கண்ணனை முலையுண்ண அழைத்தல்
கலிவிருத்தம்
அரவணையாய். ஆயர் ஏறே. அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்று முச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வனமுலைகள் சோர்ந்து பாயத்
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்து உதைத்துப் பருகிடாயே. 1
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்கு உறுஞ்சி முலை உணாயே. 2
தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்
வந்து நின்மேல் பூசல் செய்ய வாழவல்ல வாசுதேவா.
உந்தையர் உம் திறத்தர் அல்லர் உன்னை நான் ஒன்று உரப்ப மாட்டேன்
நந்தகோபன் அணிசிறுவா. நான் சுரந்த முலை உணாயே. 3
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி அன்ன மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடும் என்று
அஞ்சினேன்காண் அமரர் கோவே. ஆயர் கூட்டத்து அளவன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4
தீய புந்திக் கஞ்சன் உன்மேல் சினமுடையன், சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா.
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போகவேண்டா
ஆயர்பாடிக்கு அணிவிளக்கே. அமர்ந்து வந்து என் முலையுணாயே. 5
மின் அனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய். உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா. முலை உணாயே. 6
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப் பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டி
கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தா. நீ முலையுணாயே. 7
இரு மலைபோல் எதிர்ந்த மல்லர் இருவரங்கம் எரிசெய்தாய். உன்
திரு மலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே. 8
அங்கமலப் போதகத்தில் அணிகொள் முத்தம் சிந்தினாற் போல்
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்து ஊடே
அங்கமெல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம. விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே. முலையுணாயே. 9
ஓட ஓடக் கிங்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
ஓடி ஓடிப் போய்விடாதே உத்தமா. நீ முலையுணாயே. 10
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா. உண் என்ற மாற்றம்
நீர் அணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர்
பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார்
சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே. 11
பெரியாழ்வார் திருமொழி 2-2
முலையுண்ண அழைத்தல்
No comments:
Post a Comment