Pages

Monday 14 November 2016

அகநானூறு Agananuru 399

“விரைவில் திரும்புவார்” என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

1
மலை உச்சியில் தழைத்திருக்கும் சந்தன மரக் காற்றை உள்வாங்கிக்கொண்டு உன் கூந்தல் இமயமலைக் காடு போல் மணக்கும். நெற்றியும் அப்படித்தான். அரிவைப் பருவத்தவளாகிய உன் மார்பகத்தில் இனிமை ஊறும். இப்படிப்பட்ட உன்னை, தாகத்துக்கு நீர் அருந்துவது போன்ற உள்ளக் காதலோடு, வளைத்துத் தழுவுதல் இல்லாமல் அவர் பொருள் ஈட்டும் அவ்விடத்தில் காலம் நீட்டிக்க மாட்டார்.
2
ஆற்று வழியில் (கடறு) கடப்பாறையால் பறித்த குழியில் உள்ள நீரை மூங்கில் குழாயில் கொண்டுசென்று கோவலர் பருகுவர். அவர்களது ஆனிரைகள், பறித்த குழியில் உள்ள நீரை அருந்தும். பின்னர் கழுத்தில் மணி கட்டியிருக்கும் அந்தப் பசுக்கள் நீரற்ற நிலப்பகுதிக்குச் சென்று மேயும். கோவலர் அவற்றைக் கோலால் தட்டி கொன்றை மரத்தடி அருநிழலுக்கு ஓட்டி வருவர். அங்கு அமர்ந்துகொண்டு மூங்கிலில் செய்த புல்லாங்குழலை ஊதுவர். கற்றுக்கொள்ளாத இசையில் ஊதுவர்.
3
அங்கே பளிங்கு போன்ற தோற்றத்துடன் உதிர்ந்து கிடக்கும் நெல்லிக் காய்களை மேயும் மான்கள் மென்றுகொண்டே புல்லாங்குழல் இசையை உற்றுக் கேட்கும். வெயில் கடுமையாகக் காய்வதால் மூங்கில்கள் வெடித்து அந்தக் கல்லுப்பாதை பொலிவு இழந்து காணப்படும். இத்தகைய மலைப்பகுதி வழியே அவர் சென்றுள்ளார்.
 


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
இமையக் கானம் நாறும் கூந்தல்,
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு,
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார்   5

2
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ,         10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி,

3
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்,                15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
வேய் கண் உடைந்த சிமைய,
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

The friend-maid consoles her lady when she is suffering pondering her lover away in earning wealth.

You, my lady, you are having fragrant hair receiving the air from sandal woods in the forest. 
Your forehead also smells sweet. 
He, your lover away from you will not forget your blessing hug. 
He will not stay there for long time.
He will be passing through the forest where the cow-herd carry water in bamboo vessel to drink, the water from well they dig; the cows with bells in their neck, drink water in the well; grass away in dry-land. 
The cowherd will gather them with his stick under the shadow of Kadukkai tree; play flute music to enjoy them. 
The deer chewing Indian-gooseberry there, will enjoy the flute music. 
There will be so heat that the bamboo plant will flaw in sun heat. 
In such crucial forest he will be crossing.


No comments:

Post a Comment