Pages

Monday, 14 November 2016

நற்றிணை Natrinai 201

பாங்கனே! குறவன் மகள் பெறமுடியாதவள். அவளை நினைகக் கூடாது என்கிறாய். அவள் என் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறாளே, என்ன செய்வேன் என்கிறான், தலைவன்.


மலையில் வாழும் குறவனின் அன்பு மகளாகிய அவள் பெறமுடியாதவள். நுழைய முடியாத கடுமையான கட்டுக்காவலில் இருப்பவள். உன் சொல்லை அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இளையவள். இத்தகையவளை நீ நினைக்கக் கூடாது என்கிறாய்.
என் நிலைமையை நினைத்துப்பார்.
செம்மையான வேர்ப்பலாவின் பயன் மிகுதியாகக் கிடைக்கும் கொல்லிமலையில் தெய்வம் காப்பாற்றிக்கொண்டிருக்கும் தீதற்ற மலைமுகட்டில், அருவி கொட்டும் பகுதியில், மேற்குப்பக்கப் பாறையில், காற்று மோதி இடித்தாலும், கடுமையான சினம் கொண்டு மழை பொழிந்து தாக்கினாலும், இடி தாக்கினாலும், வேறு எந்த வகையான துன்பம் நேர்ந்தாலும், நில நடுக்கம் வந்தாலும், மாயா இயற்கைப் பொலிவுடன் காட்சி தரும் பாவை நிலையாக இருப்பது போல, அவள் என் நெஞ்சை விட்டுப் போகாமல் இருக்கிறாளே. என்ன செய்வேன்?
  
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

''மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது'' என்றோய்! மற்றும்,
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்     5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்  10
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.
பரணர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


கொல்லிப் பாவை \ இக்காலச் சிலை 

No comments:

Post a Comment