய் நம்பீ முன் வஞ்சமகளைச்
சாவப்பாலுண்டுசகடு இறப் பாய்ந்திட்ட
தாமோதரா. இங்கே வாராய். 12
வார் காது தாழப் பெருக்கி அமைத்து
மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல்
சிந்தையுள் நின்று திகழப்
பாரார் தொல்புகழான்புதுவை மன்னன்
பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார்
அச்சுதனுக்கு அடியாரே. 13
பெரியாழ்வார் திருமொழி 2-3
![]() |
நாராயணன் காதணி கடிப்பு காது குத்தி வளர்த்தது |
No comments:
Post a Comment