Pages

Monday, 14 November 2016

அகநானூறு Agananuru 400

மணமகன் ஊர்வலம்


திருமணம் செய்துகொள்ளத் தலைவன் வருவதைப் பார்த்துத் தோழி தலைவியிடம் சொல்கிறாள். களவுக் காலத்தில் அலர் தூற்றிய ஊர் இன்று புதுமையாகக் காணப்படுவதைப் பார்த்து எனக்குச் சிரிப்பே வருகிறது.

நகை நன்று அம்ம தானே  = 
சிரிப்பு, தானே வருகிறது, அம்மம்ம!

''அவனொடு, மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து, = 
வீட்டு மனையைக் கடந்து அவனோடு தங்கினாலும் அலர் தூற்றுவர் என்று அவன் திருமணம் செய்கொள்ளும் விருப்பத்தோடு வருகிறான்.

கானல் அல்கிய நம் களவு அகல, = 
கடற்கரைப் பூங்காவில் தங்கி களவு உறவு கொண்ட பாங்கு நீங்க

பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, = 
நல்வினைகள் பல புரிந்த்தன் விளைவாக வருகிறான்

நூல் அமை பிறப்பின்,  = 
குதிரை நூல் கூறும் வனப்பமைதியுடன் பிறந்திருக்கும்

நீல உத்தி, = 
நீல நிறச் சுழி கொண்ட

கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி, = 
கொய்யப்பட்ட மயிர் பிடரியில் கொத்தாகப் பெருகியிருக்கும் குதிரை

நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை = 
நெய்யில் பிணைந்த சோற்றை வேண்டாம் என்று வெறுக்கும் அளவுக்கு ஆர உண்டு

நிரல் இயைந்து ஒன்றிய செலவின், = 
நிரலாக இயைந்து ஒருமித்த நடையில் பாய்ந்து செல்லும்

செந் தினைக் குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, = 
செந்தினைக் கதிர் போல் தலை கொண்ட

நல் நான்கு வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, = 
நல்ல நான்கு குதிரைகளின் பிடரியில் சலங்கை ஒலிக்கும்படி நுகத்தைப் பூட்டி

பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, = 
பல பொறியியல் கருவிகள் ஒலிக்கும்படி பூட்டி

மதியுடை வலவன் ஏவலின், = 
அறிவுத் திறத்தோடு தேரோட்டி தேரை ஓட்ட

இகு துறைப் புனல் பாய்ந்தன்ன  = 
கரை உடையும்படி வெள்ளம் பாய்வது போல

வாம் மான் திண் தேர்க் = 
தாவிப் பாயும் குதிரை பூட்டிய வலிமை மிக்க தேர்

கணை கழிந்தன்ன  = 
அம்பு பாய்வது போல

நோன் கால் வண் பரி, = 
வலிமை மிக்க கால் பாயும் வளமான குதிரை

பால் கண்டன்ன ஊதை வெண் மணல், = 
குளிரும் ஊதைக் காற்றால் குவிக்கப்பட்டுப் பால் போல் தோன்றும் மணல்

கால் கண்டன்ன வழி படப் போகி, = 
காற்றுப் பாய்வது போல வழி கெடுமாறு செல்ல 

அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண், = 
மணல் சேறும் பள்ளமுமாகக் கிடக்கும் நெய்தல் நிலச் சோலையில்

இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி,  = 
இருள் போல் தோன்றும் நீர் மண் இட்டுக் கிடக்கும் மணல் வெளியைக் கடந்து

துறை கெழு மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, = 
நீர்த்துறையோடு கூடிய மென்மையான கடல்சார் நிலத் தலைவன் வந்தபோது

பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, = 
பூ மலிந்திருக்கும் கடல்துறையில் அடந்துகிடக்கும் தழையுடன்

நேமி தந்த நெடுநீர் நெய்தல் = 
சக்கரம் போல வட்டமாக அமைந்த நீரில் பூத்திருக்கும் நெய்தல்

விளையா இளங் கள் நாற,  = 
முற்றாத இளந்தேன் மணக்க

பலவுடன் பொதி அவிழ் தண் மலர் கண்டும்,  = 
பலவாக மொட்டு விரியக் காண்கிறோம்.

நன்றும் புதுவது ஆகின்று  = 
பெரிதும் புதிதாகத் திகழ்கிறது

அம்ம  = 
அம்மம்ம

பழ விறல், பாடு எழுந்து இரங்கு முந்நீர், = 
பழம் பெருமைகளுடன் பாட்டுப் பாடி ஒலிக்கும் கடலும்

நீடு இரும் பெண்ணை,  = 
ஓங்கி உயர்ந்த பனைமரமும் கொண்ட

நம் அழுங்கல் ஊரே! = 
அழுங்கி அமைதியுடன் கிடக்கும் நம் ஊர். 
(புதிதாக ஆரவாரத்துடன் திகழ்கிறது)
 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  நெய்தல்

நகை நன்று அம்ம தானே ''அவனொடு,
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து,
கானல் அல்கிய நம் களவு அகல,
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை,
நூல் அமை பிறப்பின், நீல உத்தி,            5
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி,
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக்
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ,                  10
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி,
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப்
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க்
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி,
பால் கண்டன்ன ஊதை வெண் மணல்,             15
கால் கண்டன்ன வழி படப் போகி,
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்,
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை,
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு,         20
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங் கள் நாற, பலவுடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்,
பாடு எழுந்து இரங்கு முந்நீர்,        25
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே!

தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது.
உலோச்சனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

Clandestine love ends. 
He is coming to marry her. 
The friend-maid says to her lady in pleasure mood.

Please see the village in gay. 
Once it was murmuring about our clandestine relation. 
When we remember the past, laughter bursts.
You enjoyed him in a park. 
He is coming to marry you in his chariot pulling by four white horses. 
It is coming in sand-mud near the lagoon in which water lilies around wheel-like leaves in dark color. 
That is the result of your good deeds.

Some points spoken in this poem
  • There was a literature in horse keeping in Tamil.
  • Ghee mixed rice was given to horse to eat.
  • They trimmed the mane of the horse.
  • Four horses pulling chariot is famous.

No comments:

Post a Comment