Pages

Tuesday, 15 November 2016

நற்றிணை Natrinai 203

வெண்பூத் தாழை


முழங்கி மோதும் நீரலை கொழித்து வைத்திருக்கும் மணல் படிவில் அகன்ற வேர்களும், முள்ளும் கொண்ட தாழை மரம் யானைத் தந்தம் நீண்டிருப்பது போல நீண்ட வடிவில் பூத்து, மோதும் அலையால் அதன் மகரந்தப் பொடிகள் பொட்டுவதால் சிறுகுடியின் தெருவெல்லாம் மீன் கவிச்சல் இல்லாமல் தாழை மணம் கமழும் ஊரிலுள்ள கானல் பூங்காவில் அவரோடு உன் காதல் தோன்றியது. 

ஒரு நாள் பிரிந்தாலும் உயிர் வாழ முடியாது என்ற நிலையில் அது வளர்ந்துள்ளது. 

விரைந்து வரும் குதிரை பூட்டிய தேர் அங்கே நிற்கிறது. 

அது செய்த தவறுக்கு ஊர் இட்டுக்கட்டிப் பேசுகிறது.

இவ்வாறு தோழி தலைவியிடம் சொல்கிறாள். 

அதனைக் கேட்டுக்கொண்டிருக்கும் தலைவன் தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு,    5
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும்,   10
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.
உலோச்சனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


தாழை

No comments:

Post a Comment