Pages

Thursday, 17 November 2016

சிலப்பதிகாரம் Silappatikaram 1-5

1 \ மங்கல வாழ்த்துப் பாடல் \ திருமணத்தை வாழ்த்தும் பாடல் \ கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம்

கோவலன் பெற்றோரும், கண்ணகி பெற்றோரும் பெருமைக்குரிய ஒரு நாளில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்துவைக்க விரும்பினர். யானையின் மேல் கண்ணகியை மகளிருடன் ஊரறிய அழைத்துவந்து திருமணம் செய்தனர்.
அப்போது,
முரசு, முருடு, சங்கு ஆகியன முழங்க வெண்கொற்றக் குடையுடன் அரசன் வருவது போல தெருவில் மங்கல அணிவகுப்பு வந்தது. மணமேடை வயிர மணித்தூணின் உச்சியில் மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. முத்துப்பந்தலின் கீழ் திருமணம் நடைபெற்றது. நிறைமதியும் உரோகினி மீனும் வானத்தில் கூடிவரும் நாளில் பெரிதும் முதிர்ந்த பார்ப்பான் மறை ஓதி வழிகாட்டிட, சாலி என்றும் அருந்ததி என்றும் கூறப்படும் வடமீனாகிய துருவமீன் போன்ற கற்புடைய கண்ணகியைக் கைப்பற்றிக்கொண்டு கோவலன் திருமண வேள்வித் தீயைச் சுற்றி வலம் வந்தான். இந்தக் காட்சியைக் கண்டவர்கள் எத்தகைய தவம் செய்தவர்களோ அறியேன். (இளங்கோ கூற்று)
மணம் தெளிப்போர், மலர் தூவுவோர், ஒளிவீசும் மேனியர், வாழ்த்துரைப்போர், மங்ககலம் பாடுவோர், ஓரக்கண்ணால் பார்ப்போர், சந்தனம் பூசுவோர், நறுமணம் புகைப்போர், மாலை சூடிய மகளிர், ஏந்துமுலை கொண்ட இள மகளிர், மணப்பொடி வீசுவோர், விளக்குடன் செல்வோர், அணிகலன் சுமப்போர், முளைப் பாலிகைத் தட்டு சுமப்போர், முளைப்பாலிகைக் குடம் சுமப்போர், புன்முறுவல் காட்டுவோர், கூந்தலில் பூ முடித்த பொற்கொடி போன்றோர், முதலான பலரும் ஒன்றுகூடி, கண்ணகியை அழைத்துச் சென்று முதலிரவு திருமண மெத்தை மேல் ஏற்றினர். “காதலர் பிரியாமல், கவ்வி அணைத்த கை நெகிழாமல், தீதின்றி வாழ்வீர்களாகுக” என்று வாழ்த்தி, மெத்தையில் ஏற்றினர்.

பாடல் \ மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

அவரை
இரு பெரும் குரவரும் ஒரு பெரு நாளால்
மண அணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ
மா நகர்க்கு ஈந்தார் மணம்.
அவ் வழி
முரசு இயம்பின, முருடு அதிர்ந்தன,முறை எழுந்தன பணிலம்,வெண் குடை
அரசு எழுந்ததொர் படி எழுந்தன,அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து
நீல விதானத்து நித்திலம் பூம் பந்தர் கீழ்
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச்  
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்      
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளை குடம் நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரி கூந்தல் பொலன் நறு கொடி அன்னார்       
காதலன் பிரியாமல்  கவவு கை ஞெகிழாமல்
தீது அறுக என ஏத்திச் சில மலர் கொடு தூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய


கி. பி. இரண்டாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் பாடல்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டும் திருமணம் 

No comments:

Post a Comment