Pages

Sunday, 20 November 2016

சங்கப்பாடலில் சிலப்பதிகாரக் கண்ணகி History of Kannagi in Sangam literature

மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் தம் பாடல் ஒன்றில் (நற்றிணை 216) கண்ணகி தன் முலை ஒன்றை அறுத்து எறிந்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.

எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,           
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.  – நற்றிணை 216

எரியும் தீயைப் போல் மலரும் வேங்கை மரத் தெய்வம் முருகன் காப்பதும், மாதவிக் கொடி நிறைந்ததுமான மலைப் பகுதி வயலில் தினைப்புனம் காக்கும் பரண் பந்தல் மேல் ஏறி நின்றுகொண்டு, எந்த வகையிலும் தனக்கு உறவினன் அல்லாத பாண்டிய அரசன் தனக்கு இழைத்த கவலை கலக்க, தன் ஒரு முலையை அறுத்து எறிந்த கண்ணகி வரலாற்றைக் கேட்டிருந்தாலும், கோவலன் போல வாழாமல், விருப்பமுடன் சேர்ந்து வாழ்பவரே இனியவர். அல்லாத பிறர் எனக்கு இனியவர் ஆகாதவர் – என்று மாதவி போன்ற ஒரு கணிகை கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.

இந்தச் செய்தியைச் சிலப்பதிகாரம் இப்படிக் குறிப்பிடுகிறது.

செங்குட்டுவன் அரசுச் சுற்றத்துடன் மலைவளம் கண்டுகொண்டிருக்கிறான். மலைக்குறவர் அரசனுக்கு யானைத்தந்தம், அகில், கவரிமான் மயிர் முதலான பலவற்றைக் கொண்டுவந்து காணிக்கையாகத் தருகின்றனர். ஒரு செய்தியும் சொல்லுகின்றனர்.

“ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து தனித் துயர் எய்தி
வானவர் போற்ற மண்ணொடும் கூடி
வானகம் போற்ற வானகம் சென்றனள்
எந்நாட்டாள் கொல், யார் மகள் கொல்லோ
நின் நாட்டு ஆங்கண் நினைப்பினும் அறியோம்
பன் நூறு ஆயிரத்து ஆண்டு வாழி” – சிலப்பதிகாரம் காட்சிக்காதை

முலை இழந்து வேங்கை மழத்தடியில் நின்ற ஒரு பெண் மண்ணவரும் வானவரும் போற்ற வானகம் சென்றாள் என்று மலைக்குறவர் கூறுவதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

இப்படி மலைக்குறவர் சொன்னதைக் கேட்ட புலவர் சாத்தனார் ஒருமுலை இழந்த கண்ணகி வரவாற்றைக் கூறுகிறார். செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைக்கிறான். இளங்கோ கண்ணகிக்குச் சிலப்பதிகாரம் பாடுகிறார். “கண்ணகி மகள்” என்று தன் மகளைக் குறிப்பிடும் மணிமேகலைக்கு “மணிமேகலை” காப்பியத்தைச் சாத்தனார் பாடுகிறார்.

இதனால் கண்ணகி வரலாற்று நிகழ்வு சங்ககாலத்துக்கு முந்தையது என்பதை அறியலாம்.

No comments:

Post a Comment