தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
1
வானம் பொழிந்து, சூடு தணிந்து, நிலம் பதமாக இருக்கும்போது செல்லலாம் என்று விருப்பமுடன் அவருக்குப் பலமுறை சொன்னோம்.
2
புகழ் பெற்ற காட்டுத் தெய்வம் கொற்றவை அருள் புரிந்திருக்கிறாள். குதிரையின் தொன்மையான புகழை நூலாகப் பாடிய நுண்மாண் நுழைபுலம் மிக்க புலவன் வேங்கை மரத்தின் சிறப்பையும் வியந்து போற்றிப் பாடினான். அந்த வேங்கைப் பூவைத் தழையாடைப் பிணையலாக்கி மென்மையாக உயர்ந்து ஏந்தியுள்ள அல்குலில் அணிந்து மகிழ்ந்து சில நாட்களைக் கழிக்கலாம் என்று அவர் நம்மிடம் சொன்னார். ஆயினும் அவர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை.
3
தோழி!
அவர் செல்லும்போது, அவரைத் தொடர்ந்து செல்லும் வேலேந்திய இளையர் சூடிக்கொள்ளுமாறும், வண்டுகள் மொய்க்குமாறும், மாந்தளிரோடு மாம்பூக்கள் பூத்துக் குலுங்க வேண்டும். மழை பொழிந்து நின்ற பின்னர் (உறை கழிந்து) அருவி நீரின் திவலைகள் பட்டு கருமையான கிளையில் நுணாப் பூக்கள் பூத்துக் குலுங்க வேண்டும். அவை செந்நிற மணலில் உதிர்ந்து காடே ‘கம்’ என்று மணக்க வேண்டும்.
4
ஆட்டிவைக்கும் காற்றுக்கு அடக்கமாக அவர் இற்றி மர நிழலில், அதன் விழுதுகளுக்கு இடையே ஓய்வு எடுத்துக்கொண்டு செல்லவேண்டும், என்றெல்லாம் வேண்டிக்கொள்வோம்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
1
''விசும்பு தளி பொழிந்து, வெம்மை
நீங்கி,
தண் பதம் படுதல்
செல்க!'' எனப் பல் மாண்
நாம் செல விழைந்தனமாக,
''ஓங்கு புகழ்க்
2
கான் அமர் செல்வி
அருளலின், வெண் கால்,
பல் படைப் புரவி
எய்திய தொல் இசை 5
நுணங்கு நுண் பனுவற்
புலவன் பாடிய
கருங் கால் வேங்கைச்
செம் பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல்
யாம் அணிந்து உவக்கும்
சில் நாள் கழிக!''
என்று முன் நாள் 10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும், தம்மொடு
3
திருந்து வேல் இளையர் சுரும்பு
உண மலைமார்,
மா முறி ஈன்று
மரக் கொம்பு அகைப்ப,
உறை கழிந்து உலந்த
பின்றை, பொறைய
சிறு வெள் அருவித்
துவலையின் மலர்ந்த 15
கருங் கால் நுணவின்
பெருஞ் சினை வான் பூச்
செம் மணற் சிறு
நெறி கம்மென வரிப்ப,
காடு கவின் பெறுக
தோழி! ஆடு வளிக்கு
4
ஒல்கு நிலை இற்றி
ஒரு தனி நெடு வீழ்
கல் கண் சீக்கும்
அத்தம், 20
அல்கு வெயில் நீழல்
அசைந்தனர் செலவே!
தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
குடவாயிற் கீரத்தனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்


No comments:
Post a Comment